Wednesday, July 4, 2012

நில மோசடியா? ஜெயலலிதாவின் பழிவாங்கும் நடவடிக்கையா? துக்கையாண்டியின் நிலைமை என்ன?


ஐ.பி.எஸ். அதிகாரிகள் சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. புதுவரவு... துக்கையாண்டி. பணியில் இருந்து ஓய்வுபெறுவதற்கு ஒரு நாள் முன்பு, அவர் மீது நடவடிக்கை பாய்ந்து, ஒய்வூதியப் பலன்களுக்கும் குழிவெட்டி இருக்கிறது ஒரு நில மோசடிப் புகார்! 
என்ன நடந்தது?
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜய்யா. மகேந்திரகுமார் கம்பானி என்பவரின் நிலத்தை வாங்குவதற்கு, அந்த நிலத்தின் பவர் ஏஜென்ட்டான ரவியுடன் ஒப்பந்தம் செய்து, முன்பணமாக ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தார் ராஜய்யா. அதன்பிறகு, நீலாங்கரை சார்பதிவாளர் அலு​வலகத்தில் வில்லங்கம் போட்டுப் பார்த்தார். அப்போதுதான், ராஜய்யா வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கும் நிலத்தை ஏற்கெனவே, தனலட்சுமி என்பவர் வேறு ஒருவருக்கு விற்று இருப்பது தெரிந்தது.
நிலத்துக்கு உரிமையாளரான மகேந்திரகுமார் கம்பானியிடம் இருந்து, 2007-ம் ஆண்டு தனலட்சுமி அந்த நிலத்துக்கான பவரைப் பெற்று, அதைத் திருச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதன்பிறகு அந்த இடத்தை சுப்புலட்சுமி என்பவருக்கு விற்பனை செய்திருக்​கிறார். அடுத்த கட்ட விசாரணையில், ரவிதான் உண்மையான பவர் ஏஜென்ட் என்பதும் தனலட்சுமி மோசடிப் பேர்வழி என்ற செய்தியும் ராஜய்யாவுக்குத் தெரிய வந்தது. 1997-ம் ஆண்டே இறந்துவிட்ட மகேந்திரகுமாரிடம் இருந்து 2007-ம் ஆண்டு பவர் பெற்றதாக தனலட்சுமி திருச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதை அறிந்து,  நீலாங்கரை போலீஸில் புகார் அளித்தார். இதை விசாரிக்கத் தொடங்கிய நேரத்தில்தான், தனலட்சுமி மற்றொரு நிலத்துக்கும் இதேபோல், போலியாக பவர் பத்திரம் தயாரித்து சுப்புலட்சுமிக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதில், சுப்புலட்சுமி என்று சொல்லப்படுபவர் துக்கையாண்டியின் மனைவி!
இந்த விசாரணையின்போதுதான், போலி பவர் பத்திரங்களைத் தயார் செய்ததில், துக்கை​யாண்டியின் அதிகாரம் விளையாடி இருப்பதைக் கண்டுபிடித்தனர். மொத்த நிலத்தின் அளவு 10 கிரவுண்ட். லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி-யே தலையிட்டதால், பத்திரப்பதிவு அதிகாரிகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் தனலட்சுமிக்கு போலி பவர் வழங்கி அதைப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்... என்ற அடிப்படையில் இப்போது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
தனலட்சுமியைப் பிடிக்க போலீஸ் தீவிர முயற்சி செய்தது. ஆனால், முடியவே இல்லை. ஏனென்றால் தனலட்சுமி என்பதே கற்பனை கேரக்டராம்!
''போலியாக பவர் பெற்ற போலி தனலட்சுமி, அந்த இரண்டு இடங்களையும் நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து துக்கை​யாண்டியின் மனைவி சுப்புலட்சுமி பெயருக்குப் பதிவு செய்து கொடுத்திருக்கிறார். நிலத்தை வாங்குவது லஞ்ச ஒழிப்புத்துறைக் கூடுதல் டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி என்பதால் திருச்சி பத்திரப்பதிவு அலுவலர்களும், நீலாங்கரை பத்திரப்பதிவு அலுவலர்களும் விதிமுறைகளை மீறி இருக்கிறார்கள்.
எந்தக் கேள்வியும் கேட்காமல் பத்திரப்பதிவு செய்ய துக்கையாண்டி கொடுத்த பிரஷரை, நீலாங்கரை பத்திரப்பதிவு அதிகாரி ஒருவர், மிகத் தெளிவாக போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். அடுத்தவர் நிலத்தை தனது மனைவி பெயரில் பதிவுசெய்துகொண்ட துக்கையாண்டி, அதை அமெரிக்காவில் வசிக்கும் தனது மூத்த மகள் யூபுவின் பெயருக்கு வேகவேகமாகப் பதிவு செய்து கொடுத்து உள்ளார்'' என்கிறது போலீஸ் வட்டாரம்.
இப்போது, சஸ்பெண்ட் செய்யப்​பட்டு இருக்கும் துக்கை​யாண்டிக்கு எதிரான புகார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பதி​வாகி, அவரது மனைவி பெயரில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டும் விட்டது. ஆனால், துக்கையாண்டி ஓய்வு பெறு​வதற்கு, முந்தையநாள் வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. இந்த விவரங்களை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், தமிழக உள்துறைச் செயலாளருக்கும் மத்திய உள்துறைச் செயலாளருக்கும் புகார் அனுப்பினாராம்.
இந்த விவரங்கள் முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட, ஒரே நாளில் துக்கையாண்டி பற்றிய 20-க்கும் மேற்பட்ட ஃபைல்கள் சேகரிக்கப்​பட்டு, 29-ம் தேதி  காலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துக்கையாண்டியிடம் இந்தக் குற்றச்​சாட்டுகள் குறித்துப் பேச முயன்றோம். ''நான் ஒன்றும் பேச முடியாது. நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக எந்த உத்தரவும் எனக்கு இதுவரை வரவில்லை'' என்றார்.
''வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தார் என்று பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி ஜெயலலிதா மீது வழக்கு போட மூளையாக இருந்தவர் துக்கையாண்டி. அதற்குப் பழிவாங்கவே அவர் மீது இந்த கடைசி நிமிட சஸ்பெண்ட் உத்தரவு வந்துள்ளது’ என்று சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததற்கு உள்நோக்கம் இருக்கலாம். ஆனால், துக்கையாண்டி உத்தமரா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி!

No comments:

Post a Comment