Friday, December 2, 2011

ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்! அழகிரி மகன் அதிரடி

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... நான் முதல்வருக்கு ரொம்ப நெருக்கமானவன்... முன்னாள் முதல்வர், தலைவர் கலைஞரைச் சொல்லலை... இந்நாள் முதல்வரைத்தான் சொல்றேன்!''- சஸ்பென்ஸ் வைத்துச் சிரிக்கிறார் துரை தயாநிதி. சன் ஆஃப் அழகிரி!

''ரொம்ப யோசிக்காதீங்க சார்... போயஸ் கார்டன்ல சி.எம். வீட்டுக்குப் பக்கத்துலதான் என் வீடும். அதைத் தான் சொன்னேன்!'' - செம பில்ட்-அப் கொடுத்துச் சிரித்தவர், தயங்கித் தயங்கிக் கேட்ட கேள்விகளுக்குக்கூட மழுப்பாமல், நழுவாமல், தடதடஎனப் பதில் அளித்தார்.

''கல்யாண வாழ்க்கை எப்படிப் போயிட்டு இருக்கு? அனுஷா உங்க குடும்பத்தோட செட் ஆகிட்டாங்களா?''

''கல்யாணத்துக்கு அப்புறம் லைஃப் இஸ் பியூட்டிஃபுல்! எனக்குத் தெரியாத சொந்தங்கள்கூட அனுஷாவுக்குத் தெரியிற அளவுக்கு அட்டாச்டு ஆகிட்டாங்க. 'துரையா இவ்வளவு அழகா குடும்பம் நடத்துறான்’னு குடும்பத்திலும் எல்லாருக்கும் ஆச்சர்யம்தான். எல்லாத்துக்கும் காரணம், அனுஷா. இதையே அவங்ககிட்ட கேட்டா, 'நான்தான் காரணம்’னு சொல்வாங்க. ரொம்ப நல்லா இருக்கோம்.

இப்பவும் நல்லா ஞாபகம் இருக்கு. சும்மா ஒரு ஃப்ரெண்ட் மூலமாத்தான் அனுஷா எனக்கு அறிமுகம். கொஞ்ச நாள் பழக்கத்துலயே அம்மா மாதிரி பிரியமா நடந்துக்கிட்டது பிடிச்சது. கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் குடும்பத்துக்கு நல்லா செட் ஆவாங்கனு தோணுச்சு. ஆனா, அதைப்பத்தி அவங்ககிட்ட எதுவுமே நான் சொல்லலை. ரெண்டு வருஷ ஃப்ரெண்ட்ஷிப்புக்குப் பிறகு, ஒரு நவம்பர் 23-ம் தேதி நான்தான் முதலில் காதலைச் சொன்னேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு 'யெஸ்’ சொன்னாங்க. அது வாழ்க்கையில மறக்கவே முடியாத தருணம். அடுத்த நவம்பர் 18-ல் கல்யாணம். எனக்கு நவம்பர் ரொம்பவே ஸ்பெஷல்!

அனுஷாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் என் அம்மா - அப்பாதான். கட்சிக்காரங்க வருகை, பேச்சுவார்த்தைனு வீட்ல எப்பவும் ஒரு பரபரப்பான சூழல் இருந்துட்டே இருக்கும். அப்போ என் மூலம்தான் அம்மா எந்த விஷயத்தையும் அப்பாகிட்ட சொல்வாங்க. இப்போ அந்தப் பொறுப்பை அனுஷா எடுத்துக்கிட்டாங்க. 'இல்ல மாமா... நீங்க அப்படிப் பேசி இருக்கக் கூடாது’னு ஜஸ்ட் லைக் தட் அப்பாகிட்ட கரெக்ஷன்ஸ் சொல்றாங்க. ஆச்சர்யமா அப்பாவும், 'ஆமாம்ல... நீ சொல்றதுதாம்மா சரி’னு சொல்றார். 'என்னடா நடக்குது இங்கே’னு நான்தான் மலைச்சுப்போய் நிக்கிறேன்!''

''அரசியல், குடும்பம், சினிமா தயாரிப்புனு பரபரப்பான லைஃப் ஸ்டைல். ஆனா, மீடியாக்களிடம் இருந்து ஏன் விலகியே இருக்கீங்க?''

''ஒரு வரியில் பதில் சொல்லணும்னா... நான் எங்க அப்பா மாதிரி. அதனாலதான்! எதையும் பேசிட்டே இருக்கிறதைவிட செஞ்சு முடிச்சிரணும்னு நினைப்பேன். அதே மாதிரி பேசணும்னு நினைச்சா, யாருக்காகவும் எதுக்காகவும் பயப்பட மாட்டேன். மனசுல தோணுறதைப் பேசிட்டுப் போயிட்டே இருப்பேன். அது நம்ம மீடியா சர்க்கிளுக்கு செட் ஆகலை. அவ்வளவுதான்!''


''உங்க அண்ணன் உதயநிதி ஸ்டாலின், தம்பி அருள்நிதி எல்லாம் நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க அவங்களைவெச்சு உங்க பேனர்ல படம் தயாரிப்பீங் களா?''

