Friday, December 2, 2011

இத்தனை வருடமாக தண்ணி காட்டியவர், எப்படி சிக்கிக் கொண்டார்?

மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் கிஷென்ஜியின் குண்டு துளைக்கப்பட்ட உடல் மேற்கு மித்னாபூர் கிராமம் ஒன்றில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வியாழக்கிழமை இரவு காண்பிக்கப்பட்டது. சுமார் 30 நிமிட துப்பாக்கிச் சண்டையின்பின் அவர் கொல்லப்பட்டார் என்ற தகவலும் பாதுகாப்பு படைகளால் தெரிவிக்கப்பட்டது. அதுவரைக்கும் சரி. கேள்வி என்னவென்றார், அவரை இவர்களால் எப்படி அணுக முடிந்தது?


பல வருடங்களாக பாதுகாப்பு படைகளுக்கு டிமிக்கி கொடுத்துவந்த கிஷென்ஜி, எப்படி இப்போது சிக்கிக் கொண்டார்? குஷ்போனி காட்டுக்குள் 207-ம் கோப்ரா பட்டாலியன் படைப்பிரிவும், 184-ம் சி.எஸ்.பி.எஃப். படைப்பிரிவும் இணைந்து நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதுதான் செய்தி. தனது பாதுகாப்பில் கடும் கவனம் உடைய அவரை எப்படி பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்ல முடிந்தது?

கிஷென்ஜி, மாவோயிஸ்ட் இயக்கத்தின் மத்தியக் குழு, நிர்வாகக் குழு இரண்டிலும் முக்கியமானவர். அந்த இயக்கத்தின் 3-வது நிலைத் தலைவர் இவர் என்று சொல்லப்பட்டாலும், இவருக்கு மேலேயுள்ள மற்றைய இருவரும், அரசியல் ரீதியான ஆட்கள். மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆயுதப் போராட்ட விங்கில் இவர்தான் நம்பர் ஒன் தலைவர்.

கிஷென்ஜியின் ‘முகம் காட்டாத’ பழைய போட்டோ

20 வருடங்களுக்கு மேலாக வெளியே தலைகாட்டாத அவரது உருவ அமைப்பு எப்படி இருக்கும் என்று தெரியாமல் உளவுத்துறைகள் குழம்பிக் கொண்டிருந்த காலமும் ஒன்று இருந்தது. அதன்பின் சில மீடியாக்களுக்கு பேட்டிகள் கொடுக்கத் தொடங்கியபின்னர்தான் அவரது போட்டோவே வெளியே வந்தது. அந்தளவுக்கு அன்டர்கிரவுண்ட் வாழ்க்கையில் இருந்த நபர் இவர்.உளவுத்துறைக்கு இவரைப் பற்றிய விபரங்கள் சற்று அதிகமாகவே தெரியவந்தது சமீபத்தில்தான். சில மாதங்களுக்குமுன் மாவோயிஸ்ட் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் போலீஸில் சரண்டரானார்கள். ஒருவிதமான உட்கட்சி கொள்கை முரண்பாடே இதற்குக் காரணம். அவர்களை உளவுத்துறை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. கிஷென்ஜி தொடர்பான பல தகவல்கள் அப்போதுதான் புதிதாகத் தெரியவந்தன.


அவரது நடமாட்டங்கள் எப்படியிருக்கும்? எந்த வகையான பாதுகாப்பு கொடுக்கப்படுகின்றது? அவர் வழமையாகச் சந்திக்கும் நபர்கள் யார்? எப்படி பயணம் செய்கிறார்? அதிகபட்சம் எவ்வளவு தொலைவுவரை பயணிப்பார்? என பல விபரங்கள் ராணுவ உளவுப்பிரிவால் திரட்டப்பட்டன. இந்தத் தகவல்களை வைத்தே இவரைப் பிடிப்பதற்கான ஆபரேஷனுக்கு ஒரு ஸ்கெட்ச் போட்டுக் கொண்டார்கள்.

பாதுகாப்புப் படைகளுக்கு கிடைத்த ஒரு பெரிய அனுகூலம், மாவோயிஸ்ட் அமைப்புக்குள் தற்போது உள்ள முரண்பாடுகள்தான். வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அமைப்புக்குள் மூன்று அல்லது நான்கு வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. தாம் செல்லும் பாதை தவறானது என்பது போன்ற சிந்தனைகளும் வரத் தொடங்குகின்றன (அப்படியானவர்கள்தான் அதிகம் சரணடைகிறார்கள்)இந்த உள்வீட்டு முரண்பாடுகள் காரணமாக கிஷென்ஜி சமீப காலமாக யாரையும் நம்புவதில்லை என்ற தகவல் ஒன்று உளவுப் பிரிவுக்கு கிடைத்திருந்தது. வழமையாக தன்னுடன் அழைத்துச் செல்லும் 10-15 மெய்ப்பாதுகாவலர்கள் மீதுகூட சந்தேகம் ஏற்பட்டதில் தனித்து நடமாடவும் தொடங்கியிருந்தார்.மேற்கு வங்காள மாநிலத்தின் எல்லைப் பகுதி சிறு கிராமங்களில்தான் அவரது அபிமானத்துக்குரிய மறைவிடங்கள் இருந்தன. ஆனால், அங்கேயும் அதிகமாகத் தங்காமல், ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லைப்புறக் கிராமங்களுக்கு அவ்வப்போது வந்து செல்வதாக தகவல்கள் கிடைத்திருந்தன. அப்படியாக அவர் தனது மறைவிடம் ஒன்றில் இருந்து வெளியே வந்து மற்றொரு இடத்துக்குச் செல்லும் வழியில் பிடிப்பதே சுலபமானது என்று திட்டமிடப்பட்டது.
கிஷென்ஜி சுடப்பட்ட தினத்துக்கு முதல்நாள் இரவில் ஜார்கண்ட் மாநில எல்லையோரக் கிராமம் ஒன்றுக்கு தனியே சென்றதாக உளவுத் தகவல் கிடைத்திருந்தது. அவர் திரும்பி வரும்போது, நேரடியாக வங்காள கிராமத்துக்குள் செல்லாமல், காட்டுக்குள் தங்கிவிட்டு செல்ல திட்டமிட்டிருந்தார். கிட்டத்தட்ட ட்ரான்சிட் ஸ்டே!

அப்படியான ஒரு இடத்தில் வைத்து, போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில்தான், பாதுகாப்பு படைகளிடம் சிக்கி்க் கொண்டார் கிஷென்ஜி.

No comments:

Post a Comment