வாரிசுகளின் விளையாட்டு, பெற்றோரின் பதவிக்கு ஆப்பு வைப்பது அடிக்கடி நடக்கிற அதிகார அமர்க்களம்தானே. ஏற்கெனவே மூத்த மகன் ராஜாசிங் ஒரு பெண் விவகாரத்தில் சிக்கினார். இப்போது இளைய மகன் ஜெபசிங் மீது ஒரு பலே புகார். இவர்களின் தந்தையான அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் இப்போது முழி பிதுங்கித் தவித்துக் கொண்டு இருக்கிறார்!
'ஊரில் நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்பார் என்று நினைத்துதான் சி.த.செல்லபாண்டியனை வெற்றிபெறச் செய்தோம். ஆனால் அவரோ, அமைச்சரும் ஆகிவிட்ட நிலையில்... தனது வீட்டார் செய்கிற தவறுகளைக் கண்டுகொள்வதில்லை. அமைச்சரின் மூத்த மகன் ராஜாசிங், கட்டிய மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு சுற்றியதாக தகவல் வெளியானபோதே நாங்கள் அனைவரும் வேதனைப்பட்டோம். இப்போது இளையமகன் ஜெபசிங்கும் அந்த வழியில் போகிறார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், பல பெண்களோடு காமக்களியாட்டத்தில் ஈடுபடுகிறார். இந்த சி.டி-யே அதற்கு ஆதாரம்’ என நமக்கு வந்த கடிதத்தில் எழுதி இருந்தது.
'அமைச்சரின் மகன் ஜெபசிங்' என்று கடிதத்தில் குறிப்பிடும் ஒரு நபர் சி.டி-யில் 'விளையாடுகிறார்'!
இருபது வயது மதிக்கத்தக்க பெண்ணுடனும் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணுடனும் உல்லாசமாக அந்த நபர் இருப்பது போல் காட்சிகள்!
இந்தக் காட்சிகளை யார், எங்கே வைத்து எடுத்திருக்க முடியும் என்ற விசாரணையில் நாம் இறங்கினோம். அப்போது, ஜெபசிங் உடன் எப்போதும் இருக்கும் சின்னத்துரை என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீஸ் தேடி வருவதாகவும் ஒரு தகவல் கிடைத்தது.
தலைமறைவாக இருக்கும் சின்னத்துரையை அவரது செல்போனில் பிடித்தோம். 'நான் தான் அந்தக் காட்சிகளை வீடியோ எடுத்தேன்’ என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
''நான் டிராவல்ஸ் தொழில் நடத்திக்கொண்டு இருந்தேன். அமைச்சர் மூலமாக என்னிடம் இருக்கும் இரண்டு ஜே.சி.பி-களை ஏதாவது ரெகுலர் கான்ட்ராக்ட்டுக்கு விட்டுவிடலாம் என்ற ஆசையில் அவரை அணுகினேன். அப்போது அவருடைய மகன் ஜெபசிங்குடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் அவர் ஒரு கொஞ்சம் 'ஜாலியான’ ஆள் என்பதை தெரிந்து கொண்டேன். தினமும் அவரது ஆசையைப் பூர்த்தி செய்யத் தேவையானதைச் செய்து வந்தேன். இதற்கு என்னுடைய வீட்டையே பயன்படுத்தினேன்.
ஆனால் நான் எதிர்பார்த்தபடி எனக்கு கான்ட்ராக்ட் கிடைக்கவில்லை. இவர் பின்னால் சுற்றிச் சுற்றியே என்னுடைய தொழில் முடங்கியது. கார், ஜே.சி.பி. எல்லாவற்றையும் ஃபைனான்ஸ்காரர்கள் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு அவருக்கு உதவி செய்ய மறுத்தபோது, அமைச்சரின் மகன் என்ற ஆணவத்தில் என்னை மிரட்ட ஆரம்பித்தார். அதனால்தான் அவர் தொல்லையில் இருந்து மீளவும், தக்க பாடம் புகட்டவும் முடிவெடுத்தேன். படம் எடுத்தேன்.
இந்த விவரம் அவர்களுக்குத் தெரிந்து இப்போது என் குடும்பத்தையே மிரட்டுகிறார்கள். புகார் எதுவுமே இல்லாதபோதும்கூட நாகர்கோவிலில் இருக்கும் என் மனைவியின் குடும்பத்தினரை விசாரணை என்கிற பெயரில் போலீஸார் துன்புறுத்துகிறார்கள்'' என்று கதற ஆரம்பித்துவிட்டார் இந்த சின்னத்துரை.
இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டரான ஜோசப்ஜெட்சனிடம், ''சின்னத்துரை என்பவரை போலீஸ் தேடுகிறதா?'' என்று கேட்டோம். ''நாகர்கோவில் வரை போய் பார்த்துட்டோம். சின்னத்துரை கிடைக்கவில்லை'' என்றார். ''அவர் மீது ஏதாவது புகார் இருக்கிறதா?'' என்று கேட்டோம். ''இல்லை'' என்றார். ''புகாரே இல்லாமல் அடுத்த மாவட்டம் வரை சென்று தேடுவதற்கு என்ன காரணம்?'' என்றதற்கு, ''மேலதிகாரிகள் உத்தரவு. தேடிப் போனோம். எதற்காக இருக்கும்னு மேலதிகாரிகளுக்குத்தான் தெரியும் சார்...'' என்றார் இன்ஸ்பெக்டர்!
தூத்துக்குடி ஏ.எஸ்.பி-யான மகேஸிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''சின்னத்துரை இன்னமும் பிடிபடவில்லை'' என்று மட்டும் சொன்னார். ''அவர் மீது எதாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?'' என்றதும், ''யார் மீதும் புகார் இல்லை. யாரையும் தேடிப் போகவும் இல்லை'' என்று பிளேட்டைத் திருப்பினார்.
விவகாரத்தின் மையப் புள்ளியான அமைச்சரின் மகன் ஜெபசிங்கிடம் கேட்டோம். ''அந்த சி.டி-யில் இருப்பது நான் கிடையாது. அப்பாவின் பதவியைப் பறிப்பதற்காக சிலர் செய்யும் சதிதான் அது. கடந்த இரண்டரை மாதங்களாக அந்த சின்னத்துரை என்னைச் சந்திக்கவே இல்லை. அவர் குறிப்பிடுவது போல் நான் மோசமான நடத்தை கொண்ட ஆளும் இல்லை'' என்று திட்டவட்டமாக மறுத்தார்.
இதற்கு அமைச்சர் செல்லப்பாண்டியன் என்ன சொல்கிறார்? ''வேற எதையாவது பற்றி கேளுங்கள் சார்.. சொல்கிறேன். அந்த சி.டி விஷயம் பற்றி கேட்காதீர்கள். சிலர் ஏதாவது பிரச்னையில் மாட்டிவிட்டு என்னை காலி செய்ய வேண்டும் என்று குறியாக இருக்கிறார்கள். மேலும், என் மகனைக் குறி வைத்து கிளம்பும் இந்த விவகாரத்தில் நான் எப்படி பொறுப்பாவேன்?'' என்றார் கோபமாக.
சி.டி.யில் இருப்பது அமைச்சர் மகனா? அவர் இல்லை என்றால்.... சின்னத்துரையை எதற்கு போலீஸ் விரட்டுகிறது? கேள்விக்கு பதிலைத் தெரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. தெரிந்தால், வாக்களித்த மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமையும் இருக்கிறது!
No comments:
Post a Comment