உச்ச நீதிமன்றத்திலும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் ஜெயலலிதா தரப்புக்கு பலத்த 'கண்டன’க் குறிப்பு வந்திருப்பதால், மீண்டும் கோர்ட் படி ஏறும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார் சசிகலா!
டெல்லி மிரட்டல்!
'உச்ச நீதிமன்ற ஆணைப்படி, பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் இரண்டாம் குற்றவாளியான சசிகலா மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடிக்கிறார். இன்னும் 1,000 கேள்விகளுக்கு மேல் பதில் சொல்ல வேண்டிய சசிகலா, புதுப்புது காரணங்களைச் சொல்லி வழக்கைத் தாமதப்படுத்த முனைகிறார். எனவே ஸ்பெஷல் கோர்ட்டின் அன்றாட நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் காண்காணிக்க வேண்டும்’ என்று மனு போட்டு இருந்தார் பேராசிரியர் அன்பழகன்.
இந்த மனு கடந்த 16-ம் தேதி நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் கோகாய் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தது. அன்பழகன் மனுவை ஏற்றுக்கொண்டு, 'இழுத்தடிக்க என்ன காரணம்?’ என்பதை ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கும் தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை கண்காணிப்பாளருக்கும் உத்தரவு போடப்பட்டு உள்ளது.
''தமிழகத்தில் நடந்த வழக்கை பெங்களூருவுக்கு மாற்றியதே சுப்ரீம் கோர்ட் தான். எனவே, அவர்கள் கண்காணிக்க ஆரம்பித்தால் மூன்று மாதத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்துவிடும்'' என்கிறார்கள் நீதித் துறையைச் சார்ந்தவர்கள்.
பெங்களூரு விரட்டல்!
இதற்கிடையே, 'நீதிபதியை மாற்ற வேண்டும்’ என்ற மனுவை டிஸ்மிஸ் செய்து கடந்த 17-ம் தேதி தீர்ப்பு சொன்னார் நீதிபதி மல்லிகார்ஜுனையா!
''சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஊழல் தடுப்புத் துறை சட்டப்பிரிவு 3-ன் படி, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலில் கர்நாடக அரசும், கர்நாடக உயர் நீதிமன்றமும் கலந்து ஆலோசித்து புதிய நீதிபதியையும், அரசுத் தரப்பு வக்கீலையும் பெயரைக் குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டனர். அதன் பிறகு ஸ்பெஷல் கோர்ட்டுக்குப் புதிய நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஹை கோர்ட்டுக்கும், மாநில அரசுக்கும் இருக்கிறது. அதன்படியே எனக்கு முன்னர் இருந்தவர்களும், நானும் இந்த நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டோம். நீதிபதி நியமனத்தில் என்னென்ன வரைமுறைகளையும், சட்டப் பிரிவுகளையும் பின்பற்ற வேண்டுமோ, அவை எல்லாமே பின்பற்றப்பட்டு உள்ளது. இதில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. எனவே குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கடகடவென தீர்ப்பு கொடுத்தார்.
இதுவரை நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவிடம் ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு 'டிஸ்மிஸ்' ஆன மனுக்களின் வரிசையில் இந்த பிரம்மாஸ்திர மனுவும் சேர்ந்துகொண்டது.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, ''விசாரணையை 24-ம் தேதிக்குத் தள்ளி வைக்கிறேன். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் கட்டாயம் ஆஜராக வேண்டும். சசிகலாவிடம் விசாரணை தொடரும். அதற்காக மொழிபெயர்ப்பாளரும் தயாராக இருக்கிறார்'' என்றார். இதைக் கேட்டதும், உடனடியாக ஹை கோர்ட்டில் அப்பீல் மனு போட ஜெ. தரப்பில் பரபரப்பாக இறங்கிவிட்டனர்.
அடுத்தது என்ன?
''சிறப்பு நீதிமன்றத்தில் போடப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், வருகிற 24-ம் தேதி அவர் நிச்சயமாக கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. கண்ணில் உள்ள பிரச்னையைச் சொல்லி இரண்டு மாதங்கள் ஓட்டி விட்டதால், இந்த முறை அந்தக் காரணத்தைச் சொல்லமுடியாது. அதனால் அவர் அநேகமாக ஆஜராகிவிடுவார். இதுவரை 600 கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ள சசிகலா, இன்னும் ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். இதற்கான தயாரிப்புப் பணிகளில் அவரது வக்கீல் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டலில் அமர்ந்து பதில்கள் தயாராகி வருகின்றன. குறிப்பாக சுதாகரனின் திருமணச் செலவுகள் மற்றும் தங்க வைர நகைகள் வாங்கியது குறித்து கேள்விகள் வரும் என்பதால் அதற்கான பதில்களைத் துல்லியமாக எழுதி வருகிறார்கள்'' என்று சசிகலாவின் வக்கீலுக்கு நெருக்கமான வட்டாரம் சொல்கிறது.
விசாரணை தினத்தில் விறுவிறுப்பு காத்திருக்கிறது!
No comments:
Post a Comment