Wednesday, July 4, 2012

நித்தியை ரவுண்ட் கட்டும் விவகாரங்கள்! ஃபோரன்சிக் ரிப்போர்ட்... ஆண்மை பரிசோதனை... பாஸ்போர்ட் தில்லுமுல்லு


'தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட், ஆர்த்தி ராவின் அதிரடித் தகவல்கள், பழைய சீடர்களின் ரகசிய வாக்குமூலங்கள்’ என அடுக்கடுக்காகப் பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டும், நித்திக்கு எதிரான வழக்கு ஒன்றரை வருடமாக‌ நொண்டிதான் அடிக்கிறது கர்நாடகாவில். இதனால், வாக்குமூலம் அளித்தவர்களை விட அதிகமாக நொந்துபோய் இருப்பது கர்நாடக சி.ஐ.டி. போலீஸார்தான். இப்போது அவர்கள் நித்தியை வளைக்க ஃபோரன்சிக் லேப் ரிப்போர்ட்டை மீண்டும் துருப்புச் சீட்டாக எடுத்திருக்கிறார்கள். இதனால் கிடுகிடுத்துப்போய் இருக்கிறார் நித்தி. 
நித்தியின் அமெரிக்க‌த் தில்லுமுல்லு!
நித்தியின் அமெரிக்கத் தில்லுமுல்லுகளை அரங்கேற்றம் செய்திருக்கும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணாவிடம் பேசினோம். ''நடிகை ரஞ்சிதாவுடனான வீடியோ சர்ச்சையில் சிக்கியதில் இருந்து, தனது கற்பை நிரூபிக்க அமெரிக்காவில் அலைந்து திரிந்து 'முறைப்படி’ வாங்கிய ஃபோரன்சிக் லேப் ரிப்போர்ட் சகிதம்தான் வெளியே செல்வார் நித்தி. அமெரிக்காவில் இருக்கும் ஆர்த்தி ராவின் உதவியோடு, அங்கு நித்தி வாங்கிய ஃபோரன்சிக் லேப் ரிப்போர்ட்களை வர வைத்தோம். அத்தனை லேப் ரிப்போர்ட்களிலும் வீடியோவை பொய் என சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள். அதற்குக் காரணம்... நித்தி தரப்பில் ஃபோரன்சிக் லேபுக்கு கொடுத்த அத்தனை வீடியோக்களும் யூ-டியூபில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டவை. அதை அவர்கள் அளித்த சர்ட்டிஃபிகேட்டே சொல்கிறது. இதை வைத்துக்கொண்டுதான் 'வீடியோ பொய்’ என நித்தி ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறார்'' எனக் கொதித்தவர், அத்தனை ஆதாரங்களையும் நம்மிடம் கொடுத்தார்.
தில்லுமுல்லு 1: ‘PRIMEAU PRODUCTIONS’
அமெரிக்காவில் இருக்கும் இந்த லேபை சேர்ந்த எட்வர்ட் ஜே அளித்திருக்கும் ரிப்போர்ட்டில், 'இந்த வீடியோ எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி ஹாலிவுட் படத்தைப் போல் எடுக்கப்பட்டிருக்கிறது. வீடியோ முழுக்க பாட்டுச் சத்தமும், ஒன்ஸ்மோர்(!) காட்சிகளும் நிறைய இருக்கின்றன. எனவே, வீடியோ பொய்யானது. இதுகுறித்த விசாரணைக்காக கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் எப்போது என்னை அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன்'' என்று நித்திக்காக வக்காலத்து வாங்குகிறார்.
