Monday, July 16, 2012

எனது இந்தியா! (கோகினூர் வைரம் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



கோகினூர் வைரம் - இந்தியாவின் விலை மதிக்க முடியாத செல்வங்களில் ஒன்று.கோகினூர் வைரம் அந்நியரால் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களில் ஒன்று. அத்துடன் தரியா நூர் வைரம், மயிலாசனம், ஹோப் வைரம், திப்புசுல்தானின் இயந்திரப்புலி... இப்படிப் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அரிய கலைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து அபகரித்துக் கொண்டு செல்லப்பட்டன. வெளிநாட்டு மியூசியங்​களில் அவை இப்போது காட்சி தருகின்றன!கிறிஸ்துவர்களின் புனிதப் பாத்திரமான ஹோலி கிரைல் பற்றி இன்றளவும் ஆங்கிலேயர்கள் தேடி வருகிறார்கள். அதைப்பற்றி படம் எடுக்​கிறார்கள். ஆனால் நம்மவர்களோ, இந்தியாவின் பெருமைக்குரிய மயிலாசனம் எங்கே இருக்கிறது, கோகினூர் வைரம் எப்படிக் கொள்ளை போனது என்பதை அறியாமலேயே இருக்கிறார்கள்.சமீபத்தில், பத்மநாபசாமி கோயிலின் காப்பறை​களில் கிடைத்த பல கோடி மதிப்புள்ள தங்கம் போல நூறு மடங்கு தங்கம் இந்தியாவில் இருந்து கொள்ளை​​ போய் இருக்கிறது. களவுபோன கலைச் செல்வங்களை மீட்க வேண்டும் என்று இந்தியா முயற்சி எடுக்கவில்லை.

ஆந்திராவின் கோல்கொண்டா பகுதி வைரச் சுரங்கம் மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவின் அரிய வகை வைரங்கள் யாவும் இங்கிருந்து கிடைத்தவையே. கோகினூர் போலவே ரீஜென்ட், பைகாட், ஷா வைரம் எனப் புகழ்பெற்ற பல வைரங்கள் இந்தியாவில் கிடைத்துள்ளன.

ரீஜென்ட் வைரமானது, கோல்கொண்டாவின் பர்க்கால் சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. அன்றைய கவர்னராக இருந்த தாமஸ் பிட் அந்த வைரத்தைத் தனதாக்கிக்​கொண்டார். வைரம் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு பட்டை தீட்டப்பட்டு, பிட் வைரம் என்று பெயரிடப்பட்டது. பிறகு 1717-ல் பிரெஞ்ச் மன்னரால் விலைக்கு வாங்கப்பட்டு ரீஜென்ட் என்று பெயர் மாற்றம் கொண்டது. இந்த வைரத்தைத்தான் நெப்​போலியன் தன்னுடைய வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார் என்கிறார்கள். இன்று ரீஜென்ட் வைரம் பாரீஸ் நகரில் உள்ள லூவர் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பைகாட் வைரம் 48 காரட்டுகள் கொண்டது. இது 1775-ல் மெட்ராஸ் கவர்னராக இருந்த பேரன் பைகாட்டுக்கு அன்பளிப்​பாகக் கிடைத்த ஒன்று. அதனால் இதை பைகாட் வைரம் என்று அழைக்​கிறார்கள். இந்த வைரம் இப்போது யாரிடம் இருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை!

ஷா வைரம் இன்று ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் உள்ளது. இது நிஜாம் ஷா என்ற இந்தியக் கவர்னரின் பெய​ரோடு கூடியது. இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட அரிய வைரங்களில் இதுவும் ஒன்று.

1642-ம் ஆண்டு ழான் பாப்ஸ்டே டவெர்னிர் என்ற பிரெஞ்சுப் பயணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். இவர் ரத்தினப் பரிசோதகரும்கூட. இவர் இந்தியாவின் பழைமையான கோயில் ஒன்றில் இருந்து 112 கேரட் கொண்ட நீல வைரம் ஒன்றைத் திருடிக்கொண்டு போய்விட்டார். இந்த வைரம் கொல்லூர் சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


1668-ம் ஆண்டு டவெர்னிர் பிரான்ஸுக்குச்சென்று சேர்ந்தார். அந்த நீல  வைரத்துடன் வேறு 44 வைரங்​களையும் சேர்த்து பிரெஞ்சு நாட்டு மன்னர் 14-ம் லூயிக்குப் பரிசாக அளித்தார். அதன் காரணமாக டவெர்னிர், பட்டமும் பதவியும் பெற்று முக்கியப் பிரமுகராகத் திகழ்ந்தார்.

