Friday, July 6, 2012

உலகைக் கலக்கிய கதாபாத்திரங்கள்! - கால இயந்திரம் , மருதன்



புத்தர், திருவள்ளுவர், டைனோசர். இந்தப் பெயர்களைக் கேட்டதும் உங்களுக்கு எப்படிப்பட்ட பிம்பங்கள் நினைவுக்கு வருகின்றன? அமைதியே உருவான ஓர் இளைஞன். எழுத்தாணி வைத்திருக்கும் தாடி வைத்த ஒரு தாத்தா. கூர் பற்களைக் காட்டி கர்ர்ர்ர் என்று கத்தும் ஒரு ராட்சஸ பல்லி. இப்படிப்பட்ட உருவங்கள்தான் இல்லையா? ஆச்சரியம் என்னவென்றால், இந்த மூன்று உருவங்களையும் யாரும் நேரில் கண்டதில்லை. வரலாற்று, இலக்கிய, அறிவியல் சான்றுகளோடு கற்பனையையும் கலந்தே இந்த மூன்று உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்போதும்கூட கண்களை மூடிக்கொண்டு கற்பனை குதிரையை ஒரு தட்டு தட்டிவிட்டால், அமெ ரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் கடலுக்கு அடியிலும் இமய மலையின் உச்சியிலும் நம்மால் நொடிப் பொழுதில் சென்றுவிட முடிகிறது. ஓர் ஊரில் ஒரு ராஜா என்று ஆரம்பித்து இட்டுக் கட்டி கதை சொல்லமுடிகிறது. கற்பனை இல்லாவிட்டால் வரலாறு இல்லை, அறிவியல் இல்லை, கலை இல்லை, வாழ்க்கை இல்லை.
நான் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறேன்!" என்று பெருமிதத்துடன் அந்த விஞ்ஞானி ஓர் இயந்திரத்தைக் கொண்டு வந்து நிறுத்தியபோது நண்பர்கள் ஆச்சரியத்துடன் கண்களை விரித்துப் பார்த்தார்கள்.
இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத அதிசயம் இது. நீங்கள் விரும்பும் இடத்துக்கு உங்களை இந்த இயந்தரம் அழைத்துச் செல்லும்."
அவர்கள் சலிப்படைந்தனர்.
எல்லா வாகனங்களும் இதைத்தானே செய்கின்றன? இதிலென்ன புதுமை இருக்கிறது?"
விஞ்ஞானி சிரித்தார்.
மற்ற வாகனங்களுக்கும் இதற்கும் ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. இது கடந்த காலத்துக்குச்செல்லும். எதிர் காலத்துக்கும் செல்லும்."
நண்பர்கள் விழித்தனர்.
புரிய வில்லை அல்லவா? விளக்குகிறேன். இதோ இந்த சீட்டில் அமர்ந்து இந்தப் பொத்தானை அழுத்த வேண்டும். கடிகாரம் போல் தேதிகளும் மாதங்களும் ஆண்டுகளும் தெரிகிறது அல்லவா? இதில் நீங்கள் விருப்பப்பட்ட ஆண்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இதோ இதை அழுத்தினால் வண்டி கிளம்பிவிடும். அவ்வளவுதான், நீங்கள் மறைந்து விடுவீர்கள்."
ஹாஹா, இது ஒரு சுவையான கற்பனை!" என்று ஒருவர் சிரித்தார்.
இது அபத்தம்" என்றார் இன்னொருவர்.
விஞ்ஞானம் இப்படிப்பட்ட விளையாட்டுகளை அனுமதிப்பதில்லை!" என்றார் இன்னொருவர். ஏன் என்பதை அவர் விளக்கவும் செய்தார். அகலம்,நீளம், உயரம் போன்றதல்ல காலம். இறந்த காலத்துக்குள் ஒருவராலும் செல்லமுடியாது. அதே போல் எதிர்காலம் என்னும் புதிரை யாராலும் அவிழ்க்க முடியாது. உதாரணத்துக்கு, நூறு ஆண்டுகள் பின்னால் செல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு 100 ஆண்டு கால பயணம் தேவைப்படும். இது சாத்தியமா? 100 ஆண்டுகள் கடந்து முன்னால் செல்லவேண்டுமானால் மேலும் 100 ஆண்டுகள் தேவைப்படும். முன்னும் பின்னும் 100 ஆண்டுகள் போய் வரவேண்டுமானால், நீங்கள் 200 ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டும். இத்தனைப் பெரிய விஞ்ஞானிக்கு இந்த அடிப்படை கணக்குக் கூட தெரியவில்லையே!"
