Monday, July 23, 2012

சென்னை கோட்டைக்கு எதிரே கஞ்சா ராஜ்ஜியம்!


சென்னை கோட்​டைக்கு எதிரே பட்டப்​பகலிலேயே கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. ஆட்டோ ரிக்ஷாக்காரர்கள், கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் சகஜமாக வாங்கிப் போகிறார்கள். இதனை உடனே தடுத்து நிறுத்துங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதறியது ஒரு குரல். 
புகார் தெரிவித்தவரை நேரில் சந்தித்தோம். தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசினார். 'சார், இந்த ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் எப்போதுமே காலேஜ் பசங்க, கட்டப் பஞ்சாயத்து பண்றவங்க, திருட்டுப் பயலுங்கன்னு தப்பான ஆட்கள் வந்துக்கிட்டே இருப்பாங்க. வந்ததும் ஏதாவது ஓர் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துக்குவாங்க. அப்புறம் உள்ளே இருந்து புகையா வர ஆரம்பிச்சுடும். ரொம்ப நேரம் மயங்கியே கிடப்பாங்க. காலேஜ் பசங்களும் பைக், கார்ல வந்து இறங்கி வண்டியை ஒரு ஓரமா நிறுத்திட்டு ஆட்டோவில் போய் உட்காந்துக்கிறாங்க.
இந்தக் கூத்து தினமும் நடக்குதுன்னாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொல்லவே வேணாம், நிறையப் பேர் வர்றாங்க. கஞ்சா புகையைப் போட்டுக்​கிட்டு ஒரு சிலர் இங்கேயே மயங்கிக் கிடக்காங்க. ஒரு சிலர் அந்தப் போதையில் வண்டியை ஓட்டிக்கிட்டுத் தாறுமாறா போறாங்க. இந்த இடத்தில் இருந்து 50 அடி தள்ளித்தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அங்கே இருந்து பார்த்தாலே, இந்த விவகாரம் அவங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா, ஏனோ ஒரு நடவடிக்கையும் எடுக்கிறதே கிடையாது. இங்கே வர்ற பசங்களைப் பார்த்தா நல்லவங்களா... சின்னப் பிள்ளைங்களா இருக்காங்க. சின்ன வயசில இப்படி அவங்க சீரழிவதைத் தாங்க முடியாமத்தான் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் புகார் செய்தேன்' என்றார் வருத்தத்துடன்.
அவர் குறிப்பிட்ட கஞ்சா ஸ்பாட்​டுக்கு விரைந்தோம். மூன்று பேர் கஞ்சா அடித்துத் தன்னிலை தெரியாமல் போதையில் மிதந்தார்கள். யாரையும் சட்டை செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. உடனே இ2 போலீஸ் இன்ஸ்பெக்டர் சு.செல்லப்பாவைச் சந்தித்து தகவலைச் சொன்னோம்.
''இந்த ஒரு வருஷத்தில் மட்டும் 30 பேருக்கு மேல் கஞ்சா கேஸில் தூக்கி உள்ளே போட்டு இருக்கிறேன். ஒரு கிலோவுக்கு மேல் கஞ்சா வைத்திருந்தால் பெயிலில் வெளியே வரமுடியாது. இவர்கள் விவரமாக 500 கிராமுக்கு கம்மியாகத்தான் கஞ்சா வைத்திருப்பார்கள். அரெஸ்ட் பண்ணினால் இரண்டு நாளைக்குள் பெயில் எடுத்துக்கொண்டு வெளியே வந்து விடுகிறார்கள். அதன் பிறகு வழக்கம் போல் கஞ்சா விற்பதையும் பயன்படுத்துவதையும் தொடங்கி விடுகிறார்கள். இந்த ஏரியாவில் எந்தத் தப்பும் நடக்கக் கூடாது. அதனால் நீங்கள் சொல்லும் தகவலுக்கு உடனே முடிவு கட்டலாம். இப்போதே காவலர்களை அனுப்பி நடவ​டிக்கை எடுக்கச் சொல்கிறேன். நீங்களும் உடன் செல்லுங்கள்'' என்று  செயலில் இறங்கினார்.
இரண்டு காவலர்களைக் கூப்பிட்டு நம்முடன் ஸ்பாட்டுக்குச் சென்று நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு போட்டார். நம்மையும் ஏற்றிக்கொண்டு கோட்டையை நோக்கிப் புறப்பட்டது ஜீப்.
நாம் சொன்ன இடத்தில் ஜீப்பை நிறுத்தினார்கள். அப்போதும் கஞ்சா மயக்கத்தில் இருந்த நபர்கள் அப்படியே கிடந்தார்கள். அவர்களைப் பிடித்து பரிசோதித்ததில், கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ''நீங்கள் கேள்விப்​பட்டதும், பார்த்ததும் சரியான தகவல்தான்'' என்று அதிர்ச்சியான காவலர்கள், அங்கே இருந்த மூவரையும் ஸ்டேஷ​னுக்குக் கொண்டு சென்றார்கள்.
மூவர் மீதும் கஞ்சா கேஸ் பதியப்பட்டது. அவர்களில் ஒருவர் கூலி தொழிலாளி. மற்ற இருவரும் ரிக்ஷா ஓட்டுபவர்கள். மயக்க நிலையில் இருந்து மீண்டதும், அவர்களிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கும் பாலத்துக்கு அடியில் கஞ்சாவை வாங்கியதாக மூவருமே சொன்னார்கள்.  
கஞ்சா விற்பனை செய்பவர்களையும் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது... குறிப்பிட்ட இடத்துக்கு மப்டியில் விரைந்து சென்றார்கள் காவலர்கள். பாலத்துக்கு அடியில் கஞ்சா விற்பனை செய்துவந்த இருவரை பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துப்பேசிய இன்ஸ்​பெக்டர், ''இனி இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை நடக்காமல் இருப்பதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும்.  வேறு யார் எல்லாம் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் இவர்களை விசாரித்து அறிந்து, அவர்களையும் கூடிய விரைவில் கைது செய்துவிடுவோம்'' என்றார் உறுதியுடன்.
தொடர்ந்து நாமும் கண்காணிப்போம்!

No comments:

Post a Comment