1673-ம் ஆண்டு மன்னர் அதைப் பட்டை தீட்டச் செய்து அதைத் தனது மகுடத்தில் சூடிக்​கொண்டார். பின்பு அந்த வைரம் அவரது பேரன் வசமானது. இப்படிக் கைமாறிய வைரம் ராணி மரியா அன்டோனி கைக்குப் போய்ச் சேர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியின்போது அந்த நகைகள், பாதுகாப்பாக வைப்பதற்காக ரகசிய இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், 16-ம் லூயியும், அவரது மனைவி மேரி அன்டோனிடாய்னட்டும், புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இந்த வைரம், ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஹோப் என்ற வணிகரிடம் வந்து சேர்ந்தது. வைரம் கைக்கு வந்த சில ஆண்டுகளில் அவருடைய சொத்து முழுவதும் அழிந்து போனது.

அவரிடம் இருந்து 1908-ம் ஆண்டு துருக்கி நாட்டின் சுல்தான் ஹோப் வைரத்தை 4 லட்சம் பவுன் விலைக்கு வாங்கினார். அடுத்த வருடத்திலேயே அவரது பதவி பறிபோனது. 1911-ம் ஆண்டு மெக்லின் என்பவர் அந்த வைரத்தை விலைக்கு வாங்கினார். அவரிடம் இருந்தே ஸ்மிதானியன் மியூசியம் வசம் வைரம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வைரத்தையே ஹோப் என்று அழைக்கிறார்கள்.

ஷாஜகானின் சிம்மாசனமாக இருந்த மயிலாசனம் 1,150 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்டது. அதில் 230 கிலோ அரிய வகைக் கற்கள் பதிக்கப்பட்டன. அதன் இப்போதைய மதிப்பு 4,000 கோடிக்கும் மேல் என்கிறார்கள்.

இந்த மயில் ஆசனத்தை நேரில் கண்ட நிஜாமுதீன் பக்ஷி என்ற வரலாறு அறிஞர் 1635-ம் ஆண்டு தனது குறிப்பேட்டில், 'வைரம், வைடூரியம், கோமேதகம், பவளம் என்று பல்வேறு விலை உயர்ந்த கற்கள், தலைமைப் பொற்கொல்லராக இருந்த பேபாதல் கானிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் அந்தக் கற்களை மயிலாசனத்தில் பதித்தார். கோகினூர், அதன் முக்கிய வைரங்களில் ஒன்று.

மூன்று அடி நீளமும் இரண்டரை அடி அகலமும்​கொண்ட  சிம்மாசனம் ஐந்து அடி உயரம் இருந்தது. அதில் இரண்டு மயில் வடிவங்களும், விலை மதிப்பு இல்லாத ஐந்து வைரங்களும் பதிக்கப்பட்டு இருந்தன. இந்த மயிலாசனத்தை வடிவமைத்தவர் ஆஸ்டின் டி போர்டியூக்ஸ். இவரும் உஸ்தாத் அகமது என்ற பெர்ஷிய கட்டடக் கலை நிபுணரும், ஜியோர்னிமோ வெரோனியோ என்ற இத்தாலியரும் இணைந்துதான்  தாஜ்மஹாலை உருவாக்கினார்கள்’ என்கிறார்.

1635-ம் ஆண்டு மார்ச் 12-ம் நாள் அந்த சிம்மாசனத்தில் ஷாஜகான் அமர்ந்தார். அதை 1738-ல் நாதிர்ஷா படையெடுத்து வந்து அபகரித்துப்போனார்.

இதுபோலவே தரியாநூர் எனப்படும் 182 கேரட் வைரமும் கோல்கொண்டாவில் கிடைத்ததே. தரியாநூர் என்றால் ஒளிக்கடல் என்று பொருள். இந்த வைரம் இப்போது ஈரானிய அரச பரம்பரை நகைகள் காப்பகத்தில் உள்ளது. இதையும் நாதிர்ஷா தான் கொள்ளையிட்டுப் போனார்.
வைரங்கள் மட்டுமின்றி அரிய கலைப் பொருளான திப்புவின் இயந்திரப் புலி, லண்டனில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

திப்புவின் புலி பிரெஞ்சுக் கலைஞரால் வடிவமைக் கப்பட்டது. நிஜமான புலி ஒரு ஆங்கிலேயனைக் கடித்துக் குதறப் பாய்வதுபோல இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டது. சப்தம் வருவதற்காக அதற்குள், ஒரு இசைக்கருவி பொருத்தப்பட்டு இருக்கும். முன்னால் உள்ள கைப்பிடியை இயக்கியதும் புலி பாய்ந்து வெள்ளைக்காரனைக் கிழித்துப் போடுவது போல நகரும். உடன், அடிபட்டவனின் அவலக்குரல் கேட்கும். இந்த இயந்திரப் புலியும் லண்டனில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவை யாவையும்விட முக்கியமானது கோகினூர் வைரம். இந்தியாவின் விலைமதிப்பில்லாத சொத்து எனப்படும் கோகினூர் வைரம் இதுவரை யாராலும் விற்கப்படவும் இல்லை, வாங்கப்படவும் இல்லை. அந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் அது ஒருவரிடம் இருந்து மற்றவரால் அபகரிக்கப்பட்டு, கை மாறிக்கொண்டே இருக்கிறது!