ஆனால், என் இயந்திரம் நீங்கள் சொன்ன கணக்கையும் முறியடித்துவிடுமே! 100 ஆண்டுகளைக் கடந்து செல்ல 100 ஆண்டுகள் தேவைப்படும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? இரண்டு ஆண்டுகளை இரு நிமிடங்களிலே கடக்க முடிந்தால்? ஆயிரம் ஆண்டுகளை அரை மணிக்குள் கடக்க முடிந்தால்?"
ஆ, சுவையான கற்பனை!"
தன் இரு கைகளையும் விரித்து அந்த விஞ்ஞானி புன்னகை செய்தார்.
இந்த விஞ்ஞான அதிசயம் உண்மைதான் என்பதை விஞ்ஞானத்தைக் கொண்டே நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். இதோ உங்கள் கண் முன்னால் இப்போதே இதை இயக்கிக் காட்டுகிறேன்."
சொன்னதோடு நிற்காமல் அந்த இயந்திரத்தில் அமர்ந்து கதவுகளை மூடிக்கொண்டார் விஞ்ஞானி. சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்னும் தோரணையில், நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்த கண்களுடன் நண்பர்கள் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சில பொத்தான்களை அடுத்தடுத்து இயக்கினார் விஞ்ஞானி. இயந்திரம் புறப்படத் தயாரானது. விஞ்ஞானி கையசைத்தார். நண்பர்கள் பதிலுக்குக் கையசைக்கும் முன்பே... அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே... சிறு சத்தத்துடன்... கால இயந்திரம் மறைந்து போனது.
ஆ, எப்படி மறைந்தது பார்த்தாயா? ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ! நம் நண்பன் அசலான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டானோ! மெய்யாகவே எங்கோ சென்றுவிட்டானோ! எங்கே போயிருப்பான்? கடந்த காலத்துக்கா, எதிர் காலத்துக்கா? மீண்டும் எப்போது திரும்புவான்?
கேள்விகளுக்கு விடை காண நான்கு நாள்கள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதே அறை. உணவு மேஜை முன்பாக அமர்ந்து நண்பர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். பாதிசாப்பாட்டில் விஷ்க்கென்று பறந்து வந்து நின்றது இயந்திரம். பல்லவன் பஸ்ஸில் இருந்து இறங்குவது போல், சோம்பல் முறித்தபடி கைகளை உதறிக்கொண்டு வெளியில் வந்து நின்றார் விஞ்ஞானி. காணாமல் போன போது இருந்த அதே புன்னகை இப்போதும் உதடுகளில் ஒட்டிக்கொண்டிருந்தது.
என்ன, இப்போது நம்புகிறீர்களா?"
யாரால் நம்பாமல் இருக்கமுடியும்? நண்பர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இப்போது அவர்களுக்குத் தேவை கதைகள் மட்டுமே. சொல்லு, சொல்லு, எங்கே சென்றாய்? காலத்தை எப்படிக் கடந்தா? என்னவெல்லாம் கண்டாய்? எப்படி இருக்கிறாய்?
முதல் முறையாகக் காலத்தைக் கடந்து சென்ற அந்தப் பயணி கதை சொல்லத் தொடங்கினார். அவர் சென்றது எதிர் காலத்தை நோக்கி. ஆரம்பத்தில் ஒரு நாளைக் கடந்து செல்ல ஒரு நிமிடம் தேவைப்பட்டது. பிறகு இயந்திரத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, ஓராண்டை ஒரு நிமிடத்தில் கடக்க முடிந்தது. மரங்கள், கட்டடங்கள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றோடு சேர்ந்து காலமும் மறைய ஆரம்பித்தது. ஆயிரம், பத்தாயிரம் என்று ஆண்டுகள் மறைய மறைய, வேகம் கூடிக்கொண்டே போனது. கி.பி. 802, 701 என்று முள் காட்டும்போது, இயந்திரம் மூச்சு வாங்கியபடி நின்று போனது.
