தினம் ஒரு பிரச்னையை சந்தித்து வரும் நித்தியானந்தா, ஒட்டுமொத்த சிக்கல்களில் இருந்தும் தப்பிக்கும் வழியை ஒருவழியாகக் கண்டுபிடித்து விட்டார் என்கிறார்கள் சில சீட கோடிகள். ஆம், பனிலிங்க தரிசனம் என்று இந்தியாவை விட்டுக் கிளம்பி, எல்லைக்கு வெளியே தொல்லைகள் இன்றி இருக்க எண்ணமாம்!
நித்திக்கு விழுந்த மரண அடி!
குஜராத்தைச் சேர்ந்த அமெரிக்கவாழ் தொழில் அதிபரான பாபெட்லால் சாவ்லா, 'அமெரிக்காவில் வேதிக் காலேஜ் தொடங்குவதற்காக நித்தியானந்தா என்னிடம் பணம் கேட்டார். அவர் மீதிருந்த நம்பிக்கையில் நித்தியானந்தா ஃபவுண்டேஷனுக்கு 1.565 மில்லியன் டாலர் வழங்கினேன். அந்தப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும்’ என்று கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். ஜூன் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் நித்தி சார்பாக அவரது சீடர்கள் ஆஜராகி தீர்ப்பின் வீரியத்தைக் குறைக்க ரொம்பவே போராடினர். ஆனாலும், 'நித்தி ஃப்ராடு’ என தலையில் குட்டியது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து, ஜூலை 19-ம் தேதி வெளியான தீர்ப்பில், 'பாபெட்லால் சாவ்லாவிடம் நித்தியானந்தா ஃபவுண்டேஷன் 1.565 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8.5 கோடி) வாங்கியது உண்மை. அதை, நித்தியானந்தா ஃபவுண்டேஷன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும், சாவ்லா இந்த வழக்குக்காக பலமில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார். எனவே, வழக்கின் செலவுத் தொகையையும் (இதுவும் பல கோடிகள் வரும்) திருப்பி அளிக்க வேண்டும்.
2004-ம் ஆண்டு 'லாபம் தராத தொண்டு நிறுவனமாக’ பதிவு செய்யப்பட்ட நித்தியானந்தா ஃபவுண்டேஷனின் ஆவணங்களைத் தணிக்கை செய்தபோது, இது லாபத்துக்காக இயங்கியது எனத் தெளிவாகத் தெரிகிறது. நித்தியானந்தா ஃபவுண்டேஷனின் நிறுவனராகவும், தலைவராகவும் செயல்பட்ட சுவாமி நித்தியானந்தா, இன்றுவரை தொடர்ந்து, நித்தியானந்தா ஃபவுண்டேஷனுக்கு ஒரு ஏஜென்ட் போல செயல்பட்டுள்ளார். பாபெட்லால் சாவ்லா போன்ற பலரிடம் நித்தியானந்தா ஃபவுண்டேஷன் பணம் பறித்து இருக்கிறது. எனவே, நித்தியானந்தா ஃபவுண்டேஷன் ஒரு ஃப்ராடு பவுண்டேஷன் என்பதும் தெளிவாகி இருக்கிறது!'' என்று அதிரடித் தீர்ப்பை வழங்கினார் நீதிபதி ஸ்டீவன்.
நிம்மதி இழந்த நித்தி!
அமெரிக்க கோர்ட்டின் அதிரடித் தீர்ப்பைக் கேட்டதும், 'நித்தியானந்தா ஃபவுண்டேஷனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அந்தத் தீர்ப்பு என்னைப் பாதிக்காது’ என்று உடனடியாக மீடியாக்களிடம் அலறினார் நித்தி.