தில்லு முல்லு 2: Yonovitz & Joe Lab
அமெரிக்காவில் இருக்கும் இன்னொரு ஃபோரன்சிக் லேப்பான யோனோவிட்ஸ் - ஜோ லேபை சேர்ந்த ஹேபர்ட் ஜோ அளித்திருக்கும் 16 பக்க ரிப்போர்ட்டில்,  'எங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் நித்தி - ரஞ்சிதா செக்ஸ் ஸ்கேன்டல் வீடியோ, யூ-டியூபில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டது. இந்த வீடியோ, கோவையான காட்சிகளால் உருவாக்கப்படவில்லை. வீடியோ மற்றும் ஆடியோ எடிட் செய்யப்பட்டு இருக்கிறது. எடிட் செய்யப்பட்ட எந்த வீடியோவும் பொய் என அமெரிக்க நீதிமன்றமே தீர்ப்பளித்து இருக்கிறது. எனவே, நித்தி - ரஞ்சிதா செக்ஸ் ஸ்கேன்டல் வீடியோ பொய்யானது என சான்று அளிக்கிறோம்’ என்கிறார்கள்.
தில்லு முல்லு 3: NCAVF (National center for audio & video forensics)
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ‘NCAVF’ லேப்பை சேர்ந்த 'டேவிட் நோட்டோவிஷ்’ அளித்திருக்கும் ரிப்போர்ட்டில் 'இந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் காட்சிகளின் நகர்வுகளைப் பார்க்கும்போது, வீடியோ ஆடியோ டெக்னிக்குகளைப் பயன்படுத்தி 'அவதார்(!)’ பட ரேஞ்சில் உருவாக்கி இருக்கிறார்கள்., இது ஒரிஜினலாக இருக்க வாய்ப்பு இல்லை’ என கையெழுத்திட்டு இருக்கிறார்.
தில்லு முல்லு 4: FORENSIC REPORT 1.0
நித்தி தரப்பால் கடைசியாகப் பெறப்பட்ட ரிப்போர்ட் இதுதான். அமெரிக்காவில் இருக்கும் ஃபோரன்சிக் ரிப்போர்ட் 1.0 லேப் சான்று அளித்திருக்கிறது. அதில், 'அமெரிக்க போலீஸ் ஃபோரன்சிக் செய்யும் முறையான முகவெட்டையும், உடலமைப்பையும் கிராஃப் செய்து சோதித்துப் பார்த்தோம். நித்தியின் உண்மையான முகவெட்டையும், ரஞ்சி தாவின் உண்மையான முகவெட்டையும் உடலமைப்புகளையும் சோதித்தோம். அதை, வீடியோவில் பதிவாகி இருக்கும் உருவங்களின் முகவெட்டு மற்றும் உடலமைப்போடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, அந்த வீடியோ பொய் எனக் கண்டறிய முடிந்தது’ எனக்கூறி இருக்கிறார்கள்.
நித்தி போலி... லெனின் வீடியோ அசல்!
நித்தி தரப்பு கத்தையாக‌ வைத்திருக்கும் இந்த நான்கு 'பலே’ ரிப்போர்ட்களுக்கும் பதிலாக‌ சி.ஐ.டி. தரப்பு வைத்திருப்பது டெல்லியில் உள்ள ஃபோரன்சிக் லேப் கொடுத்த மூன்று பக்க ரிப்போர்ட்தான். அதுகுறித்து சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் விரிவாகப் பேசினார்கள். ''அமெரிக்கா, ஆப்ரிக்கா என்று எங்கே போய் வேண்டுமானாலும் நித்தி ஆயிரம் ரிப்போர்ட் வாங்கி வரட்டும். இந்திய நீதிமன்றங்கள் டெல்லியில் உள்ள ஃபோரன்சிக் சயின்ஸ் லேபரட்டரி அளிக்கும் சர்ட்டிஃபிகேட்டை மட்டும்தான் நம்பும். மற்றவற்றை ஏற்றுக்கொள்ளாது.
லெனின் வீடியோ எடுத்த ஸ்பை கேமரா, ரெக்கார்டான சென் டிஸ்க் சிப், பதிவு செய்யப்பட்ட மோசர்பேர் டி.வி.டி., புகைப்படங்கள், ஆறு வீடியோ தொகுப்புகள் என எல்லாவற்றையும் ஃபோரன்சிக் சயின்ஸ் லேபரட்டரி பக்காவாகப் பரிசோதித்து இருக்கிறது. லெனின் கொடுத்த ஒரிஜினல் ஃபர்ஸ்ட் காப்பி வீடியோவில் இருப்பது நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும்தான் என்பதைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது. இதை மறைக்கவும், நீதிமன்றத்தையும் போலீஸையும் திசை திருப்பவும், நித்தி இந்த மாதிரி ரிப்போர்ட்களை அனுப்பி வருகிறார். பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால், அது உண்மையாகி விடாது'' என்று சீறுகிறார்கள்.  
