Friday, July 6, 2012

அண்ணா யுனிவர்ஸிட்டி மார்க் குளறுபடி!


கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான ரேண்டம் நம்பரை அறிவிக்க கல்வி அமைச்சர் பழனியப்பன், துணைவேந்தர், உயர் கல்வித்துறை செயலர் மற்ற அதிகாரிகளுடன் ஒரு விழாவே நடத்தினார்கள். அது என்ன ரேண்டம் நம்பர்? இரண்டு மாணவர்களின் கட்ஆப் மார்க்குகள் (தகுதிக்கான மார்க்குகள்) ஒரே மாதிரியாக இருந்தால் அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தரமுடியாது என்பதால் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க சில விதிமுறைகள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. பிரச்னை வரும்போது கணிதப் பாட மார்க் கைகொடுக்கும். யார் கணிதத்தில் அதிகமோ அந்த மாணவருக்கு ரேங்க். கணிதத்தில் இரண்டு பேருக்கும் ஒரே மார்க்காக இருந்தால்? விருப்பப் பாடத்தில் யார் அதிக மார்க் பெற்றிருக்கிறார்களோ அவருக்கு ரேங்க். அதுவும் ஒன்றாக இருந்துவிட்டால்? பிறந்த தேதியில் சீனியருக்கு ரேங்க். அந்தப் பிறந்த தேதியும் ஒன்றாகயிருந்தால்? சிரிக்காதீர்கள். கம்ப்யூட்டர் தந்திருக்கும் ரேண்டம் நம்பரில் யாருடையது பெரியதோ அவருக்குத்தான் ரேங்க்கில் முதலிடம் என்கிறது பல்கலைக்கழக ஆணை. கஷ்டப்பட்டுப் படித்து வாங்கிய மார்க்குகளைவிட மாணவரின் விதியை, கணினி தரும் ஒரு கற்பனை நம்பர் நிர்ணயிக்கிறது.
இப்படி தவிர்க்கவே முடியாத மிக அபூர்வமான ஒரு சூழ்நிலையில் மிகச் சிலருக்கே ஒரு டோக்கன் போல பயன்படப் போகிற இந்த நம்பர் மனுச்செய்த எல்லோருக்கும் அளிக்கப்படுவதும் அதை அறிவிப்பதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்பதும் தான் புரியவில்லை. தமிழகத்தின் மொத்த இஞ்ஜினீயரிங் சீட்டுக்கள் 2.50 லட்சத்துக்கு மேல். அதில் இத்தகைய ‘ஒற்றுமைகளுடன்’ 0.2% இருப்பார்களா என்பதே சந்தேகம். அப்படி வருபவர்களை ஒரே ரேங்க்காக அறிவித்து விசேஷமான சில சீட்டுகளை ஒதுக்க முடியாதா?
சேர்க்கைக்கு முன்னரே பிரச்னைகளை கற்பனையில் உருவாக்கி அதற்கு மெனக்கெட்டு ஒரு மென்பொருளைத் தயாரித்து மாணவர்களை வடிகட்டித் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகத்தில் இப்போது ஒரு பெரிய மார்க் மோசடி விவகாரம் வெடித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்களிடம் பரவிக் கொண்டிருக்கிறது இரண்டு கடிதங்களின் ஜெராக்ஸ். அனுப்பியவர் பெயரும், கையெழுத்தும் மறைக்கப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில் ஒன்று ஒரு சீனியர் பேராசிரியர், துணைவேந்தருக்கும், மற்றொன்று ஒரு உதவிப்பேராசிரியர், முதல்வர் அலுவலகத்துக்கும் எழுதியதாகக் காணப்படுகிறது.
சீனியரின் கடிதத்தில் ஒரு உதவிப் பேராசிரியர் ரீவேல்யூவேஷனில் ஒரு மாணவருக்கு அதிக மார்க்குகள் போட நிர்பந்திக்கப்பட்ட விவரங்களையும் தவறு செய்து விட்டேன் மன்னித்துக் காப்பாற்றுங்கள்" என உதவிப் பேராசிரியர், முதல்வருக்கு வைத்திருக்கும் வேண்டுகோளையும் கடிதங்கள் சொல்கின்றன. இது உண்மையா அல்லது வதந்தியா என அலசப்பட்டுக் கொண்டிருக்கும்போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தம் பணிக் காலத்தின் கடைசி நாள் அன்று ‘உண்மையை அறிய’ ஒரு மூவர்குழு நியமனத்தை அறிவித்திருக்கிறார். ஆனால் யார் அந்த மூவர் என்பது சொல்லப்படவில்லை.
மிகுந்த கவனத்துடன் மாணவர்களின் தேர்வுகளைத் திருத்தி மதிப்பிடும் எங்களைப் போன்ற பேராசிரியர்களை இழிவு படுத்தும் இம்மாதிரி செயல்கள் கடந்த 2 வருடங்களாகவே நடப்பதாகவும், ஒரு உதவியாசிரியர் ஒரே நாளில் 18 பாடங்களின் பேப்பர்களை ரீவேல்யூ செய்ய நிர்பந்திக்கப்பட்டு அந்த மாணவன் எல்லா பேப்பர்களிலும் 50 அல்லது 60 மார்க்குகள் வாங்கியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாணவர் முந்திய ஆண்டு பல செமெஸ்ட்டர்களில் பாஸ்மார்க் வாங்காதவர்?" என்று நம்மிடம் சொன்ன ஒரு மூத்த பேராசிரியர் தந்த அடுத்த அதிர்ச்சித் தகவல்: ஒரு நேர்மையான பேராசிரியர் சமீபத்தில் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட புதிய கூடுதல் தேர்வு கண்காணிப்பாளர் ரேண்டமாக சில எண்களின் சில விடைத் தாள்களைப் பார்த்தபோது வெளி வந்திருக்கும் விஷயங்கள் இவை" என்றார்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய இந்த விபரீதத்தினால் அந்தப் பதவியிலிருந்து அவர் விலகிவிட விரும்புகிறார் என்பது தான். யார் அந்த மாணவர், யாரால் பேராசிரியர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள், இப்படி எத்தனை பேருக்கு நடந்திருக்கிறது என்பவைதான் இப்போது கோடி ரூபாய் கேள்வி.

No comments:

Post a Comment