அசராமல் அடிக்கும் ஆர்த்தி ராவ், அடங்காத லெனின் கருப்பன், விடாமல் துருவும் கர்நாடக சி.ஐ.டி. போலீஸ், திகில் கிளப்பும் கலிபோர்னியா நீதிமன்றம்... இவை போதாது என்று நித்தியானந்தாவுக்குப் புதிதாக பீதியைக் கிளப்ப புறப்பட்டு இருக்கிறார் விநய் பரத்வாஜ். ''இது வரை பெண் புகார்களில் சிக்கிய நித்தி இப்போது 'ஆண்’ புகாரில் மாட்டி இருக்கிறார்'' என்று கண் சிமிட்டுகிறது கர்நாடக போலீஸ்!
விநய் பரத்வாஜின் சொந்த ஊர் மைசூர். பெங்களூருவில் படித்து முடித்து 2003 முதல் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினினியராக பணிபுரிகிறார். ஐ.டி. துறை அதிக சம்பளத்தைத் தருவது போலவே, தாராளமாக மன அழுத்தத் தையும், டென்ஷனையும் வாரி வழங்கி விட்டது அவருக்கு. இப்படி தீவிர மனஅழுத்தத்தில் மூழ்கிய நேரத்தில்தான், நண்பர்கள் மூலமாக நித்தியானந்தா அறிமுகமாகி இருக்கிறார்.
2004-ம் ஆண்டு அமெரிக் காவில் இருக்கிற நித்தியின் தியான பீடத்தில் நுழைந்தார். அங்கு கற்ற யோகாவும், தியானமும் அவருக்கு மனஅமைதி தரவே, நித்தியின் தீவிர பக்தராக மாறினார். பின்னர், நித்தியின் மூலமாகவே மீளமுடியாத மன வேதனைகளுக்கும் ஆளானார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சுப்பீரியர் கோர்ட்டில் (Superior court of the State of California) விநய் அளித்திருக்கும் வாக்குமூலத்தின் மொத்த பக்கங்கள் 92. அதில் நித்தி மீது மட்டுமில்லாமல் அவரின் சீடர்களான சிவ வல்லபனேனி, அவரின் மனைவி ராகினி வல்லபனேனி, கோபால் ரெட்டி ஷீலம், வித்யா விஸ்வநாதன் (காணாமல் போன மா நித்ய கோபிகா) ஆகியோர் மீதும் அமெரிக்காவில் இயங்கி வரும் நித்தியின் தியான பீடம், லைஃப் ப்ளீஸ் ஃபவுன்டேஷன் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் மீதும் உடும்புப் பிடி போல் அடுக்கடுக்காய் வழக்குகள் போட்டு இருக்கிறார். இந்த வழக்குகள் இப்போது கிளைமாக்ஸை எட்டி இருக்கிறது. கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரும் 19-ம் தேதி வர இருக்கும் தீர்ப்பை விட, விநய் போட்டிருக்கும் வழக்குகள்தான், நித்தியின் தலைவிதியை மாற்றப் போகிறது என்கிறார்கள். ஏனென்றால், அமெரிக்காவில் கொலை வழக்கை காட்டிலும் பாலியல் சார்ந்த வழக்குகளுக்குத்தான் தண்டனை அதிகம். இனி, 'ஆபாச’ வாக்குமூலத்தில் இருந்து சில நாகரிகப் பகுதிகள் மட்டும் இங்கே...
ஜீவன் முக்திக்கு காமமே வழி!
''2005 மே மாதம் நானும், ஆசிரம முக்கியஸ்தர்களும் நித்தியோடு இமயமலைக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றிருந்தோம். நித்தி மீது அளவு கடந்த பக்தியும், கடவுளுடனேயே வாழ்கிறோம் என்ற பெருமிதத்தோடும் போயிருந்த எனக்கு அதிர்ச்சி காத் திருந்தது. மே 29, காலை 7 மணி என் வாழ்வில் மறக்க முடியாத கறுப்பு நாள். இமயமலைக்குப் போகும் வழியில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் பிளாசாவில் தங்கினோம். அப்போது, நித்தியின் பெர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'சுவாமி உன்னை அழைக்கிறார். அவருடைய கால் களைப் பிடித்து விடும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது’ என்றார். நானும் பயபக்தியோடு அவரின் கால்களைப் பிடித்து கொண்டிருந்த போது, 'இந்த டூரை என்ஜாய் பண்றியா?’ என்று கேட்டார். நான், 'ஆம் சுவாமி’ என்றேன்.