ஆட்டம் காட்டும் ஆண்மை பரிசோதனை!
சி.ஐ.டி. போலீஸார் எட்டு முறை சம்மன் அனுப்பியும், ஆஜர் ஆகாமல் டிமிக்கிக் கொடுத்த நித்தியை, ஆண்மைப் பரிசோதனைக்கு ஆஜராகும்படி நீதிமன்றமே கட்டளை இட்டது. பெங்களூரு விக்​டோரியா மருத்துவமனையில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு, நித்திக்கு ஆண்மை பரிசோதனையும், குரல் பரிசோதனையும், முழு உடல் பரிசோதனையும் செய்யக் காத்திருக்கிறது. இந்தநிலையில், சிஐ.டி. போலீஸுக்கு ரகசியத் தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதாவது,  சி.ஐ.டி. போலீஸார் ஆண்மைப் பரிசோதனை செய்யப்போகும் தேதியை முன்கூட்டியே அறிவித்துவிட்டால், நித்தி ஐந்து நாட்கள் சாப்பிடாமல் ஈரத் துணியுடன் குண்டலினி யோகா செய்து, உடலின் ஹார்மோன்கள் உற்பத்தியை வெகுவாகக் குறைத்து விடுவார்’ என நித்திக்கு நெருக்கமானவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஒருவேளை சோதனையில் நித்தி, அப்படி ஏதேனும் நிகழ்த்திக் காட்டிவிட்டால், ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பொய்யாகிவிடும் என்பதால் ரொம்பவே உஷாராக‌ இருக்கிறது சி.ஐ.டி. போலீஸ். பரிசோதிக்கும் நாளையும் மருத்துவர்களின் பெயர்களையும் ரகசியமாக வைத்துள்ளனர்.
பிறந்த தேதி, படிப்பு குளறுபடி!
தன்னுடைய இயற்பெயரான ராஜசேகரனை, சாமியாரான பிறகு சுவாமி பரஹம்சா நித்தியானந்தர் என மாற்றிக்கொண்ட நித்தி, ஆசிரமக் குறிப்புகளில் ஆரம்பித்து விக்கிபீடியா வரை தன்னுடைய பிறந்த நாளை 1978 ஜனவரி 1- எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவரது பாஸ்போர்ட்டிலோ அவரது பிறந்த நாள் 13-03-1977 என கொடுக்கப்பட்டு இருக்கிறது. 'பிறந்த நாள் சர்ச்சை இருக்கிறதே?’ என்ற கேள்வியோடு நித்தியின் சீடர்களை அணுகியபோது, 'ஞானிகளும், கடவுளின் அவதார புருஷர்களும் இரண்டு முறை பிறப்பார்கள். அதை விமர்சித்தல் பாவம்’ என்கிறார்கள்.   ஆர்த்தியின் வாக்குமூலம், ஃபோரன்சிக் ரிப்போர்ட் தில்லுமுல்லு, வயது, படிப்பு உள்ளிட்ட குளறுபடிகள் குறித்து நித்தியானந்தாவிடம் பேச பலமுறை முயற்சித்தோம். ''ஜூ.வி-க்கு சுவாமி பதில் சொல்ல மாட்டார்'' என்று அவரது தரப்பில் சொன்னார்கள். கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் வளைக்கும்போது பதில் சொல்வாரா என்று பார்ப்போம்!

''அந்த இரண்டு பெண்கள்!''
