Monday, July 23, 2012

என்று தணியும் இந்த இன் ஜினீயரிங் மோகம் ? !



'இன்ஜினீயரிங் படித்தால்... நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து விடும்; கார், பங்களா என்று வசதியான, சொகுசான வாழ்க்கையை அடைந்துவிடலாம்' என்கிற ஆசையின் வெளிப்பாடாகத்தான் பெரும்பாலான பெற்றோர்... கடனை வாங்கி, வீட்டை, நகையை அடகு வைத்து... கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை இன்ஜினீயரிங் படிக்க வைக்கிறார்கள்.

ஆனால், அனைவருமே நல்ல மார்க் வாங்கி நான்கு வருடத்துக்குள் படிப்பை முடித்து விடுகிறார்களா? அப்படி பாஸாகி வரும் அத்தனை லட்சம் மாணவர்களுக்கும் உடனே வேலை கிடைத்து விடுகிறதா? கிடைக்கும் வேலையில் அவர்கள் சாதிக்கிறார்களா? 

''தமிழக இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நேரத்தில்... சரியான கேள்வியோடுதான் வந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கிற 535 இன்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 'இன்ஜினீயர்’ என்கிற பெருமைமிகு பட்டத்துடன் வெளியே வருகிறார்கள். ஆனால், இவர்களில் பாதி பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. மீதி..?'' ''இன்ஜினீயரிங் படித்துவிட்டால் என் பிள்ளைக்கு உடனே கைநிறைய சம்பளம் கிடைத்துவிடும் என்கிற அறியாமை மற்றும் ஆசை பெற்றோர் பலரிடமும் நிறைந்திருப்பதுதான்... இன்ஜினீயரிங் கல்லூரிகள் வருடம்தோறும் லட்சம் லட்சமாக இவர்களைத் தயாரித்து (?!) அனுப்புகிறது. அப்படி வருபவர்களில் எத்தனை பேர், உண்மையிலேயே இந்தப் படிப்பை படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுப் படித்தவர்கள்? இதனால்தான், ஒவ்வொரு வருடமும் 50 சதவிகித மாணவர்களே நல்ல மதிப்பெண்களுடன் பாஸாகி வருகிறார்கள். மீதி என்ன ஆனார்கள் என்பது பற்றி யாரேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அவர்கள் தங்கள் படிப்புக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஓட்டல் வேலையில்கூட குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகிறார்கள். அல்லது வழிமாறிப் போகிறார்கள்''

''மற்ற ஊழல்களைவிட கல்வி ஊழல்தான் நாட்டில் நம்பர் 1 ஊழலாக இருக்கிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஒரு வகையில் துணை போகிறோம். இன்ஜினீயரிங் படிப்பில் பிள்ளைகளை சேர்க்கும் முன்... கல்லூரி எப்படி இருக்க வேண்டும் என்று அக்கறை செலுத்துவது இல்லை. 'ஏஐசிடிஇ’ (All India Council for Technical Education) வழிகாட்டல்படி, ஒவ்வொரு கல்லூரியும் 'மேன்டேட்டரி டிஸ்குளோஷர்’ என்கிற கட்டாயமான வெளிப்படைத் தன்மைபடி, தங்கள் கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் எத்தனை மாணவர்கள் சேர்ந்தனர், அவர்களில் எத்தனை பேர் பாஸ் செய்தனர் என்பது போன்ற தகவல்களை தங்கள் வெப்சைட்டில் கண்டிப்பாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பத்து சதவிகித கல்லூரிகள்கூட அறிவிப்பது இல்லை. இதை அப்டேட் செய்யாத கல்லூரிகள்... தரமற்றவைதான்.கல்லூரியின் தேர்ச்சி சதவிகிதத்தைத் தெரிந்துகொண்டு சேர்ப்பது, மாணவனின் எதிர்கால நலனுக்கு உதவும். அண்ணா யுனிவர்சிட்டியின் வலைதளத்துக்குச் சென்றால்... இதைத் தெரிந்து கொள்ளலாம். அக்கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றும் பேராசிரியர்கள், லெக்சரர்களின் கல்வித் தகுதியைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருந்தால்தான்... மாணவர்களும் தகுதியானவர்களாக இருப்பார்கள். சம்பந்தப்பட்ட கல்லூரி யின் வலைதளத்துக்குச் சென்றால்... இதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின்பு, பத்து வருடங்கள் கழித்து பதவி உயர்வு வரும்போதும், அவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்பதையும் கணக்கில் எடுக்கிறார்கள். இன்று பல நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், தரமான கல்லூரிகளில் படித்து வந்தவர்கள். ஆகையால், ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள், ரிசல்ட் விகிதம் எல்லாவற்றையும் பரிசீலித்தே கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்!
''அமெரிக்கா போன்ற நாடுகள், இந்தியாவில் இருந்து வரும் இன்ஜினீயர்களிடம் தரமில்லை என்று நினைப்பதால், அவர்கள் வாங்கியிருக்கும் பொறியியல் பட்டத்துக்கு உண்மை யிலேயே தகுதியானவர்களா என்பதை அறிய தனியாக பரீட்சை எழுத வைக்கிறார்கள் (இதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள www.washingtonaccord.org என்ற வலைதளத்தைப் பார்க்கவும்)  என்பதிலிருந்தே நம் பொறியியல் டிகிரியின் நிலையை புரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் இன்ஜினீயரிங் படிப்பின் மீதான மோகத்திலிருந்து பெற்றோர் விடுபடுவது நல்லது. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்பது மூடநம்பிக்கை. இத்துறையில் படித்து வருபவர்கள் 10 சதவிகிதத்தினர் மட்டுமே அதேதுறையில் பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள்... மற்ற மற்ற துறைகளில்தான்.

பெருகும் காலியிடங்கள் ! 

97-ம் ஆண்டில், தமிழகத்தில் சுமார் 90 இன்ஜினீயரிங் கல்லூரிகள்தான் இருந்தன. இது, 2007-ம் ஆண்டில் 277 ஆக உயர்ந்தது. தற்போது 535 கல்லூரிகள் என்று வந்து நிற்கிறது. இப்படி கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவதால்... காலி இடங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதும் நடக்கிறது. இந்தக் கல்வியாண்டில் (2012-13), மொத்தம் 2,51,454 இன்ஜினீயரிங் ஸீட்டுகள் உள்ளன. விண்ணப்பித்திருப்பதோ... 1,80,071 மாணவர்கள்தான். சுமார் 70 ஆயிரம் இடங்கள் இந்த வருடமும் காலிதான். இந்நிலையில், இந்த ஆண்டு இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது... பலரையும் கவலைக்குள்ளாக்கியிருக் கிறது. இதன் காரணமாகவும் மாணவர் சேர்க்கை குறையக் கூடும் எனத் தெரிகிறது ! 

No comments:

Post a Comment