எவர் கோகினூர் வைரத்தைக் கைவசம் வைத்திருக்​கிறார்களோ அவரே உலகை ஆள்வார் என்ற நம்பிக்கை பல காலமாக இருக்கிறது. அதுபோலவே 'கோகினூர் வைரத்தை வைத்திருக்கும் ஆண்கள் மோசமான துயரச் சம்பவங்களுக்கு உள்ளாவார்கள், பார்வை போய்விடும். ஆகவே, அந்த வைரம் பெண்களிடம் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்று ஒரு நம்பிக்கையும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

105.80 காரட் கொண்ட கோகினூர் வைரம் இன்று எலிசபெத் மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்​பட்டு இங்கிலாந்தில் டவர் ஆஃப் லண்டன் என்னும் இடத்தில் உள்ள அரச பரம்பரை நகைகளுக்கான காப்பகத்தில் பலத்த காவலுடன் பாதுகாக்கப்படுகிறது.

இந்த வைரத்தின் மதிப்பு 12,000 கோடி இருக்கும் என்கிறார்கள் வைர மதிப்பீட்டாளர்கள். பெல்ஜியத்தின் அன்ட்விட் நகரம்தான் வைரங்களை மதிப்பிடுவதில் முதன்மையானது. இந்த நகரை வைரக் கல் மையம் என்றே அழைக்கிறார்கள். இங்கேதான் உலகின் முக்கிய வைரங்களில் 70 சதவீதம் பட்டை தீட்டப்படுகின்றன.

600 ஆண்டுகளாக இந்த நகரம் வைரத்துக்குப் பட்டை தீட்டுவதில் புகழ்பெற்றது. இந்த நகரில் வைரக் கல் வீதி என்று தனித்தெரு இருக்கிறது. அந்த ஒரு தெருவில் மட்டும் 300 வைரம் தீட்டும் நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள்தான் இப்போது கோகினூர் வைரத்தை மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.

'கோகினூரின் விலை என்பது உலக மக்கள் யாவருக்கும் ஒரு நாள் உணவுக்கான செலவுத்தொகை’ என்று பாபர் காலத்தில் ஒரு குறிப்பு சொல்கிறது. 'இந்த வைரம் எங்கள் குடும்பத்துக்கு உரியது. அதைச் சீக்கியர்களின் பொற்கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும்’ என்று ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் பியாந் சிங் சந்தன்வாலியா என்ற சீக்கிய அரசப் பரம்பரையின் வாரிசு தொடர்ந்து இங்கிலாந்தை கேட்கிறார்.

'கோகினூர் வைரத்தைச் சீக்கிய அரச வம்சத்தை சேர்ந்த துலீப்சிங் இங்கிலாந்து மகாராணிக்குப் பரிசாக அளித்தார். அதன் காரணமாக ராணி அவரைத் தனது வளர்ப்புப் பிள்ளைகளில் ஒருவராக அங்கீகரித்து உரிய சலுகைகளை அளித்திருக்கிறார். ஆகவே அது எங்கள் சொத்து’ என்கிறது பிரிட்டிஷ் அரசு.

'பத்து வயதுச் சிறுவனான துலீப்சிங், மகாராணிக்கு கோகினூர் வைரத்தைப் பரிசு தந்தார் என்பது திட்டமிட்ட சதி. கோகினூரை ராணி அபகரித்துக்கொண்டார் என்று அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அதைப் பரிசளித்ததுபோல மாற்றிக்​கொண்டார்கள். கொடுத்த பரிசைத் திரும்பக் கேட்க முடியாது என்பதால், அது பிரிட்டிஷ் அரச வம்சத்தின் பொருளாகி விட்டது. கோகினூர் வைரம் சீக்கியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அது அமிர்தரசஸில் உள்ள பொற்கோயில் நிர்வாகத்துக்குத் தானமாக அளிக்கப்பட வேண்டும்’ என்று சீக்கியர்கள் இன்றும் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள். அது சட்டப்படி இயலாத காரியம். கோகினூர் இனி இந்தியாவுக்கு ஒரு காலத்திலும் கிடைக்காது என்று பகிரங்கமாக செய்தி வெளியிடுகின்றன இங்கிலாந்தின் இதழ்கள்.


விகடன் 

No comments:

Post a Comment