'கதவையும், ஜன்னலையும் மூடு. காற்று அதிகமாய் வருகிறது’ என்றார். நானும் அவ்வாறு செய்து திரும்பிய கணம், நித்தி என்னைக் கட்டிபிடித்து முத்தமிட்டார். எனக்கு அருவருப்பாக இருந்ததால், 'ச்சீய்..’ என அவரைத் தள்ளி விட்டேன். கட்டிலின் மேல் போய் விழுந்தார். 'என்னை ஜீவன் முக்தி அடைந்த குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டதும் 'ஆம்’ என்றேன்.
'ஜீவன் முக்தி அடைய காமமே வழி... வா'' என்று என்னை அணைத்தார். அதுதான் நித்திக்கு முதன்முதலாய் பலியானது. அந்த டூர் முழுக்க ஜீவன் முக்தி என சொல்லிச் சொல்லி என் மனதை கவர்ந்து, மூளைச்சலவை செய்து பல முறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். அந்தக் கணங்களில் நான் அடைந்த வேதனைகளைச் சொல்லில் வடிக்க இயலாது''.
எனக்காகவே வாஷிங்டன் வந்தார்!
''இமயமலை ஆன்மிகச் சுற்றுலாவில் காமத்தால், நித்தி என்னை கொன்று தின்றதால் வாழவே பிடிக் காமல், அவசரம் அவசரமாக வாஷிங்டனுக்குத் திரும்பினேன். அந்த சமயம் (ஜூன் மாதம் 2005) நித்தி வேண்டுமென்றே 'தியான பீட வகுப்பு’ என்ற பெயரில் என்னைத் தேடி வாஷிங்டன் வந்தார். அவருடைய சீடர்களான சிவ வல்லபனேனி, ராகினி வல்லபனேனி, கோபால் ரெட்டி ஷீலம், கோபால் ரெட்டி மற்றும் தனசேகர் ஆகியோர் நான் நித்தியிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியதைப் பற்றிப் பேசி, மனமாற்றத்தை ஏற்படுத்தினர். 'ஆன்மிகத்தில் குருவின் காலைப் பிடித்து விடுவது, அவருக்காக தன்னையே அர்ப்பணிப்பது, குருவின் ஆசையைத் தீர்த்து வைப்பது எல்லாம் பக்தர்களுக்கு வாய்த்த வரம். ஒழுங்காய் போய் குருவுக்குப் பணிவிடை செய்’ என்று நித்தியின் அறைக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளி விட்டார்கள்.
'உனக்கு ஈகோ அதிகமாக இருக்கிறது. அதைக் குறைக்காமல் நீ தீட்சை அடைய முடியாது. நான் உன்னை செம்மைப்படுத்துகிறேன்’ என்று சொல்லிக் கொண்டே என் மீது பாய்ந்தார். மீண்டும் மன அளவிலும், உடல் அளவிலும் நான் தகித்தேன்.''
வற்புறுத்திக் கையெழுத்து!
''அதன்பிறகு ஜீவன் முக்தி அடைவது எப்படி? என்று யோசித்ததைக் காட்டிலும், நித்தியிடம் இருந்து எப்படித் தப்பிப்பது? என்றுதான் அதிகமாக யோசித்தேன். ஏனென்றால் நித்தி சாதா ரணமானவர் கிடையாது, சக லமும் அறிந்த கில்லாடி. அவர் பலத்தின் முன் அடிபணிந்து போக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, 'நீ எனக்குச் செய்த சேவைக்காக, உன்னையே கலிஃபோர்னியா தியானபீடத்துக்குத் தலைவர் ஆக்குகிறேன்’ என்று சொல்லி ஆசிரமத்தை என்னிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு, நித்தியிடம் இருந்து தப்பினேன். என் மனக்குமுறலை அவ்வப்போது ஆசிரமவாசிகளிடம் மறைமுகமாகச் சொன்னேன். இதை, 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி கலிஃபோர்னியா வந்திருந்த நித்தியிடம் பற்ற வைத்தனர். அதனால் மீண்டும் நித்தி என்னை அழைத்து மிரட்டினார். அப்போது, நித்தி என்னிடம் ஓர் ஒப்பந்தத்தைக் கொடுத்து, 'இதில் 15 கோடி பக்தர்கள் கையெழுத்து போட்டுள்ளனர். நீயும் கையெழுத்துப் போடு’ என்றார். நான் படித்துப் பார்க்க முயன்ற போது, அவரின் பெர்சனல் செகரட்டரி வித்யா விஸ்வநாதன் வற்புறுத்திக் கையெழுத்து போட வைத்தார். அந்த ஒப்பந்தம்தான், தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட்.''
உன்னை வைரம் போல பட்டை தீட்டட்டுமா?
