Monday, July 30, 2012

ஸ்ருதியின் உயிர் குடித்த எஃப்.சி.! போக்குவரத்து துறைக்குள் பெரிய ஓட்டை!


அம்மா... இன்னைக்கி என்ன சொல்லிக் குடுத்தாங்க தெரியுமா...'' என்று குதூகலத்துடன்துள்ளிக் குதித்து பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைக்​காகக் காத்திருக்கும் தாயிடம், அந்தக் குழந்தையின் உடலை வெள்ளைத் துணியில் கட்டிக்கொடுத்தால்..? 
அப்படி ஒரு சோகம் நடந்திருக்கிறது சென்​னையை அடுத்த தாம்பரத்தில். பள்ளியில் இருந்து பஸ்ஸில் திரும்பிய ஏழு வயதான ஸ்ருதி, அந்த பஸ்ஸில் இருந்த ஓட்டை வழியே ரோட்டில் விழுந்து... தலையில் டயர் ஏறி உயிரை இழந்திருக்கிறாள். ஓட்டை இருந்தது பஸ்ஸில் மட்டுமா? பள்ளியின் நிர்வாகத்தில், கல்வித் துறையில், போக்குவரத்துத் துறையில் எவ்வளவு பெரிய ஓட்டைகள் இருக்கின்றன என்பதைத் தனது சாவின் மூலமாகக் காட்டிவிட்டு மறைந்து விட்டாள் ஸ்ருதி. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சோகச் சம்பவங்கள் இனி காட்சிகளாக...
காட்சி 1: கிழக்குத் தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் இருக்கும் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த 25-ம் தேதி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மாலை 4 மணிக்குக் கிளம்பிய பஸ், முடிச்சூர் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டு இருந்தது. அங்குள்ள அட்டைக் கம்பெனி ஒன்றின் அருகே சென்ற நேரத்தில், பஸ்ஸின் இருக்கையில் இருந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, பஸ்ஸின் குலுங்கலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஸீட்டில் இருந்து விழுந்திருக்கிறாள். அவள் விழுந்த இடத்தில் ஒரு பெரிய ஓட்டை. அதை மூடியிருந்த காலண்டர் அட்டை நழுவிக்கொள்ளவே, அந்த அட்டையோடு சேர்ந்து ஸ்ருதியும் ஓட்டை வழியாக சாலையில் விழுந்து விட்டாள். அடுத்த நொடியில் பஸ்ஸின் பின்பக்க டயர் அவள் தலையை நசுக்கிக் கூழாக்கி விட்டது. அலறக்கூட முடியாமல், அந்தக் குழந்தையின் உயிர் நொடியில் காற்றோடு கலந்து விட்டது. உடன் சென்ற குழந்தைகளின் கதறலைக் கண்டுகொள்ளாமல் விரைந்தது பஸ்.
காட்சி 2: சம்பவத்தை நேரில் பார்க்கிறார் பெட்ரோல் பங்க் வாசலில் இருந்த கிருஷ்ணன். பஸ்ஸில் இருந்து ஒரு குழந்தை விழுந்து நசுங்கிக் கிடப்பதையும், அதுகூடத் தெரியாமல் பஸ் வேகமாகப் பறப்பதையும் பார்த்துப் பதைபதைத்துப் போகிறார். உடனே, அந்த ரோட்டின் மறுமுனையில் இருக்கும் தன் நண்பர் ஒருவருக்கு செல்போனில் தகவல் சொல்கிறார். நண்பர் அந்த பஸ்ஸை வழிமறித்து, குழந்தை கீழே விழுந்த தகவலைச் சொல்கிறார். ஆனால் டிரைவர் சீமான், 'இந்த பஸ்ஸில் இருந்து யாரும் விழவில்லை’ என்று கூறிவிட்டு பஸ்ஸைக் கிளப்ப முயற்சிக்கிறார். அதற்குள் கூட்டம் கூடுகிறது. தப்பி ஓட நினைத்த டிரைவருக்கு சரமாரி அடி விழுகிறது. பஸ்ஸில் இருந்த மற்ற குழந்தைகளை இறக்கி அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில் உட்கார வைக்கிறார்கள் முடிச்சூர் மக்கள்.
