திருப்பூர் இப்போது திடுக் ஊராக மாறிக் கொண்டு இருக்கிறது!
ஓய்வு அறியாத தொழில் நகரமாக அறியப்பட்ட திருப்பூர், மின் வெட்டு காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதுவே இன்று, சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்குப் புகலிடமாகவும் மாறி இருக்கிறது. இங்கே அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருட்கள் பெருகியதற்குக் காரணம் என்று நைஜீரியாவைச் சேர்ந்தவர் களைக் கை காட்டுகிறார்கள் பொதுமக்கள்.
காதர்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி ராமமூர்த்தி, ''துணி வாங்கி ஏற்றுமதி செய்வதற்காக, நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக திருப்பூருக்குள் நுழைய ஆரம்பித்த பிறகுதான் நிறையப் பிரச்னைகள். வியாபாரம் செய்வதாக வந்தவர்கள், சட்டத்துக்குப் புறம்பான செயல் களில்தான் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனை இங்கே கொடி கட்டிப் பறக்கிறது. பல இடங்களுக்குக் கடத்தப்படுவதாகவும் தெரிகிறது.
நம் பெண்களை விரட்டுவதும், கிண்டல் செய்வதும் சர்வசாதாரணமாக நடக்கிறது. அவர்கள் கேட்ட விலைக்குத் துணியைத் தரவில்லை என்றால், கடையில் உள்ள ஒட்டுமொத்தத் துணிகளையும் கலைத்து எறிந்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களைத் தட்டிக்கேட்டால் முரட்டுத்தனமாகத் தாக்குகின்றனர்.
ராயபுரம், எஸ்.வி.காலனி, ராம்நகர், காதர் பேட்டை போன்ற பகுதியில் சட்ட விரோதமாக வீடு வாடகைக்கு எடுத்துக் குடியிருக்கின்றனர். இவர் களுக்கு என்று ஒரு தலைவன் இருக் கிறார். நைஜீரியர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், உடனே காரில் வந்து பஞ்சாயத்து செய்கிறார். போதைப் பொருள் கடத்துவதன் மூலம் எக்கச்சக்கமாகப் பணம் இருப்பதால், எல்லா இடங்களிலும் பணத்தைக் காட்டியே சிக்கலில் இருந்து தப்பித்து விடுகிறார்கள்.
முன்பு, ராயபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, நைஜீரியாகாரர்கள் சிலர் சேர்ந்து கற்பழித்துவிட்டனர். அந்தப் பெண்ணின் எதிர்காலம் கருதி, அந்தப் பிரச்னை பெரிதாக்கப்படவில்லை. பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி விட் டார்கள். கோவையில் துணிக்குள் வைத்து ஹெராயின் கடத்தியதாகக் கைது செய்யபட்டதும், கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். இப்போது மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டனர். போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பெரிய அசம்பாவிதம் நடந்துவிடும்'' என்று எச்சரித்தார்.
நம்மிடம் பேசிய பனியன் கம்பெனி அதிபர் ஒருவர், ''ஆரம் பத்தில் நைஜீரியாவில் இருந்து ஆண்கள் மட்டும்தான் வந்தார்கள். இப்போது ஏராளமான பெண்களும் வருகிறார்கள். அரைகுறை ஆடைகளில் நடமாடும் இந்தப் பெண்களில் பலர் விபசாரத்திலும் ஈடுபடுகின்றனர். இவர் களுக்கு உள்ளூரில் சில வியாபாரிகளும் போலீஸும் உடந்தையாக இருக்கிறார்கள். அதனால்தான் இவர்கள் சட்டவிரோதமான காரியங் களைத் தைரியமாகச் செய்கிறார்கள்'' என்றார்.
நம்மிடம் பேசிய காதர்பேட்டை வியாபாரிகள் சங்கத் துணை தலைவர் நாகராஜ், ''இவர்கள் எத்தனை நாட்கள் தங்கி இருப்பதற்கான அனுமதியுடன் வருகிறார்கள் என்பதே தெரியவில்லை. வருடக்கணக்கில் தங்குகின்றனர், போலீஸ் விசாரிப்பதே இல்லை. அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு, பலரும் இவர்களுக்கு வீடு தந்துவிடுகிறார்கள். இவர்கள் கும்பல் கும்பலாக இருப்பதால், இவர்களைத் தட்டிக்கேட்க பலரும் அச்சப்படுகிறார்கள்'' என்று சீறினார்.
நைஜீரியாக்காரர்களிடம் பேச முயன்றோம். பத்திரிகை என்றதுமே, விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள். கேம ராவைப் பிடுங்கி உடைக்கவும் முயற்சி செய்தார்கள்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கர்க்கிடம் பேசினோம். முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டவர், 'விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார். சொன்னபடியே மறுநாளே போலீஸார் களத்தில் இறங்கி நைஜீரியர்களை திருப்பூரின் பல பகுதியில் சல்லடை போட்டுத் தேடினார்கள். தகவல் அறிந்து பலர் அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று பதுங்கினார்கள். நான்கு நைஜீரியப் பெண்கள் விசா காலம் முடிந்த பிறகும், சட்ட விரோதமாகத் தங்கி இருந்தது தெரியவரவே, உடனே அந்த நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களை சென்னையில் உள்ள அந்த நாட்டுத் தூதரகத்தில் ஒப்படைத்தனர்.
நைஜீரியர்கள் மட்டுமல்ல, யாரும் இங்கு அமைதியாக வேலை செய்வதற்கோ தொழில் செய்வதற்கோ யாரும் தடை விதிக்கவில்லை. ஆனால் அவர்கள் அராஜகச் செயல்கள் செய்வதைத்தான் திருப்பூர் மக்கள் கண்டிக்கிறார்கள்.!
No comments:
Post a Comment