ஆனால், தன்னுடைய அமெரிக்க சீடரான கோபால் ரெட்டி ஷீலத்திடம், 'உடனடியாக இந்த வழக்கில் அப்பீல் செய்ய வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். இதுபற்றி சொல்லும் சிலர், ''நித்தியானந்தா ஃபவுண்டேஷன் லாப நோக்கம் இல்லாத தொண்டு நிறுவனம் என்ற அடிப்படையில்தான் 2004-ல் இருந்து இதுநாள் வரை வரி ஏதும் செலுத்தவில்லை. மேலும், நித்தியானந்தா ஃபவுண்டேஷன் மூலம் பெற்ற பணத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே, இந்தத் தீர்ப்பின் மூலம் நித்தியானந்தா ஃபவுண்டேஷன் லாபம் தரக் கூடிய நிறுவனம் என்பது உறுதியாகி இருப்பதால், இதுவரை நடந்த வரி ஏய்ப்புக்கு வட்டி போட்டு வசூலிக்க அமெரிக்க அரசு முடிவெடுக்கும். அப்படி நடந்தால் நித்திக்குத் தலைதூக்க முடியாத பணச்சுமை ஏற்படும். மேலும், நித்தியின் ஏற் றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் மூலமாக சிலைகளை விற்பனை செய்த விவகாரமும் வெளியே வரும். அதனால் நித்திக்கு ஆபத்துதான்'' என்கிறார்கள்.
தப்பிக்கிறாரா நித்தி?!
நித்தியானந்தாவின் சமீபகால நடவடிக்கை குறித்துப் பேசுகிறார், அவருடன் இருக்கும் நிர்வாகி ஒருவர். ''அமெரிக்க கோர்ட்டில் இருந்து தீர்ப்பு வந்தததில் இருந்தே சுவாமி ரொம்பவும் டென்ஷனாகி விட்டார். யாரிடமும் முன்பு போன்று சகஜமாகப் பேசுவது இல்லை. சுவாமிக்கு இப்போதைக்கு நேரம் சரியில்லை என்பதால் பரிகாரம் தேடி சிவபெருமானின் இருப்பிடமான கைலாய மலைக்குப் போகத் திட்டமிட்டு இருக்கிறார். ஜூலை 27-ம் தேதி கிளம்புகிறார். அங்கே 48 நாட்களுக்கு அக்னி சூழ் பிரவேச யாகத்தில் ஈடுபட இருக்கிறார். சுவாமிக்கு நெருங்கிய ஏழு பேர் மட்டும் உடன் செல்ல இருக்கிறோம்.
அங்கே சென்று வந்த பிறகு மதுரையில் முழுநேரமாக ஆன்மிகத்தில் இறங்கி ஜொலிப்பார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு கைலாய யாத்திரை இருப்பதால், கர்நாடக சி.ஐ.டி-யின் ஆண்மை பரிசோதனையில் கலந்து கொள்ள மாட்டார். அவர் வழக்கு விவரங்களை எங்களுடைய லீகல் டீம் பார்த்துக்கொள்ளும். ஆனால், ஆண்மை பரிசோதனையைப் பார்த்து சுவாமி அஞ்சவில்லை என்பதை மட்டும் மறக்காமல் எழுதுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், நித்தியின் முன்னாள் சகாக்களோ, ''ஆர்த்தி ராவ் கூடிய விரைவில் மீடியாக்கள் முன் தோன்றி நித்தி குறித்த பல உண்மைகளைப் புட்டுப்புட்டு வைக்கப் போகிறார். அது மட்டுமில்லாமல், சி.ஐ.டி. போலீஸின் ஆண்மைப் பரிசோதனையைக் கண்டு நித்தி பயப்படுகிறார் என்பதே உண்மை. அதனாலேயே பனிலிங்க தரிசனம் என்ற பெயரில் இமயமலைக்குச் செல்லும் நித்தி, அப்படியே நேபாளம் சென்று, முடிந்த வரை அங்கேயே தங்கிவிடும் முடிவில் இருக்கிறார்'' என்று எச்சரிக்கையாகச் சொல்கிறார்கள்.
நித்தி சீரியலின் அடுத்த எபிஸோடையும் பார்ப்போமே...!
No comments:
Post a Comment