Monday, July 16, 2012

வீரேந்தர் சேவாக்



வீரேந்தர் சேவாக், அக்டோபர் 20, 1978 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். அப்பா அரிசி வியாபாரி. தன் மகன் சிறந்த கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்ற ஆசையில்  ஏழு மாத குழந்தையாக சேவாக் இருந்தபோதே பிளாஸ்டிக் பேட் வாங்கிக்கொடுத்து உள்ளார்.

டெல்லி அரோரா வித்யா பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய சேவாக் தன் பன்னிரெண்டாவது வயதில் விளையாடும்போது கீழே விழுந்ததில் பற்கள் உடைந்தன. இந்த நிகழ்வு சேவாக்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளிவைக்கும் அளவுக்குத் தந்தையின் மனதை மாற்றியது. ஆனால் அந்தத் தடையை அம்மாவின் ஆதரவால் முறியடித்து 1997-ல் டெல்லி கிரிக்கெட் அணிக்குத் தேர்வானார்.

தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேர்ந்த சேவாக் உள்ளூர் போட்டிகளில் சதம், இரட்டை சதம் என்று கலக்கியதால் 1999-ல் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களம் இறங்கியவர் ஒரு ரன்னோடு ஆட்டம் இழந்தார். பந்து வீச்சிலும் மூன்று ஓவருக்கு 35 ரன்கள் கொடுத்தார். அதன் விளைவு... இந்திய அணியில் அடுத்த வாய்ப்புக் கிடைக்க ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தார்.

பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 54 பந்துகளுக்கு 58 ரன்கள் சேர்த்து ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தார். இதுவே சேவாக்கின் நான்காவது ஒரு நாள் போட்டி. அப்போது தொடங்கிய அதிரடி இந்திய அணியின் தொடக்க வீரராகத் தொடர்ந்து களம் இறங்க வகை செய்தது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 68 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் சதத்தைப் பதித்தார்.

இதுவரை 245 ஒரு நாள் போட்டிகளில் 8,090 ரன்களும், 96 டெஸ்ட்களில் 8,178 ரன்களையும் குவித்து உள்ளார். ஒரு நாள் போட்டியில் இவரின் அதிகபட்ச ரன்கள் 219. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 149 பந்துகளிலேயே இந்த இமாலயச் சாதனையைச் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்சம் 319 ரன்கள்.

ஒரு நாள் போட்டிகளில் விரைவாக சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைத் தட்டிச்சென்றவர் சேவாக். டெஸ்ட் போட்டிகளைக்கூட ஒரு நாள் போட்டிகளைப் போலவே அணுகக் கூடியவர். சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், மேற்கிந்தியத் தீவுகளின் ப்ரையன் லாரா, கிறிஸ் கெய்ல் வரிசையில் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் தொட்டவர்களுள் சேவாக்கும் ஒருவர்.

ஆரம்ப காலத்தில் சச்சினுக்கு நிகராக கருதப்பட்டவர். தன் முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக இருப்பவர் என்று சச்சினையே முன் உதாரணமாகக் கொண்டவர். ஃபார்மில் இல்லாதபோது ஏற்படும் சறுக்கல்களைத் தனது தீவிரப் பயிற்சியால் ஏற்றங்களாக மாற்றிக் காட்டியவர்.

2002-ல் அர்ஜூனா விருது, 2010-ல் சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் விருது, 2010-ல் பத்மஸ்ரீ விருது என உயரிய கௌரவங்களைப் பெற்றவர். உலக அளவில் கொடுக்கப்படும் விஸ்டன் லீடிங் கிரிக்கெட்டர் விருது 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் சேவாக்குக்குக் கிடைத்து இருக்கிறது.

'தோல்விகளுக்கு எதிரான எனது  வெற்றிகள் தொடரும்’ என்ற முழக்கத்தோடு சேவாக் ஒரு மூத்த ஆல்ரவுண்டராக இன்று வரையில் உற்சாகத்துடன் வலம் வந்துகொண்டேதான் இருக்கிறார்!

No comments:

Post a Comment