ஆ, அப்படியானால் நீ எட்டு லட்சம் ஆண்டுகளைக் கடந்து சென்றாயா?"
உண்மையில் அதுதான் நடந்திருந்தது. கனவிலும் பார்க்க முடியாத ஒரு புதிய நிலப்பரப்பில் கால் பதித்தார் அந்த விஞ்ஞானி. ஆம், அங்கு மனிதர்கள் இருந்தார்கள் ஆனால் குழந்தைகளைப் போல் சிறிய உருவத்தில். இவர்கள் எலோ என்று அழைக்கப்பட்டனர். தேம்ஸ் நதிக்கரையில் இவர்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். நம் முன்னோர்களான ஆதிவாசிகளைப் போல் கூட்டமாகவே நகர்ந்து, கூட்டமாக உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இருட்டைக் கண்டால் பயம். தனிமையைக் கண்டாலும் பயம்.
இன்னொரு பிரிவினரையும் அவர் சந்தித்தார். இவர்கள் மோர்லோக் என்று அழைக்கப்பட்டனர். முழு மனிதர்களாகவும் இல்லாமல், முழு குரங்குகளாகவும் இல்லாமல் இடைப்பட்ட உருவத்தில் இவர்கள் இருந்தனர். வெள்ளை நிறம். பெரிய கண்கள். இந்த இரு குழுவினரின் நடவடிக்கைகளைக் கவனித்தபோது ஒரு முக்கியமான உண்மை தெரியவந்தது.
ஆம் நண்பர்களே. அது மிகவும் சோகமான ஓர் உண்மையாகவும் இருந்தது. எலோ மக்கள் பணக்காரர்களாகவும் செல்வாக்கு கொண்டவர்களாகவும் இருந்தனர். மோர்லோக் மக்கள் பின் தங்கியவர்களாக, பலவீனமானவர்களாக இருந்தனர். எத்தனை லட்சம் ஆண்டுகள் போனாலும் இந்த வேறுபாடுகள் மறையாது போலிருக்கிறது. இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்னும் வேறுபாட்டை அறிவியலால்கூட ஒழிக்க முடியவில்லையே என்று நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது."
தன் கதையை முடித்துக்கொண்ட விஞ்ஞானி மீண்டும் இயந்திரத்தில் ஏறி அமர்ந்தார். கையசைத்தார். சில பொத்தான்களை அழுத்தினார். காணாமல் போனார். அநேகமாக இப்போது அவர் கடந்த காலத்தை நோக்கித்தான் சென்றிருக்கவேண்டும். எப்படியிருந்தாலும் அவர் திரும்பி வந்து ஒரு புது கதையைச் சொல்லும்வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான்.
ஹெச்.ஜி. வெல்ஸ் (1866-1946)
டைம் மெஷின் என்னும் நாவலில் இடம்பெறும் அந்த விஞ்ஞானியின் பெயரை வெல்ஸ் கடைசிவரை குறிப்பிடவில்லை. அறிவியல் புனைகதை பிரிவில் பல புதுமைகளைச் செய்துகாட்டிய வெல்ஸ், வரலாறு, அரசியல், சமூகம் ஆகிய துறைகளிலும் விரிவாக எழுதியிருக்கிறார். டைம் மெஷின் 1895ல் வெளிவந்தது. தொடர்ந்து பலமுறை திரைப்படங்களாக வெவ்வேறு வடிவங்களில் எடுக்கப்பட்டது. கால இயந்திரம் என்பது முழுக்க முழுக்க அவருடைய கற்பனை கண்டுபிடிப்புதான் என்றாலும், இப்படியோர் இயந்திரத்துக்கு ஆசைப்படாதவர்கள் யாராவது இருக்க முடியுமா?

No comments:

Post a Comment