அப்பா ப.சி-க்கு எதிராக கணை விடுவது போலவே... மகன் கார்த்தியையும் குறி வைக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த சர்ச்சைகளைப் பற்றி எல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிகிறது கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரிடம், சில கேள்விகளை முன் வைத்தோம்!
''2ஜி ஊழலில் நீங்களும் ஆதாயம் அடைந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?''
''சுப்ரமணியன் சுவாமி யார் மீதுதான் குற்றச்சாட்டு சொல்லவில்லை. அவர் குற்றச்சாட்டு சொல்லாத அரசியல் தலைவர் ஒருவராவது இருந்தால் காண்பி யுங்கள். அவர் கூறும் கேலித்தனமான குற்றச் சாட்டுகளுக்கு அப்போது நான் பதில் சொல்கிறேன். கலைஞர், ஜெயலலிதா, சோனியா காந்தி, வாஜ்பாய்என எல்லோர் மீதும் குற்றச்சாட்டு வாசித்தார். அந்த முக்கிய வரிசையில் என்னையும் சேர்த்துக் கொண்டாரே... அந்த வரையில் சந்தோஷம்!''
''சட்டமன்றத் தேர்தலுக்கு முன், சுறுசுறுப்பாக இருந்த நீங்கள் இப்போது அமைதியாகி விட்டதாகத் தெரிகிறதே!''
''நாங்கள் தேசியக்கட்சி. எங்களுக்கென சில கட்டுப்பாடுகள் உண்டு. அதன்படிதான் செயல்பட முடியும். சிலரைப்போல ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை யுத்தம் நடத்தும் பழக்கமும் எங்களுக்குக் கிடையாது. நானும் அப்படிச் செயல்படுபவன் அல்ல!
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, எங்கள் வேகம் பல மடங்கு அதிகரித்து உள்ளது என்பதே உண்மை. அ.தி.மு.க. அரசு அத்தியாவசியப் பொருட் களுக்கு விலையை உயர்த்திய போது கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டோம். மதுரை மற்றும் கூடங்குளத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி தமிழக அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கி றோம். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொலைக்காட்சிகள் இருக்கின்றன. அதன்மூலம் சிறிய போராட்டத்தைக் கூட பூதக் கண்ணாடி கொண்டு, மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள். எங்களுக் கென்று தொலைக்காட்சி இல்லை. அதனால் எங்களின் செயல்பாடுகள் பிறருக்குத் தெரிவதில்லை. கூடங்குளத்தில் யாருடைய நிலைப்பாடு வென்றது? வைகோவுக்கு வெற் றியா... எங்களுக்கு வெற்றியா? சீமான்களுக்கு வெற்றியா... எங் களுக்கு வெற்றியா? எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த அ.தி.மு.க அரசுகூட உண்மையை உணர்ந்து எங்கள் பக்கம் வந்துவிட்டது. இதுவே மற்ற கட்சிகளாக இருந்தால் தங் கள் தொலைக் காட்சியில், 'வெற்றி... வெற்றி’ என்று தம் பட்டம் அடித்து அதிர வைத்து இருப்பார்கள். நாங்கள் அதைச்செய்யவில்லை, அவ்வளவுதான்!''
''என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்..! காங்கிரஸ் கட்சிக்கு என 'மெகா’, 'வசந்த்’ தொலைக்காட்சிகள் இருக்கிறதே?''
''அந்த சேனல்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நடத்துகிறார்களே தவிர, கட்சியின் சேனல் அல்ல. 'கலைஞர்’, 'ஜெயா’, 'மக்கள்’, 'கேப்டன்’ என்பது சம்பந்தப்பட்ட கட்சிகளுக்காகவே இருக் கிறது. அதைப்போல் காங்கிரஸ் கட்சிக்கு என்று தனியாக இல்லை என்பதைத்தான் சொல்கிறேன்.''
''அ.தி.மு.க ஆட்சியின் செயல்பாடு குறித்து?''
''அடித்தட்டு மக்கள் மனதில் பெரிய மாற்றமோ, தாக்கமோ ஏற்படவில்லை. மின்சாரம், பஸ் கட்டணம், பால் விலை ஆகியவற்றை உயர்த்தியதால் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இந்த ஒரு வருட காலத்தில் தங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந் துள்ளது என்று எந்தத் தமிழனையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம். நான் ஆட்சிக்கு வந்தால் ஒன்றரை ஆண்டில் மின்வெட்டு இல் லாமல் செய்வேன் என்றார் ஜெயலலிதா. ஒன்றும் நடக்கவில்லையே! அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்த ஜெயலலிதா, பெட்ரோல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தது வேடிக்கையிலும் வேடிக்கை. அவர்கள் ஏற்றினால் பொருளாதாரக் காரணமாம். நாங்கள் ஏற்றினால் நிர்வாகச் சீர்கேடாம்!''
''பதவி கிடைக்கவில்லையா... அல்லது, பெறுவதில் தயக்கமா? இதில் ஏதாவது ராகுல் காந்தி பாணியைப் பின்பற்றுகிறீர்களா?''
''எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனா, கொடுக்க மாட்டேங்கிறாங்க (சிரித்தபடி). தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். அந்தத் தகுதி ராகுல் காந்திக்கு நிறையவே இருக்கிறது. எனவே கட்சியிலும், ஆட்சியிலும் அவர் விரைவில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். பதவி கொடுத்தால் நானும்தான் ஏற்றுக் கொள்வேன்!''
''சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் ப.சிதம்பரத்தை மிகக்கடுமையாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளாரே?''
''அவர், 'எந்த நிலை'யில் அப்படிப் பேசினாரோ, தெரியவில்லை!''
No comments:
Post a Comment