Monday, December 5, 2011

முல்லைப் பெரியாறும் "பிரவம்' இடைத்தேர்தலும்!

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைக் காப்பாற்றவே முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்ற ஒரு பிரசாரத்தைத் திடீரென்று அந்த மாநில அரசு கையில் எடுத்துள்ளது என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

""முல்லைப் பெரியாறு அணை திடீரென ஒருமுறை ஏற்படும் நிலநடுக்கத்தில் வலுவிழந்துவிடவில்லை. முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறைந்துள்ளது என்று ஆளும் காங்கிரஸ் கூட்டணி கூறுவது அங்கு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான். அதன் விளைவுதான் "கேரளத்துக்கு பாதுகாப்பு; தமிழகத்துக்கு தண்ணீர்' என்ற தாரக மந்திரம்'' என்று வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறத் தொடங்கியது கேரள அரசு.

அதை நம்பிய தமிழக அரசும் நீரின் அளவை 136 அடிக்குக் குறைத்தது. அதையடுத்து, அணையின் நீர் அளவை 142 அடியாக உயர்த்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை.

அணையின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்ய மீண்டும் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அமைக்கப்பட்டது.

ஆறு மாத காலத்தில் அணை குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இந்த குழுவின் பதவிக்காலம் நீடித்து கொண்டே போகிறது.

இந்த குழுவின் முதற்கட்ட அறிக்கையை வரும் ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் குழுத் தலைவர் திட்டமிட்டுள்ளார்.

ஒரு வேளை இந்த அறிக்கையில் அணையின் ஸ்திரத் தன்மைக்குப் பாதிப்பில்லை என்று குழு அறிவித்துவிட்டால், அப்போது அறிக்கையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இயலாது. காரணம், நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகிவிடும். எனவே, இப்போதிருந்தே ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கியுள்ளன கேரள அரசியல் கட்சிகள்.

ஆட்சியைக் காப்பாற்ற: முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும் அணை உடைந்தால் எர்ணாகுளம், ஆலப்புழை உள்பட 4 மாவட்டங்கள் மூழ்கிவிடும் என்று அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் பிரசாரம், உண்மையில் ஆளும் அரசின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்று தெரிகிறது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும் இடதுசாரிகள் முற்போக்குக் கூட்டணி 68 இடங்களையும் கைப்பற்றின.

கேரள காங்கிரஸ் கட்சியின் (ஜேக்கப் பிரிவின்) மூத்த தலைவர் டி.எம். ஜேக்கப், எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஐந்தாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்.

கடந்த அக்டோபர் மாதம் அவர் மரணமடைந்ததால் "பிரவம்' தொகுதியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப் பேரவையில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. டி.எம். ஜேக்கப் மறைவுக்குப் பிறகு 71 ஆகக் குறைந்துவிட்டது.

அது மட்டும் இன்றி சட்டப் பேரவைத் தலைவராக ஆளும் கட்சி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதால், ஆளும் கூட்டணியின் எண்ணிக்கை 70 ஆகக் குறைந்துவிடும். "பிரவம்' தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவினால் இடதுசாரிகளின் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாக அமையும். இதனால்தான், கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில்தான் டி.எம். ஜேக்கப் 157 வாக்கு வித்தியாசத்தில்தான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் எம்.ஜே. ஜேக்கப்பைத் தோற்கடித்தார்.

நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் டி.எம். ஜேக்கப்பின் மரணத்தைத் தொடர்ந்து அந்தக் கட்சி வலுவிழந்திருப்பதால், இடதுசாரி முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.

ஆகையால் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் முல்லைப் பெரியாறு பிரச்னையைக் கேரள ஆளும் கூட்டணி கையிலெடுத்திருக்கிறது. அது மட்டுமின்றி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் "பிரவம்' தொகுதியில் ஓடும் மூவாற்றுப் புழை ஆற்றின் வழியாகச் செல்லும்.

இதனால் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் "பிரவம்' தொகுதி உள்பட எர்ணாகுளம் மாவட்டமே அழிந்துவிடும் என்ற தவறான பிரசாரத்தைப் பரப்பி வேண்டுமென்றே மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்டப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது மத்திய நீர் வளத்துறை அமைச்சரோ உறுதியளித்தால் "பிரவம்' இடைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொள்ளும் என்ற மனக் கணக்கில்தான் ஆளும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறது என்று தெரிகிறது.

No comments:

Post a Comment