''நல்ல ஐடியா. ஆனா, ரெண்டு பேரும்தான் ஏற்கெனவே அவங்கவங்க பேனர்ல நடிச்சுட்டு இருக்காங்களே. இப்போதைக்கு உதயா அண்ணனின் ரெட் ஜெயன்ட்தான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் புரொடக்ஷன் கம்பெனி. நல்ல டீம், பக்கா பிளானிங்னு எல்லாத்துலயும் தெளிவா இருக்காங்க. 'மங்காத்தா’வைக்கூட சன்னுக்கு விற்றுக் கொடுத்ததில் அண்ணன் எனக்கு நிறைய உதவி பண்ணார். அவங்க ரெண்டு பேருக்கும் 'ஓ.கே’-ன்னா இப்பவே ரெண்டு பேரையும் வெச்சுப் படம் தயாரிக்க நான் ரெடி!''

''ஓ.கே. உண்மையைச் சொல்லுங்க... அ.தி.மு.க. அரசின் ஆறு மாத கால ஆட்சி எப்படி இருக்கு?''

''இதுல நான் சொல்ல என்ன இருக்கு? அதான் தமிழ்நாடே கொதிப்புல இருக்கே? சமச்சீர்க் கல்வியில் கை வைக்கத் தொடங்கி, இப்போ பால் விலை, பஸ் கட்டண உயர்வுனு வந்து நிக்குது. 'மாற்றம் வேணும்... மாற்றம் வேணும்’னு பக்கம் பக்கமா எழுதினாங்க. 'ஓ... மாற்றம் வேணும்போல இருக்கு’னு மக்களும் நம்பி ஓட்டுப் போட்டாங்க. ஆனா, இந்த அம்மாவோ சமச்சீர்க் கல்வி ரத்து, மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம், தலைமைச் செயலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம், அமைச்சர்கள் - அதிகாரிகள் மாற்றம்னு பரபரப்பா இருக்காங்க. தி.மு.க. ஆட்சியில் சினிமாவுக்குக் கேளிக்கை வரியே கிடையாது. இப்ப நகரத்தில் 30 சதவிகிதம், மற்ற பகுதிகளில் 20 சதவிகி தம்னு வரி போட்டு வாட்டுறாங்க. இது தமிழ் சினிமாவுக்குப் பின்னடைவு இல்லையா? 'சினிமாவை ஆக்கிரமிச்சுட்டாங்க’னு அப்போ எங்களைப் பத்திப் புரளி கிளப்பினவங்க எல்லாம் இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை. இந்தக் கொடுமைகளை நடுநிலையான பத்திரிகை கள், மீடியாக்கள் எழுதத் தொடங்கி இருக்காங்க. அது மட்டும்தான் நல்ல விஷயம்!''

''ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்னு ஏதாவது இருக்கா?''

''
இருக்கே... அந்தத் தைரியம் பிடிக்கும்! தைரியம் இல்லாம யாரும் அந்தப் பதவிக்கு வர முடியாது. ஆனாலும், இந்த அம்மா வுக்குத் தைரியம் கொஞ்சம் அதிகம். தன்னுடைய முடிவில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கிறதும் நல்ல விஷயம்தான். ஆனா, இந்தத் தகுதிகளை எல்லாம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தான் பயன்படுத்துறாங்கனு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு!''

''அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் கட்சித் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவதில் பெரிய போட்டியே நடக்குதுனு சொல்றாங் களே..?''

''ரெண்டு பேரும் சேரக் கூடாதுனு நினைக்கிறவங்கதான் 'போட்டி இருக்கு... போட்டி இருக்கு’னு எழுதிட்டு இருக்காங்க. அதை ஏன் பதவிக்கான போட்டினு சொல்றீங்க? கட்சித் தலைமையிடம் நல்ல பேர் எடுக்க, கட்சியை வளர்க்க ஆரோக்கியமாப் போட்டி போடுறாங்கனு ஏன் நினைக்க மாட்டேங் கிறீங்க? இப்பவும் சித்தப்பா டெல்லி போனா... அப்பாவை வீட்ல சந்திப்பார். அப்பாவும் சென்னை வந்தா, சித்தப்பாவோட சேர்ந்துதான் தலைவரைச் சந்திப்பார். ரெண்டு பேருமே கட்சி தொடர்பான விஷயங்களை அடிக்கடி போன்ல பேசிப்பாங்க. பரபரப்புக்காக மீடியா ஏற்படுத்தும் பிம்பம்தான் ரெண்டு பேருக்கும் இடையிலான போட்டி!''

''மதுரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, நாடாளுமன்றத்தில் பேச மறுப்பது, தென் தமிழ்நாட்டில் தன்னை ஆதரிக்காதவர்களைக் கட்சிக்குள் கட்டம்கட்டுவது என உங்கள் அப்பாவைப் பற்றிய செய்திகள் அனைத்தும் நெகட்டிவ் தொனியிலேயே இருப்பது ஏன்?''

