தமிழக மீனவர்களைத் தண்டிப்பதற்குப் புதிய புதிய உத்திகளைக் கையாளும் இலங்கை அரசு, இப்போது புதிதாக 'கடல் கொள்ளையர்’ பட்டத்தையும் வழங்கி இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு கடந்த ஜூன் 20 அன்று ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ''இலங்கைக்கு வடக்கே உள்ள நாட்டைச் (இந்தியா) சேர்ந்த மீனவர்கள் இலங்கையின் கடல் பரப்புக்குள் அத்துமீறி வருகிறார்கள். இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்வளத்தையும் அரிய கடல் செல்வங்களையும் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். இதனால் எங்கள் கடல் பிரச்னைக்குரிய பகுதியாக இருக்கிறது. எனவே அத்துமீறுபவர்கள் மீது சர்வதேசக் கடல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வீரம் பேசியுள்ளார். தமிழக மீனவர்களைப் பிடித்து பல ஆண்டுகள் சிறையில் தள்ளுவதற்கான திட்டமாகவே இந்தப் பேச்சை வர்ணிக்கிறார்கள், தமிழக மீனவர்கள்.
இந்திய இலங்கை நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் பிரதிநிதி யு.அருளானந்தம், ''இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான கடல்பரப்பு மிகவும் குறைந்த அளவைக்கொண்டது. இதனால் இரு நாட்டு மீனவர்களும் இயற்கையின் சீற்றத்தால் எல்லை தாண்டிச் செல்வது தவிர்க்க முடியாதது. இதனால்தான் எந்த ஒரு நாட்டின் மீனவரும் அடுத்த நாட்டின் கடல் பகுதிக்குள் நுழைந்துவிட்டால், அவர்களை மனிதாபிமான முறையிலேயே நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வரையறை செய்துள்ளது. இதன்படிதான் இந்தியக் கடல் பகுதிக்குள் நுழையும் இலங்கை மீனவர்களைச் சிறை பிடிக்கும் நம் கடற்படையினர், அவர்களைச் சிறையில் வைப்பது இல்லை. ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்கள் பிடித்து வரும் மீன்களை உரிய முறையில் விற்பனை செய்து அதற்கான பணத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். ஆனால் இலங்கைக் கடற்படையினரோ நம் மீனவர்களை சிறைப்பிடிப்பதுடன் அவர்களின் உடமைகளையும் அபகரித்துக்கொள்கின்றனர். சில வேளைகளில் படகுகளை அழித்தும்விடுகின்றனர்.
இப்போது எல்லை தாண்டிச் செல்லும் நம் மீனவர்கள் மீது கடத்தல்காரர்களுக்கு நிகரான தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளார் ராஜபக்ஷே. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அப்படி ஒரு சட்டத்தை மீனவர்கள் மீது பாய்ச்சினால், நம் மீனவர்கள் நீண்ட காலம் இலங்கை சிறையில் இருக்க நேரிடும். இலங்கை மீனவர்கள் இந்தியாவின் பாக் நீரிணை, வங்காள விரிகுடா கடல் பகுதியில் மட்டுமல்லாது மாலத் தீவு, மியான்மர் நாட்டுக் கடல் பகுதிகளிலும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்தியப் பெருங்கடலில் உள்ள 'வேஜ்பேங்’ என்ற பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க வாஜ்பாய் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்றாலும், இலங்கை மீனவர்கள் இன்று வரை அந்தப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை மத்திய அரசு தட்டிக்கேட்கவில்லை. அதோடு ராஜபக்ஷேவின் ரியோ டி ஜெனிரோ பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ராஜபக்ஷேவின் விவகாரமான பேச்சு அங்கீகரிக்கப்பட்டால், தமிழக மீனவர்களால் கடலில் மீன் பிடிக்கவே முடியாது'' என்று பொங்கினார்.
ம.தி.மு.க-வின் மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம். பேட்ரிக், ''இலங்கை கடல் பகுதிக்குள் வரும் தமிழ் மீனவர்களை 20 ஆண்டுகள் வரை சிறை வைக்க ராஜபக்ஷே திட்டம் போடுகிறார். இது, தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே சவால் ஆகும். விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டியே நம் வரிப் பணத்தை எல்லாம் இலங்கைக்கு வாரிக் கொடுத்துவருகிறது மத்திய அரசு. இன்று புலிகளுடனான மோதல் நின்றுவிட்ட நிலையில், இந்தியாவின் நட்பை உதாசீனப்படுத்துகிறார் ராஜபக்ஷே. இந்தியாவின் எதிரி நாடுகளான சீனாவையும் பாகிஸ்தானையும் தன்னுடைய முதல் தரக் கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொண்டு நம்மைச் சீண்டுகிறார். அதன் தாக்கம்தான் மீனவர்கள் மீதான இந்த அச்சுறுத்தல். மீன் பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களைத் தண்டிக்க சர்வதேச சட்டத்தில் இடம் இல்லை. அதனால்தான் இலங்கையின் நீர்கொழும்பு, கல்பட்டி பகுதி மீனவர்கள் நமது கடல் பகுதியில் நாள்தோறும் மீன்பிடிக்க வருகிறார்கள். பாம்பனில் இருந்து 45 கடல் மைல் தொலைவில் உள்ள நம் கடலில் கிடைக்கும் கிழவாளை என்ற மீனை, உரிமையுடன் பிடித்துச் செல்கிறார்கள்.
மீன் இனம் அழிவதாக ராஜபக்ஷே சொல்வதிலும் உண்மை கிடையாது. நம் மீனவர்கள் வாழ்க்கை நடத்தத்தான் மீன் பிடிக்கச் செல்கின்றனரே தவிர கொள்ளை அடிக்க அல்ல. நம் மீனவர்களைச் சிறையில் அடைக்கத் துடிக்கும் ராஜபக்ஷேவின் கொடூர சதியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அத்துடன் இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையே பரஸ்பரம் மீன் பிடித் தொழில் செய்வதற்கான கூட்டு மீன்பிடி ஒப்பந்தத்தை உருவாக்கவும் வேண்டும்''என்றார்.
ஈழத் தமிழர்களின் மரணக் குரல்தான் கேட்கவில்லை. தமிழ் மீனவர்களின் குரலுமா கேட்காது மத்திய அரசுக்கு?
No comments:
Post a Comment