இங்கிலாந்தில் திரையிடப்பட்டிருக்கும் ஒரு படத்துக்கான இரண்டு மாதத்துக்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம் புதிதில்லை. முப்பத்தோரு வருட பழைய படம். நம் கர்ணனைப் போல டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் ஒரு படம். டி.வி.டி.யும் விற்றுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் சாரியட்ஸ் அஃப் பையர் (Chariots of Fire). இந்தச் சாதனைகளுக்குக் காரணம் படத்தின் கதை.
1924ல் நடந்த ஒலிம்பிக்ஸின் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்ற இரண்டு வீரர்களின் கதை. 1981ல் வெளியான இந்தப் படம் நான்கு ஆஸ்கர் அவார்ட்களைப் பெற்ற படம். இந்த வருட புத்தாண்டு தினத்தில் லண்டன் ஒலிம்பிக் 2012-ன் அறிமுக இசையாக, இப்படத்தின் இசை அறிவிக்கப்பட்டது. படத்தின் பல காட்சிகளும், இசையும் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுவதால், தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொட்டுகிறது. முதல்முறையாக விளையாட்டு வீரர்கள் அல்லாத ஒலிம்பிக் பங்கேற்பாளராக, ஒரு சினிமா, அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1919ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேரும் ஹெரால்ட் ஆபிரஹாம்ஸ் என்ற மாணவனுக்கு அவன் சார்ந்த இனத்தால் அங்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை. தம்மை நிலைநிறுத்திக்கொள்ள தமக்கு நன்கு தெரிந்த விளையாட்டான ஓட்டத்தில் பங்கு கொள்ள தொடங்குகிறான். முதல்முறையாக கேம்பிரிட்ஜ் பல்கலை வளாகத்தின் சுற்றுப்புறச் சுவரை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் 12 மணி அடித்து ஓவதற்குள் ஓடிக் கடந்து சாதனையைச் செய்கிறான். இதனால் மேலும் பல ஓட்டங்களில் பங்கேற்று வெற்றிபெறும் வாய்ப்புக் கிட்டுகிறது.ஒரு மதபோதகரின் குடும்பத்தில் பிறந்து பாதிரியாராகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இளைஞன் எரிக் லிட்டெல்,‘கடவுளின் மேன்மையைச் சொல்வதற்காக, ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவன். எரிக்கிடம் ஒரு தேசிய அளவிலான போட்டியில் ஆபிரஹாம்ஸ் என்ற மற்றொரு வீரன் தோற்க நேரிடுகிறது. இதனால் மனமுடைந்து சோர்ந்திருந்த ஆப்ரஹாமுக்கு எதிர்பாராதவிதமாக ஒரு கோச்சின் உதவி கிடைக்கிறது. கல்லூரி நிர்வாகம் அதனை ஆதரிக்காவிட்டாலும் துணிந்து பயிற்சியில் ஈடுபடும் ஆபிர ஹாம்ஸுக்கு கோச் சொல்லிக் கொடுக்கும் டெக்னிக்களினால் 1924 ஒலிம்பிக்கில் நாட்டுக்காகப் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. உடன் ஓடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓட்டக்காரர் தம்மை முதலில் தோற்கடித்த வீரர் எரிக் லிட்டெல். பாரிஸில் நடைபெற்ற அந்த ஒலிம்பிக்ஸில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அட்டவணை இடப்பட்டிருப்பது ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஒரு உண்மையான கிருத்துவர் மதக் கொள்கைகளின்படி ஞாயிறு அன்று எதையும் செய்யக்கூடாது என்பதால், போட்டியில் பங்கேற்க மறுத்துவிடுகிறார் எரிக். ஒலிம்பிக் கமிட்டி தலைவர் மன்னர் பிலிப்ஸ் வேண்டியும் மறுப்பதால், அது உலகத் தலைப்பு செய்தியாகிவிடுகிறது. அவருக்குப் பதில் மற்றொரு ஓட்டக்காரர் பங்கேற்பதால், எரிக் அந்த வீரர் ஓட வேண்டிய 400 மீட்டர் பந்தயத்தில் அதற்காகத் தயாரித்துக் கொள்ளாத நிலையிலும் ஓடி, தங்க மெடல் பெறுகிறார்.
ஆப்ரஹாம்ஸும் தங்க மெடல் பெறுகிறார். தீவிரமான மதநம்பிக்கை கொண்ட ஓட்ட வீரன், திறமையினால் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் சாதித்த மற்றொரு வீரன் என்ற இரண்டு ஒலிம்பிக் போட்டியாளர்களின் பின்னணியிலிருக்கும் இந்தச் சாதாரண கதையை விறுவிறுப்பான திரைக்கதையினாலும், இசையினாலும் பார்ப்பவர் அசந்துபோகும் அளவுக்குப் படமாக்கியவர் ஹட்ஸன் (Hugh Hudson). ஒலிம்பிக் போட்டிகளின் பயிற்சிகள், காட்சிகளுக்கான களங்கள், சோந்த விருப்பு வெறுப்புகளுக்காக நாட்டுக்கு விளையாட மறுப்பது போன்ற புதிய விஷயங்கள் இருந்ததும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.
வசூல் ரிகார்ட், அவார்ட்கள் போன்றவற்றையெல்லாம் தாண்டி காலம் முழுவதும் வாழும் பெருமையை பெற்ற சினிமாக்கள் சில மட்டுமே. சாரியட்ஸ் அஃப் ஃபயர் (Chariots of Fire) அவற்றில் ஒன்று. இரண்டு ஒலிம்பிக் ஓட்டக்காரர்களின் கதையைச் சொல்லும் இந்தப் படத்தை 2012 ஒலிம்பிக் கமிட்டி கௌரவிப் பதுதான், அதைவிட மிகப்பெரிய பெருமை.
No comments:
Post a Comment