Monday, July 23, 2012

தே.மு.தி.க-வை உடைக்கிறாரா விஜயகாந்த் நண்பர்? சுந்தர்ராஜனைச் சுற்றும் சர்ச்சைகள்




விஜயகாந்த் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை இழுக்க அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு அசைன்மென்ட்’ என்று உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் செய்தி கிளம்பியது. அப்போது, விஜயகாந்த்துக்கு மிக நெருக்கமான நண்பர் ஒருவர் தலைமையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் எட்டுப் பேர் அணி மாறப் போவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படியே அடங்கிப் போன விவகாரம், இப்போது மீண்டும் ஆர்ப்பரிக்கத் தொடங்கி உள்ளது! 
மதுரை மத்தியத் தொகுதி எம்.எல்.ஏ-வான சுந்தர்ராஜன், பால்ய காலத்தில் இருந்தே விஜயகாந்த் நண்பர். அதனால்தான் நம்பிக்கை வைத்து கட்சியின் பொருளாளர் பதவியில் உட்கார வைக்கப் பட்டார். இவரை மையப்படுத்தித்தான் தாவல் சர்ச்சைகள் வெடித் துள்ளது. 'அப்படி எந்தத் திட்டமும் அண்ணனிடம் இல்லை; எல்லாம் வதந்தி’ என்று சுந்தர்ராஜன் தரப்பில் சொல்லப்படுவதை, தே.மு.தி.க. பெரிய தலைகள் எந்த அளவுக்கு நம்புகிறதோ, தெரியவில்லை.
சுந்தர்ராஜனுக்கு நெருங்கிய மதுரை தே.மு.தி.க. புள்ளி ஒருவர், ''பதவியில் இருக்கும் போது தன்னை நம்பி நிற்பவர்களுக்கு நாலு காரியங்களைச் செஞ்சு குடுக்கணும்னு நினைக்கிறார் சுந்தர்ராஜன். அதுக்கு ஆளும் கட்சியின் சப்போர்ட் வேணும்கிறதால அ.தி.மு.க. அமைச்சர்கள் உள்ளிட்ட சிலருடன் நட்பாக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கும் கேப்டனுக்கும் இடையில் நேரடியா ஃபைட் வந்த பிறகும் அவர் அ.தி.மு.க. புள்ளிகளிடம் பழைய நட்புறவுடன்தான் இருக்கிறார். கட்சிக்காரர்களுக்காக அ.தி.மு.க. வட்டாரத்தில் சிபாரிசு செய் வதையும் குறைத்துக் கொள்ளவில்லை. இது கேப்டன் காதுக்குப் போனதும், மதுரையில் உள்ள கட்சிக்காரர்களிடம் விசாரித்திருக்கிறார். அவர்கள்தான் கேப்டனிடம் எசகுபிசகாக போட்டுக் கொடுத்து விட்டார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் சுந்தர்ராஜனின் ஆதரவாளரான மதுரை இளங்குமரன் ஓரம் கட்டப்பட்டார். தன்னைச் சுற்றி சதி வலை பின்னப்படுவது தெரிந்ததுமே, கட்சி நடவடிக்கை களில் இருந்து ஒதுங்கினார்.
சுந்தர்ராஜனின் காரில் 'கேப்டன்’ என்று எழுதி இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு அதை அழித்துவிட்டு, 'அழகு மலையான் துணை’ என்று எழுதினார். பிரச்னை வெடித்ததும் இப்போது மீண்டும் சின்னதாக எழுதியிருக்கிறார். காரில் கட்சிக் கொடி கட்டாமலும் சில நேரங்களில் கரை வேஷ்டி கட்டாமலும் பொது இடங்களுக்குப் போக ஆரம்பித்தார். இவரது நடவடிக்கைகளை மோப்பம் பிடித்த அ.தி.மு.க. புள்ளிகள், இவரை வளைத்துப் போட நினைச்சாங்க. 'ஆள் அப்செட்டில் இருக்கிறார். பேசிப் பார்த்தால் மடங்கிடுவார்’ என்று சிலர் கிளப்பி விட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைக் கேள்விப்பட்ட கேப்டன், சுதீஷ் மூலமா சுந்தர்ராஜனை சமாதானப்படுத்தினார்.
ஆனாலும் புதுக்கோட்டை இடைத் தேர்தல், ஜூன் 30-ல் செஞ்சியில் நடந்த உண்ணா விரதப் போராட்டம், கேப்டன் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து அண்மையில் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் போன்ற அனைத்திலுமே சுந்தர்ராஜன் சற்று விலகியே இருந்தார். இதை வைத்துதான், சில எம்.எல்.ஏ-க்களுடன் தே.மு.தி.க-வை உடைத்து அவர் அணி மாறப்போகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது'' என்று சொன்னார்.
இந்தத் தகவல்களை நாம் வரிசையாக அடுக்கியதும் அரண்டு போன சுந்தர்ராஜன், ''கேப்டனுக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், எங்களுக்குள் பிரச்னையை உருவாக்கி தே.மு.தி.க-வுக்குள் குழப்பத்தை உண்டாக்க சிலர் மனப்பால் குடிக்கிறார்கள்; அது நிச்சயம் நடக்காது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் நான் களப்பணி செய்திருக்கிறேன். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் செஞ்சி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் விஷயத்தை முன்கூட்டியே தலைமைக்குத் தெரியப்படுத்தி விட்டேன். கேப்டன் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பி இருந்ததால் நான் கலந்து கொள்ளவில்லை'' என்று சொன்னார்.
''காரில் பெயர் அழிச்சிருக்கீங்க. உங்க தலைமை யில தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் எட்டுப் பேரை போயஸ் கார்டனுக்கு தள்ளிக்கிட்டுப் போக முயற்சிகள் நடப்பதாச் சொல்றாங்களே..?''
''இதுக்குத்தான் பத்திரிகைக்காரங்க போன் பண்ணுனா நான் எடுக்குறதே இல்லை'' என்று கொந்தளித்தவர்... பின்னர் சமாதானமாகி, ''அழகுமலையான் துணைன்னு கார்ல எழுதணும்னு ஜாதகம் பார்த்துச் சொன்னாங்க. அதுக்காக கேப்டன் பெயரை ஒண்ணும் அழிக்கலை. அதுவும் அப்படியே இருக்கத்தான் செய்யுது. காரில் கட்சிக் கொடியும் இடுப்பில் கரை வேஷ்டியும் கட்டிட்டுப் போய்த்தான் 15-ம் தேதி விருதுநகரில் காமராஜர் சிலைக்கு மாலை போட்டேன். தொகுதிப் பிரச்னை சம்பந்தமாத்தான் ஓ.பி.எஸ். கிட்ட பேசியிருப்பேன். இதெல்லாம் ஒரு குத்தமாய்யா? எனக்கு வேற ஏதாச்சும் பிரச்னை வந்தால் நிச்சயம் உங்களைக் கூப்பிட்டு பேசுறேன்'' என்று அனுப்பி வைத்தார்.
இதனிடையே, ''தே.மு.தி.க.  எம்.எல்.ஏ-க்களை அ.தி.மு.க-வில் ஐக்கியப்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார். ஆனால், அப்படியரு அதிரடியில் இறங்கினால் தி.மு.க-வுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வந்துவிடும் என்பதால் அம்மா இந்த விஷயத்தை ஆறப் போட்டிருக்கிறார்'' என்று விடாப்படியாக கிசுகிசுக்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.
நெருப்பு இல்லாமல் என்றைக்குப் புகை வந்தது?

No comments:

Post a Comment