லெனின் வெளியிடாத ரகசியம்
 நித்தியானந்தா தரப்பினரால் போடப்பட்ட வழக்கு ஒன்றுக்காக வாரணாசி கோர்ட்டில் ஆஜராக புறப்பட்ட லெனினை சென்னையில் சந்தித்துப் பேசினோம்.
''நித்தியானந்தாவுக்கும் உங்களுக்கும் எப்படி பிரச்னை ஆரம்பித்தது?''
''நித்தியானந்தாவை கடவுள் என்று நம்பி நான்கு வருஷம் பாத பூஜை செய்து இருக்கிறேன். வெறும் ஆன்மிக ஸ்தாபனமாக மட்டும் இல்லாமல், அரசியல் சார்ந்த இயக்கமாக தியான பீடத்தை மாற்றத் திட்டம் போட்டார். 2016-ல் நித்தியானந்தா யாரைக் கை காட்டுகிறாரோ அவர்தான் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று திட்டம் வகுத்தார். 2020-ல் இந்தியாவின் பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக இருக்கணும்; 2025-ல் உலகம் முழுக்கப் போற்றப்படும் 'வாட்டிகன்’ மாதிரி நித்தியானந்தா மாறணும் என நினைத்தார். இதற்காக உலகம் முழுக்கத் தனது மன்றங்களை வைத்து கூட்டம் சேர்க்க ஆரம்பித்தார். தமிழகம் முழுக்க இருக்கும் ஆன்மிக மடங்கள் அத்தனையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பது 2007-ம் ஆண்டே நித்தியானந்தா எடுத்த முடிவு.
நித்தியானந்தா தவறு செய்கிறார் என்று தெரிந்த பிறகுதான் நாங்க அவரோட அறையில் வீடியோ கேமரா வெச்சோம். அந்த வீடியோவை வெச்சுப் பணம் பறிக்க வேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது. அப்படி நான் நினைத்திருந்தால், நான் யார் என்பதோ நித்தியானந்தா யார் என்பதோ உலகத்துக்கு தெரியாமலே போயிருக்கும். அவர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு நானும் ஒரு குட்டி ஆதீனமாக செட்டில் ஆகி இருப்பேன். ரஞ்சிதாவைப் பழி வாங்கவேண்டும் என்பதும் என் நோக்கம் கிடையாது. நித்தியானந்தாவுக்கு வைத்த பொறியில் ரஞ்சிதா சிக்கிக் கொண்டார். 22 மணி நேரம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ரஞ்சிதா தவிர வேறு இரண்டு பெண்களும் வருகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அந்த இரண்டு பெண்களைப் பற்றிய விவரங்களை என்னால் சொல்ல முடியாது.''
''ஆர்த்தி ராவ் சொல்லி வரும் புகார்களை எல்லாம் கவனித்​தீர்களா..?''
''ஆர்த்தி ராவ் மட்டும் இல்லை. நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் 20 பேரும் ஆண்கள் 10 பேரும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். யாராவது நித்தியானந்தா பற்றி வாய் திறந்தால், அவர்கள் மீது ஏதாவது வழக்குப் போட்டு, கோர்ட்டுக்கு அலைய வைப்பதுதான் நித்தியானந்தாவின் வழக்கம். என் மீது பல்வேறு இடங்களில் 12 வழக்குகளை போட்டு இருக்கிறார்கள். கோர்ட்டில் ஆஜராக ஊர் ஊராகப் போகவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. நித்தியானந்தா செய்த தவறுகளை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மட்டும்தான் நான் செய்த தவறு.
2007-ல் இருந்து 2010-ம் ஆண்டு வீடியோ வெளியாகும் காலம் வரை நித்யானந்தாவுக்கு பெர்சனல் செகரெட்டரியாக இருந்த கோபிகா என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது. அவர் வெளியில் வந்தார் என்றால், இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். நித்தியானந்தாவைப் பற்றி வெளியில் சொல்லப்படாத ஒரு மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. அதைக் கூடிய சீக்கிரமே நான் சொல்வேன்'' - நிறுத்தி நிதானமாக சொல்லி முடித்தார் லெனின்.

No comments:

Post a Comment