மனத்தில் அன்பும், சந்தோஷமும் இருக்கிற போதுதான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவாக இருக்கிற போது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.
தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியைப் பார்வதி - பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி - மகாவிஷ்ணுவாகவோ நினைத்துக் கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும்; புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாகப் பாஸ் பண்ணி விடலாம்.
ரொம்பப் புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கிப் பாஸ் பண்ணினால்கூட, நல்லவன் என்ற பெயரெடுக்கா விட்டால் பிரயோஜனம் இல்லை. நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்லவனாக இருந்துவிட்டால் அது நமக்கு சந்தோஷம்; மற்றவர்களுக்கும் சந்தோஷம்; பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அதுதான் உதவும். நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக, இரண்டாகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்திதான்.
இந்தச் சின்ன வயதிலிருந்தே ஸ்வாமியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போதுதான் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும் முடியும். வயதாக ஆக வேறு பல தினுசான ஆசைகள் எல்லாம் வந்து, ஸ்வாமியை நினைக்கவொட்டாமல் இடைஞ்சல் செய்யும். இப்போது உங்களுக்கு அந்த இடைஞ்சல் இல்லை. அதனால் இப்போதே அவரிடம் பக்தி வைக்கப் பழகிவிட்டால் அப்புறம்கூட அந்த ஆசைகள் உங்களிடம் வந்து உபத்திரவம் பண்ணாது.
நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும். நிறைய மார்க் வாங்கி, நன்றாய்ப் பாஸ் பண்ணி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும். இதற்கெல்லாம் வழியாக இப்போதிலிருந்தே ஸ்வாமியிடம், அம்மையப்பனிடம் பக்தியோடு இருங்கள்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
No comments:
Post a Comment