Wednesday, July 18, 2012

நித்திக்கு 'வியாழன்' கண்டம்! சுற்றி வளைக்கும் மூன்று விபரீதங்கள்



ர்நாடக சி.ஐ.டி. போலீஸின் ஆண்மைப் பரிசோதனை, அமெரிக்க கோர்ட்டின் அதிரடித் தீர்ப்பு, ஆர்த்தி ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு என எல்லாமே வரும் ஜூலை 19 அன்றுதான். ஆக, அன்றைய வியாழன்... நித்திக்குச் 'சிக்கல்’ நாள் என்கிறார்கள்! 
ஆண்மைப் பரிசோதனைக்கு வராவிட்டால் கைதா?
நித்தியானந்தா - ரஞ்சிதா வீடியோ தொடர்பான வழக்கைப் பதிவு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வருகிறது கர்நாடக சி.ஐ.டி. போலீஸ். புலன் விசாரணை, சாட்சிகளிடம் விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல் என்று இந்த வழக்கில் 60 சதவிகித வேலைகள் முடிந்து விட்டன. இந்த வழக்கில் அடுத்த கட்டமாக, வீடியோவில் பதிவாகி இருக்கும் நித்தி, ரஞ்சிதா உள்ளிட்ட எட்டு ஆசிரமவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்காக, சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் எட்டு முறை சம்மன் அனுப்பியும், வராமல் டிமிக்கி கொடுக்கிறார்கள்.
இதனால் நொந்துபோன கர்நாடக சி.ஐ.டி. போலீஸ், ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை நாடியது. உடனே நீதிபதி புஷ்பவதி, 'சி.ஐ.டி. போலீஸார் அழைக்கும்போது கண்டிப்பாக ஆஜராகி, மருத்துவப்பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, வரும் 19-ம் தேதி கர்நாடக சி.ஐ.டி. போலீஸ், நித்தி மற்றும் ரஞ்சிதா உள்ளிட்ட எட்டுப் பேரையும் பெங்களூரு விக்டோரியா மருத்துவ மனைக்கு அழைத்து வந்து, சோதனை நடத்தத் திட்டமிட்டு உள்ளனர்.
'நித்திக்கு ஆண்மைப் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை, குரல் பரிசோதனை ஆகியவையும், ரஞ்சிதாவுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனையும் செய்ய இருக்கிறோம். மற்ற ஆறு சீடர்களுக்கு குரல் பரிசோதனை மட்டும் செய்வோம். பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகளை, வீடியோவில் பதிவாகி இருக்கும் குரல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகு நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்போம். இதுவரை, டிரையலுக்கே வராமல் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கும் இந்த வழக்கு, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சூடு பறக்கும். இதுவரை ஏமாற்றியதுபோல் இந்த முறையும் நித்தி டிமிக்கி கொடுத்தால், கண்டிப்பாகக் கைது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்று சூடாகவே பேசினார்கள் சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் பேசியவர்கள்.
ஆனால் நித்தி தரப்பில் வழக்கம்போலவே, 'அப்படியா..? எங்களுக்கு எந்த சம்மனும் இதுவரை வரவில்லை. சுவாமி ஜூலை மாதம் முழுவதும் கொடைக்கானலில் 'இன்னர் அவேக்னிங்’ வகுப்பில் பிஸியாக இருப்பார். ஆனால், சி.ஐ.டி. போலீஸார் அழைத்தால் சுவாமி நிச்சயம் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்’ என்று பவ்யம் காட்டு கிறார்கள்.
அமெரிக்க கோர்ட்டில் திகில் தீர்ப்பு!
குஜராத் தொழில் அதிபர் பாபட்லால் சாவ்லா அமெரிக்காவில் தொடுத்த பணமோசடி வழக்கில், 'நித்தியானந்தா ஃபவுண்டேஷன் ஒரு ஃப்ராடு ஃபவுண்டேஷன்’ என்று கடந்த ஜூன் மாத இறுதியில் கலிஃபோர்னியா கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 'நித்தி ஃபவுண்டேஷன், பாபட்லால் சாவ்லாவுக்கு 1.565 மில்லியன் டாலரைத் திருப்பி அளிக்க வேண்டும். இறுதித் தீர்ப்பு ஜூலை 19-ம் தேதி வழங்கப்படும். அதில் தண்டனை விவரம் மற்றும் அபராதம் ஆகியவை குறித்து விளக்கமாகத் தீர்ப்பு வெளியாகும்’ என்றும் சொல்லி இருக்கிறது.
