செங்கல்பட்டு அருகே படாளம் பகுதி யில் அமைந்து உள்ளது கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி. இந்தக் கல்லூரியின் நிறுவனர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ரகுபதி. இப்போது இவர் தி.மு.க.வில் இருக்கிறார். அவரது மகன் அண்ணாமலை, இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர். இந்தக் கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்ளவே... அரசியல் மற்றும் மாணவர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சி நிலவுகிறது.
திருவண்ணாமலை அருகே உள்ள வாழவச்சனூரைச் சேர்ந்த வைதீஸ்வரி, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இ.சி.இ. படித்து வந்தார். வழக்கம் போல வார விடுமுறைக்கு தனது வீட்டுக்கு வந்த வைதீஸ்வரி, 22-ம் தேதி ஞாயிறு இரவு மீண்டும் ஹாஸ்டலுக்குத் திரும்பினார். இவர்தான், அடுத்த நாள் இரவு 8.30 மணிக்கு ஹாஸ்டலில் உள்ள ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டார். உடனே சென்னை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட வைதீஸ்வரி, சிகிச்சை பலன் இன்றி 24-ம் தேதி இறந்துபோனார்.
சோகத்தில் இருந்த வைதீஸ்வரியின் தந்தை ராமசாமியிடம் பேசினோம். ''ஞாயிற்றுக் கிழமை மதியம் வீட்டில் இருந்து வைதீஸ்வரி ஹாஸ்டலுக்குக் கிளம்பிப் போச்சு. ஹாஸ்ட லுக்குப் போய்ச் சேரும்போது ராத்திரி ஆயிடுச்சு போல. மறுநாள், கூடப்படிக்கறவங்க முன்னாடிவெச்சு, லேட்டா வந்ததாச் சொல்லி வைதீஸ்வரியைத் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்காங்க. அதைத் தாங்க முடியாத வைதீஸ்வரி மாடியில இருந்து குதிச்சதா சொல்றாங்க. அவ்வளவு அசிங்கமாத் திட்டினவங்களுக்கு, எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலையா? இப்படி அநியாயமா என் பொண்ணைக் கொன்னுப்புட்டாங்களே...'' என்றார் கண்களில் நீர் கோர்க்க.
அவருடைய புகாரின் பேரில் வைதீஸ்வரியைத் திட்டிய பேராசிரியர்கள் கார்த்திகா மற்றும் ஜோஸ் மிராண்டா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள் ளனர் படாளம் போலீஸார்.
கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசியபோது, ''வைதீஸ்வரி ஹாஸ்டலுக்கு வந்து சேர லேட்டாயி டுச்சுன்றது உண்மைதான். வெளியே யார்கூடவோ சுத்திட்டு வந்ததுதான் காரணம்னு மேடம் அவங் களாவே முடிவு பண்ணிட்டாங்க. அடுத்த நாள் காலேஜ்ல எல்லா மாணவர்களையும் வைச்சுக்கிட்டு அசிங்க அசிங்கமாத் திட்டினாங்க. காது கூசும் அளவுக்குத் திட்டினதால்தான் வேதனை தாங்க முடியாம தற்கொலை செஞ்சுக்கிட்டா'' என்றனர்.
வைதீஸ்வரியின் தற்கொலை கல்லூரி மாணவர்களைக் கொதிக்கவைக்க... போராடும் சூழல் எழுந்தது. உடனே மாணவர்களை ஆடிட்டோரியம் வரவழைத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ''வைதீஸ்வரி இறப்புக்குக் காரணமான ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற கோரிக்கை வைத்தனர் மாணவர்கள்.
அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ''மாணவர்களை கண்டிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஏதாவது தப்பு நடந்துவிட்டால் அவங்களைத்தானே கேட்பாங்க? நீங்க சொல்வது போலத் தகாத வார்த்தைகளால் பேசியது உண்மையாக இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்'' என்றார் டி.எஸ்.பி. ஸ்ரீதேவி. ''சில ஆசிரியர்கள் பேசுறது சகிக்க முடியலை. 'அவுட்டிங் போறீயா? எவன்கூட போற? உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்கத் தெம்பில்லைன்னு எவனையாவது புடிச்சுக்கிட்டு வான்னு அனுப்பிட்டாங்களா?’னு கேட்கிறாங்க. ஒரு பொண்ணுகிட்ட இப்படியா எல்லா ஸ்டூடன்ட் முன்னாடியும் பேசுவாங்க?'' என்று கொதித்தனர் மாணவிகள். அதனால் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து நிலைமையை சமாளித்து இருக்கிறார்கள்.
ஒரு சிலரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கல்வி நிறுவனம் தனது பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. நியாயமான நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுப்பதன் மூலமாக மட்டுமே இந்தக் களங்கம் துடைக்கப்படும். மாணவர்களைக் கையாள்வதில் ஆசிரியர்களுக்கு இன்னமும் நிறையப் பக்குவம் தேவை. அதைக் கற்றுக்கொடுப்பது யாரோ?
No comments:
Post a Comment