''கட்சியில் தனக்கு எவ்வளவு நெருக் குதல் வந்தாலும் தன்னை நம்பி வரும் நல்லவர்களைக் கடைசிவரை கை விடாமல் துணையாக இருப்பது, மதுரை மக்களுடன் அந்நியோன்யமாக இருப்பது, யாரும் தப்பா நினைச்சுக்குவாங்களோனு நினைக்காம மனசுல பட்டதைப் பளிச்னு சொல்றதுனு எங்க அப்பா ஒரு ரியல் ஹீரோ சார். அவர் எம்.பி., அமைச்சர் ஆனதெல்லாம் கட்சியும் தொண்டர்களும் ஃபோர்ஸ் பண்ணி நடந்த விஷயங்கள். ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கார். ஆனா, நெகட்டிவ் செய்திகளைவெச்சு சென்சேஷன் செய்யும் ஆங்கில மீடியாக்கள், எங்கள் குடும்பத்தைப் பத்தி புரளி கிளப்புறதுல அதீத ஆர்வம் காட்டுறாங்க... அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்!''

''நீங்கள் கனிமொழி அத்தையின் செல்லமா?''

''ரொம்பவே செல்லம்! ரொம்ப மென்மையான இயல்புகொண்ட அவங்க இத்தனை நாள் ஜெயில்ல கஷ்டப்பட்டதை இப்போ நினைச்சா லும் மனசுக்குக் கஷ்டமா இருக்கு. ஜெயில்ல நான் போய் அவங்களைப் பார்த்தப்பகூட, 'அனுஷாவுக்குக் கால்ல அடிபட்டுருச்சாம்ல. உன்னை நம்பி வந்த பொண்ணு. பத்திரமாப் பார்த்துக்க’னு சொன்னாங்க. அப்பா மேலயும் என் மேலயும் கனி அத்தைக்கு எப்பவுமே தனிப் பிரியம். மதுரைக்கு வந்தா, எங்க வீட்லதான் தங்குவாங்க. அம்மாவுக்கும் அவங்க பயங்கர க்ளோஸ். அவங்களுக்கு ஜாமீன் கிடைச்சது ரொம்பவே சந்தோஷம். அத்தையைச் சீக்கிரமே பார்க்கணும்!''

''கலைஞர் தாத்தா என்ன சொல்றார்?''

''தாத்தாவைச் சந்தித்தால் முக்கால்வாசி நேரம் அரசியல்தான் பேசுவேன். சினிமாபத்தியும் நிறையப் பேசுவோம். 'என்னப்பா, அந்தப் படம் எப்படி இருக்கு, இந்தப் படம் எப்படிப் போகுது, உதயா படம் நல்ல கலெக்ஷன்னு கேள்விப்பட்டேன்’னு நிறையப் பேசு வார். அரைகுறைத் தகவல்களோட ஏதாவது தப்பா சொல்லிட்டா, 'இல்லையே... அந்தப் படம் சுமார்னு எழுதி இருக்காங்க’னு ஷார்ப்பா கண்டுபிடிச்சுடுவார். ஒரு நாளைக்கு 20 பேப்பர் படிச்சா எந்த விஷயம்தான் அவருக்குத் தெரியாம இருக்கும்?''

'' 'மதுரையை மீட்டெடுப்போம்’னு சொல்லி, தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கு ஜெயலலிதா அரசு. இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''தேர்தலுக்கு முன்னாடி ஜெயலலிதா மதுரைக்கு பிரசாரத்துக்கு வந்தப்போ என்ன காரணமோ தெரியலை, கலெக்டர் அனுமதி தரலைனு நினைக்கிறேன். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் இது. சம்பந்தமே இல்லாம கட்சிக்காரங்களை அரெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. மதுரையில் இப்ப தி.மு.க-க்காரர்கள் பாதிப் பேர் ஜெயில்லதான் இருக்காங்க. அரசு கேபிள் டி.வி. வந்த பிறகு, ராயல் கேபிள் விஷன் ஒளிபரப்பை மதுரையில் நிறுத்திட்டோம். ஏன்னா, இருக்கும் மிச்சம் மீதி கட்சிக்காரங்களையும் அதைக் காரணம் காட்டி, அரெஸ்ட் பண்ணிடுவாங்களோனுதான்.

மதுரைக்காரங்க எது பண்ணாலும் பிரமாண்டமா பண்ணுவாங்க. அதனாலயே மதுரையில் சின்ன சம்பவமும் அதீதக் கவனம் ஈர்க்குது. அதான் பிரச்னையே! 'அண்ணே... அதைப் பண்ணிட்டோம்ணே, இதைப் பண்ணிட்டோம்ணே’னு பெருமையா சொல்லிச் சொல்லியே சாதாரண விஷயத்தைக்கூட பூதா காரம் ஆக்கிடுவாங்க. அப்பாகூட எப்பவும் 10 பேர் இருப்பாங்க. ஏதாவது ஒரு விஷயம் பேசினா, அது 100 விஷயமா வெளியே போகும். ஆனாலும் எனக்கு இந்த உலகத்திலயே பிடிச்ச இடம் மதுரைதான். ஒரு குடும்பம் மாதிரி அரவணைச்சுப் பாசம் காட்டுற கட்சிக்காரங்கதான் அதுக்குக் காரணம்!''

No comments:

Post a Comment