காட்சி 3: சாலையில் இறந்துகிடக்கும் குழந்தை யாருடையது என்று தெரியாமல் மக்கள் அலைமோதுகிறார்கள். பின்னர் அது, ஆட்டோ டிரைவர் மாதவனுடைய குழந்தை என்று அடையாளம் காணப்படுகிறது. உடனே, செல்போனில் மாதவனுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 'பஸ்ஸில் இருந்து குழந்தை விழுந்துவிட்டாள்’ என்று மட்டும் கூறியதால், 'உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க. என் வண்டியில் இருக்கும் குழந்தைகளை இறக்கிட்டு வந்துடறேன்’ என்று அந்த நேரத்திலும் கடமை மாறாத மனிதராக போன் செய்தவரிடம் சொல்கிறார் மாதவன். ஆட்டோ டிரைவரான மாதவன் தினமும் 50 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருபவர். வண்டியில் இருந்த குழந்தைகளை இறக்கிவிட்டுத் திரும்பி வருகிறார். அப்போதுதான், சாலையில் பெரும் கூட்டம் கூடி நிற்பதைப் பார்க்கிறார். வண்டியை ஓரம் கட்டிவிட்டு கூட்டத்துக்குள் வருகிறார். சாலையில் ஒரு குழந்தையின் சடலம் துணியால் போர்த்தப்பட்டுக் கிடக்கிறது. அருகில் அவரது நண்பர்களும் நிற்பதைப் பார்த்ததும் மாதவனுக்கு கை, கால்கள் நடுங்குகிறது. அந்தத் துணியை விலக்கிப் பார்க்க முயற்சிக்கிறார். எல்லோரும் அவரைத் தடுக்கிறார்கள். கதறுகிறார். ''வேண்டாம்டா... எங்களாலயே பார்க்க முடியலை...'' என்று கதறுகின்றனர் நண்பர்களும். அந்த இடத்தைப் பெரும்துயரம் சூழ்ந்து கொள்கிறது. மாதவனின் அலறல் கூடியிருந்த அனைவரையும் கதிகலங்க வைக்கிறது. குழந்தையின் வருகைக்காகக் காத்திருந்த மாதவனின் மனைவி பிரியாவுக்குத் தகவல் சொல்கின்றனர். ஆக்ஸிடென்ட் என்று கேள்விப்பட்டதுமே மயங்கிச் சரிந்த அந்தத் தாய், வியாழன் காலை வரை கண் திறக்கவில்லை. அதன் பிறகு எழுந்தவருக்குத் தகவல் சொல்ல முடியாமல் குடும்பத்தினர் தவித்தது பெரும் சோகம். இன்னமும் கதறிக் கதறி அழுதுகொண்டு இருக்கிறார் பிரியா.
காட்சி 4:  நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மக்கள் திரள்கிறார்கள். குழந்தையின் உடலைப் பார்த்து இதயம் வெடித்துப்போகிறார்கள். சம்பவ இடத்தில் இருந்து, தொலைவில் நிற்கும் பஸ்ஸைப் பார்க்கும்போது ஆத்திரம் பீறிடுகிறது. உடனே ஓடிப்போய் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகின்றனர். இன்னும் சிலரோ ஆத்திரம் தீராமல் பஸ்ஸுக்குத் தீ வைக்கின்றனர். போலீஸ் வந்துதான் பொதுமக்களை விரட்ட முடிந்தது. தீயணைப்பு வண்டிக்குத் தகவல் பறக்கிறது. இதற்கிடையில், ஆம்புலன்ஸ் வந்து ஸ்ருதியின் உடலை எடுத்துக்கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பறக்கிறது. தீயணைப்பு வண்டி வந்து சேருவதற்குள், பஸ் எலும்புக்கூடாகி விட்டது.
காட்சி 5:  பஸ் டிரைவர் சீமான், சீயோன் பள்ளி நிறுவனர், தாளாளர் மற்றும் முதல்வருமான விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஷ், பஸ் கிளீனர் சண்முகம் ஆகிய நான்கு பேரையும், பல்லாவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை செய்கின்றனர். நள்ளிரவு 11 மணிக்கு நான்கு பேரையும் கைது செய்து இருப்பதாக அறிவிக்கிறது போலீஸ்.
26-ம் தேதி காலை முடிச்சூர் மக்கள் சுமார் 500 பேர் சம்பவம் நடந்த இடத்தில் திரண்டனர். அங்கிருந்து, ஊர்வலமாக குழந்தை ஸ்ருதி வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை, கலெக்டர் அனீஸ் ஸாப்ரா, ஸ்ருதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவியை பெற்றோரிடம் கொடுத்தார். ஊர்மக்கள் அத்தனை பேரும் கண்ணீருடன் ஸ்ருதியின் உடலை வழியனுப்பி வைத்தார்கள்.

