Monday, December 5, 2011

ஷூ வாங்குவதற்காக ஸ்டேடியத்தை சுத்தம் செய்த கால்பந்து வீரர்கள்!


கிழிந்து போன ஷூவுக்குப் பதில் புதிய ஷூ வாங்க போதிய பணம் இல்லாததால், கிரிக்கெட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து ஊதியம் வாங்கி அதில் ஷூ வாங்கியுள்ளனர் கால்பந்து வீரர்கள். இந்தக் கொடுமை நடந்திருப்பது இந்தியாவில்.


இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டுமே நல்ல நிலையில் இல்லை. நன்றாக இருப்பது போலத் தோன்றினாலும் கூட பல விளையாட்டுக்கள், வீரர், வீராங்கனைகள் இன்னும் அனாதையாகவே திரிகின்றனர்.



இந்த அவலத்தை அப்படட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இந்தூரில் நடந்துள்ள ஒரு சம்பவம். அங்குள்ள இளம் கால்பந்து வீரர்கள், தங்களுக்குப் புது ஷூ வாங்க போதிய பணம் இல்லாததால், கால்பந்து சங்கத்திடமிருந்து உதவி கிடைக்காததால் வெறுப்படைந்து, அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து பணம் பெற்று அதில் ஷூ வங்கியுள்ளனராம்.



இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில், இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது. இநதற்காக மைதானத்தை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் நடந்தன. இதற்காக யாரைப் பணியமர்த்தலாம் என்று மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் யோசித்தது. பின்னர் உள்ளூரைச் சேர்ந்த ஏ டிவிஷன் கால்பந்து அணியின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து அந்த அணி வீரர்களும் சுத்தப்படுத்த முன்வந்தனராம். இவர்களில் 7 பேர் மாநில அளவிலான அணியில் ஆடும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து அந்த கிளப்பின் பயிற்சியாளர் சஞ்சய் நிதன் கூறுகையில், இந்தப் பணியால் எங்களுக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு வீரர்களுக்கு நல்ல பூட்களும், பழையை கால்பந்து சாதனங்கள் சிலவற்றையும் வாங்க முடியும் என்றார்.



ஸ்டேடியத்தில் உள்ள ஒரு சீட்டை சுத்தம் செய்தால் ரூ. 2.75 பணம் தருமாம் கிரிக்கெட் சங்க நிர்வாகம். இங்கு மொத்தம் 26,000 சீட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



கால்பந்து வீரர் தேஜ் கரண் செளஹான் கூறுகையில், கால்பந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எங்களுக்கு ஆதரவு தர வலுவான பின்னணி இல்லை. எனவேதான் இப்படி செய்து பணம் சம்பாதித்து எங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் வேதனையுடன்.



கால்பந்து வீரர்களுக்கும், அணிக்கும் ஊக்கம் கொடுத்து தூக்கி விடாமல் அவர்களுக்கு நிதியுதவி தந்து கெளரவமாக நடத்தாமல், சீட்டைத் துடைக்க கூப்பிட்ட மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் செயல் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.



இனவெறியும், நிறவெறியும் மனிதர்களிடம் மட்டும்தான் என்றில்லை, இப்படி நடப்பதும் கூட ஒருவகையில் இனவாதம்தான்.

No comments:

Post a Comment