''2009 ஜூலையில் பிடதிக்குப் போயிருந்த போது, நித்தியின் பெர்சனல் செகரட்டரியாக இருந்த வித்யா விஸ்வநாதன், நித்தியின் அறைக்குப் போகச் சொன் னார்.
'நீ எனக்கு சேவகம் செய்திருக்கிறாய். அதனால் இம்முறை உனக்கு தீட்சை அளிக்கப் போகிறேன். தீட்சை அடைந்தால் நீ எளிதில் ஜீவன் முக்தி அடைந்து விடுவாய். வைரம் போல் தகதகவென ஜொலிப்பாய். உன்னை வைரம் போல் தீட்டட்டுமா?’ என்று சொல்லிக்கொண்டே இயற்கைக்கு முரணாக உறவு கொள்ள முயன்றார். நான் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த போது, 'இவனுக்கு காமமும் கர்வமும் தலைக்கேறி விட்டது’ என்று சொல்லி ஆசிரம பக்தர்கள் முன்னிலையிலேயே மந்திரக் கோலால் ரத்தம் தெறிக்கத் தெறிக்க சத்தமாக சிரித்துக் கொண்டே அடித்தார். அவமானத்தால் துடித்துப் போனேன். வலியால் துடித்த என்னை மீண்டும் நித்தியின் அறைக்குள் தள்ளினார்கள். காமத்தை அடக்குவதாகக் கூறி காட்டுமிராண்டித்தனமாக என்னை துன்புறுத்தினார்த்தார்''
குழந்தையைக் கற்பழித்ததாக வழக்கு!
''ஒவ்வொரு முறையும் நித்திக்கு எதிராக பலர் வெடித்துக் குமுறும் போதும் நானும் எனக்கு நடந்த கொடுமையைச் சொல்லி அழுவேன். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நித்தி, தனசேகரன் மூலமாக, 'சுவாமியிடம் எவ்வளவு பணம் இருக்கிறது தெரியுமா? எவ்வளவு பெரிய கேஸையும் ஒண்ணும் இல்லாமப் பண்ணிடுவார். அவருக்கு எதிராக உன்னால் நிக்க முடியுமா? இப்படியே பண்ணிட்டு இருந்தால் 'ரேப்’ கேஸ் போட்டுருவோம்’ என்று மிரட்டினார். நான் ஆர்த்தி ராவிடம் சொன்ன விஷயங்களை அவரும் அப்படியே நித்திக்கு மெயில் அனுப்பியதால் நித்தி என் மீது பொங்க ஆரம்பித்தார். அதன் விளைவாக உடனடியாக கோபால் ரெட்டி ஷீலம் என்பவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, ஆகஸ்ட் 7, 2009 அன்று சரிதா மல்லடி என்பவரின் ஆறு வயது மகளை நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கேஸ் போட்டார்கள். ஒரு காமவெறியனுக்குப் பலியாகி விட்டு, திக்குத் தெரியாமல் தவிக்கும் நான் எப்படி ஒரு குழந்தையைக் கற்பழித்திருப்பேன்? ஆனால், குழந்தையின் தாயே வழக்குப் போட்டிருக்கிறார். மொத்தமாய் மனம் உடைந்து உறக்கமின்றி தவித்தேன். கோபால் ரெட்டி ஷீலமிடம் முறையிட்ட போது, 'ஆர்த்தி ராவ் போன்ற நல்ல பக்தர்களிடமே சுவாமியைப் பற்றி தப்பாகப் பேசலாமா? உன்னிடம் தாந்த்ரீக செக்ஸ் கான்ட்ராக்ட் போட்டிருக்கிறோம். அதனால் எல்லாமே சட்டப்படிதான் நடந்திருக்கிறது’ என்று மிரட்டினார்.
நன்றாகப் படித்து... நன்றாக சம்பாதித்த நான் எப்படி நித்தியிடம் பலியானேன் என்று நினைத்துப் பார்த்தால், எல்லாமே புதிராக இருக்கிறது. முழுக்க முழுக்க என்னை மூளைச்சலவை செய்து, உளவியல் ரீதியாக என்னை அடிமையாக்கி என்னிடம் இருந்த பணம், சொத்துக்களை எல்லாம் நித்தி ஏமாற்றிவிட்டார். நான் அளித்திருக்கும் அத்தனை தகவல்களும் உண்மையே. உடனடியாக நித்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கையோடு விநய் பரத்வாஜ் வாக்குமூலத்தை முடித்து இருக்கிறார்.
இந்த வாக்குமூலத்தின் பவர் விரைவில் தெரியும்
No comments:
Post a Comment