இத்தனை சம்பவங்களுக்கும் காரணமான இந்த பஸ்ஸுக்கு கடந்த 9-ம் தேதிதான் தகுதிச் சான்​றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. பஸ்ஸின் அனைத்துப் பாகங்களும் தகுதியுடன் இருப்பதாக சான்று கொடுத்திருக்கிறார் தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி. ''ஒரு குழந்தை விழும் அளவுக்கு பஸ்ஸில் ஓட்டை இருந்த​தைக்​கூடப் பார்க்காமல் எப்படி தகுதிச் சான்றிதழ் வழங்கினீர்கள்?'' என்று போலீஸ் துணை கமிஷனர் விமலா கேட்டதற்கு, ''நாங்கள் சான்றிதழ் வழங்கிய பிறகு டேமேஜ் ஆகி இருக்கலாம்'' என்று அசட்டையாகப் பதில் சொன்னாராம் பாட்டப்பசாமி.

அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் சிலர், பாட்டப்பசாமியைப் பார்த்து, ''எவ்வளவு பணம் வாங்கிட்டு இந்த பஸ்ஸுக்கு எஃப்.சி. குடுத்தீங்க. அந்தக் காசெல்லாம் என்னய்யா பண்ணப்போறீங்க. உங்க வீட்டுலயும் இந்த மாதிரி குழந்தைங்க இருக்கா... இல்லையா? முதல்ல இவரை அரெஸ்ட் பண்ணுங்க'' என்று ஆவேசத்தைக் காட்டினார்கள். நிலைமை சிக்கல் ஆவதை உணர்ந்த போலீஸ், உடனே அங்கே இருந்து பாட்டப்பசாமியை பத்திரமாக அனுப்பி வைத்தார்கள்.
ஓர் அசம்பாவிதம் நடந்ததும் கூப்பாடு போட்டு அதிரடி நடவடிக்கை எடுப்பது வழக்கம்தான். அப்படித்தான், தமிழகம் முழுவதும் பள்ளிப் பேருந்துகளை ஆய்வு செய்யும்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவு போட்டுள்ளது தமிழக அரசு. இந்தச் சம்பவம் பற்றி ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தானாகவே முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு உள்ளது. இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாட்டப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர்  சஸ்பெண்ட் செய்யட்டுள்ளனர்.
பள்ளிக்கூடம் கட்டி... ஆயிரக்கணக்கில் வசூல் செய்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் மனிதர்கள் இருக்கும் வரை இன்னும் எத்தனை பச்சைப் படுகொலைகளை நாம் பார்க்கப்போகிறோமோ?


thanks to vikatan.com

No comments:

Post a Comment