ஸ்பெக்ட்ரம் மற்றும் தமிழக உள்ளாட்சித் தேர்தல்களால் காங்கிரஸ்-தி.மு.க. உறவு கலகலத்துக் கிடக்கும் நிலையில், தற்போது அழகிரியின் ‘பவர்’ குறைப்பு பற்றிய செய்திகள் தி.மு.க.வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உரத்துறை அமைச்சராக இருக்கும் மு.க. அழகிரி, ‘துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை, நாடாளுமன்ற விவாதங்களைப் புறக்கணிக்கிறார்’ என ஏற்கெனவே சில வருத்தங்கள் காங்கிரஸுக்கு உண்டு. அதன் தொடர்ச்சியாக இப்போது உரத் துறையை அழகிரியிடம் இருந்து பறிக்க முடிவு செய்திருப்பதாக பேச்சுகள் எழ ஆரம்பித்தி ருக்கின்றன.
இப்படி ஒரு பவர் குறைப்புக்கு அஸ்திவாரம் போட்டிருப்பது உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல்தான் என்கிறார்கள். அம்மாநிலத்தில் பலமான கூட்டணி அமைத்து, வரவி ருக்கும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது என ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியான மீரட் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவ ட்டங்கள் விவசாயத்தை அடிப்படை யாகக் கொண்டவை. இந்தப் பகுதிகளில் அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் வலுவாக இருக்கிறது. எனவே, அவர்களுடன் கூட்டணி வைப்பது என நினைத்திருக்கிறார் ராகுல் காந்தி.
கூட்டணி பேச்சுவார்த்தையில், ராஷ்ட்ரிய லோக் தளத்திற்கு 100 இடங்கள் மற்றும் மத்திய அமைச் சரவையில், அஜித் சிங்குக்கு கேபினட் அமைச்சர் பதவியும், (கு றிப்பாக விவசாயம் சம்பந்தமான இலாகா) அவரது மகன் ஜெயந்த் சௌத்ரிக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முடிவில், அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளத்திற்கு 60 இடங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் இருவருக்கும் இடம் என முடிவானது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும், குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்ததும் மத்திய அமைச்சரவையில் அஜித்சிங் மற்றும் அவரது மகனுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அஜித்சிங்குக்கு விவசாயம் தொடர்பான துறை ஒதுக்கப்படும் எனவும் தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் தற்போது விவசாயத்துறை, ‘தேசியவாத காங்கிரஸ்’ கட்சியின் தலைவரான சரத்பவார் வசம் உள்ளது. குளிர்கால கூட்டத் தொடரில் ‘உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா’ தாக்கல் செய்யப்பட இருப்பதால், எக்காரணத்தைக் கொண்டும் விவசாயத் துறையை அளிக்க முடியாது என அவர் விளக்கம் அளித்துள்ளார். எனவே, மு.க. அழகிரி வசம் உள்ள ரசாயனம் மற்றும் உர இலாகாவைப் பிரித்து, உர இலாகா அஜித்சிங்குக்கு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், தி.மு.க. தயவு காங்கிரஸுக்குத் தேவையில்லை. எனவே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து கருத்துகள் வருகின்றன.
ஆனால், காங்கிரஸின் தயவும், மத்திய அமைச்சர் பதவியும் தேவைப்படும் நிலையில் இந்தச் செய்தி தி.மு.க.விற்கு நிச்சயம் கசப்பான ஒன்று தான்!
No comments:
Post a Comment