இதுதான் நித்தியின் இப்போதைய மெகா தலைவலி. ஏனென்றால், சாதாரணமாக இருந்த நித்தியை இண்டர்நேஷனல் ரேஞ்சில் வளர வைத்தது அமெரிக்காவில் இருந்து கொட்டிய 'டாலர்’ நன்கொடைகள்தான். அவருடைய 90 சதவிகித வருமானம் அமெரிக்காவில் நடத்திய நிறுவனங்கள், வகுப்புகள் மூலம் வந்தவையே. எனவே, இந்த வழக்கு நித்திக்கு வாழ்வா... சாவா போராட்டம். இந்தியாவில் நீதி கிடைப்பதற்கு முன்பே அமெரிக்காவில் நித்திக்கு எதிராகத் தீர்ப்பு வந்து விட்டது என்றாலும் அதில் என்னனென்ன விவரங்கள் வரப்போகிறது என்பதைத்தான் திகிலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
'நித்தி ஃபவுண்டேஷனை ஃப்ராடு என்று சொல்லி விட்டதால் இதுவரை நித்தி அமெரிக்காவில் வசூலித்த நன்கொடைகள் முழுவதையும் திருப்பித் தரும்படி சொல்வதற்கும் பாபட்லால் சாவ்லாவுக்கு 10 மடங்குக்கு மேல் அபராதம் செலுத்தும்படி உத்தரவு போடவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஃப்ராடு, மோசடிப் பேர்வழி என்று நீதிமன்றம் கூறிவிட்டதால், இனி அமெரிக்காவுக்குள் நுழைய நித்திக்கு அனுமதி கிடைப்பதும் சந்தேகம்தான்’ என்று திகில் கிளப்புகிறார்கள், நித்தியின் முன்னாள் சகாக்கள்.
ஆஜராகும் 'அடேங்கப்பா’ தலைகள்!
ஆர்த்தி ராவின் பாலியல் புகார்தான் நித்திக்குப் பெரும் பூகம்பத்தையே உண்டாக்கியது. இதுவரை தலைமறைவாக இருந்தபடியே மீடியாக்களில் தோன்றி நித்தியைப் பற்றி புட்டுப் புட்டுவைக்கிறார். அதனால், 'ஆர்த்தி ராவ் வெளியே வந்தால் அவ்வளவுதான்’ என நடுங்கும் நித்தி, ஆர்த்திக்கு எதிராக உள்ளடி வேலைகளைப் பார்த்துவருகிறார்.
லெனின் கருப்பன், வக்கீல் ஸ்ரீதரன், ஆர்த்தி ராவ் உள்ளிட்ட எட்டுப் பேர் மீது 'தன்னிடம் ஆபாச வீடியோவைக் காட்டி பேரம் பேசினார்கள்’ என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்தி வழக்குப்போட்டு இருக்கிறார். அந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக இருக்கும் ஆர்த்தி ராவைத் தவிர‌ மற்ற ஏழு பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது. 'ஆர்த்தி ராவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ என்று நித்தி தரப்பில் வழக்கம் போலவே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆச்சர்யமாக அரசுத் தரப்பிலும் ஒவ்வொரு முறையும், 'ஆர்த்திக்கு ஜாமீன் தரக்கூடாது’ என்று மறைமுகமாகத் தெரிவிக்கிறார்கள். ஆர்த்தி ராவுக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கான உள்ளடி வேலைகளை அரசுத் தரப்பு வக்கீலே செய்வதால், நித்திக்கு அரசே உதவி செய்கிறதோ என்ற சந்தேகமும் கோர்ட் வட்டாரத்தில் கிளம்பி இருக்கிறது.
ஆனால் ஆர்த்தி ராவ் தரப்பிலோ, 'இந்த வழக்கில் கான்ஃபரன்ஸ் காலில், ஆர்த்தி ராவ் பேசியதாக மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார்கள். உண்மையிலே ஆர்த்தி ராவ்தான் பேசினார் என்பதை எதை வைத்துச் சொல்கிறார்கள்? இந்த சின்ன விஷயத்துக்கு ஜாமீன் தராமல் இழுத்தடிப்பதன் பின்னணியில் நித்தி இருக்கிறார். எப்படியும் வியாழன் அன்று ஆர்த்திக்கு ஜாமீன் கிடைத்து விடும். அதன்பிறகு, நித்திக்கு எமகண்டம்தான்’ என்று உறுதியாகச் சொல்கிறார்கள். ஜாமீன் கிடைத்ததும் ஆர்த்தி ராவ், விநய் பரத்வாஜ், லெனின் கருப்பன், பாபட்லால் சாவ்லா என நித்திக்கு எதிராக புகார்கள் வாசிப்போர் அனைவரும் வெளியே வரலாம் என்பதுதான் இன்றைய நிலை.
ஆனாலும் அமெரிக்க கோர்ட், கர்நாடக சி.ஐ.டி. போலீஸ், அருணகிரிநாதரின் 'புது’ மிரட்டல் என எதற்குமே ரியாக்ஷன் காட்டாமல் கொடைக்கானலில் அமுக்கமாக இருக்கிறார் நித்தியானந்தா.
'மீடியாக்களிடம் பேசினாலும் பிரச்னை. பேசாமல் இருந்தாலும் பிரச்னை. என்னதான் செய்வது... வேறு எப்படி சமாளிப்பது என்று  ஆலோசனை நடத்தி வருகிறார்’ என்கிறது நித்திக்கு நெருக்கமான வட்டார‌ம். மேலும், இனிமேல் ஆன்மிகத்தில் மட்டுமே தீவிரமாகக் கவனம் செலுத்தவும் முடிவு எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
இந்த முடிவை முன்பே எடுத்திருக் கலாமோ?

No comments:

Post a Comment