Monday, July 9, 2012

தப்பை நான் திருத்திக்கிறேன்! மீண்டும் கிளம்பிய விஜயகாந்த்


சீண்டிச் சீண்டியே எழுப்பிவிடுவது என்பது இதுதான்... விஜயகாந்த் மீண்டும் தன்னுடைய தொகுதி உலாவைத் தொடங்கிவிட்டார்!
 சட்டசபைக்குள் வந்து கை நீட்டினார்... நாக்கைத் துருத்தினார் என்று குற்றம் சாட்டப் பட்ட எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், சபை கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு நடவடிக்கைக்கு உள்ளானார். 'அங்கே போனால் ஜால்ரா மட்டும்தான் தட்ட முடியும். நான் எங்​களுக்கு வாக்களித்த மக்களைத் தொ​குதி தொகுதி​யாகச் சென்று சந்திக்கப்போகிறேன்’ என்று கிளம்பினார். புதுக்கோட்டை இடைத்​தேர்தல் காரணமாக அந்தப் பயணம் இடையில் தடைபட்டது. மீண்டும் அது ஆரம்பம்!
'ஓட்டு வாங்கினவர்கிட்ட கேளுங்க!’
கடந்த 30-ம் தேதி செங்கம் தொகுதியில் முதல் விசிட். சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் பயபக்தி​யோடு விஜயகாந்த்துடன் பவனி வந்தார். புகார்களுடன் வந்த பொது​மக்களிடம், ''என்னம்மா, உங்க எம்.எல்.ஏ. நல்லது செய்​றாரா? தொகுதிக்கு வர்றாரா?'' என்று அக்கறை​யாக விசாரித்​தார். ''குடிக்கத் தண்ணீர் வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுய்யா... என்ன பண்ணுறதுன்னே தெரியல. நீங்கதான் ஏதாவது பண்ணணும்'' என்று அவர்கள் ஓங்கிக் குரல் கொடுக்கவும் ஜெர்க் கான விஜயகாந்த்,  ''உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டீங்க. இங்கே கவுன்சிலர் அ.தி.மு.க-தானே... அவர்கிட்டே போய்க் கேளுங்க'' என்று கடிந்துகொண்டு நடையைக் கட்டினார்.
செங்கம் தொகுதி விசிட்டை அடுத்து, மதியச் சாப்பாட்டை போளூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முடித்தார் விஜயகாந்த். அவருக்காக வெளியே பலரும் காத்திருக்க, 'இதோ... அதோ’ என்று ரன்னிங் கமென்ட்ரி மட்டும் வந்துகொண்டே இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துத்தான், 'தலைவர் தூங்கிக்கொண்டு இருக் கிறார்’ என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. 'இதை எதுக்குப்பா ரகசியமா வெச்சிருக்காங்க?’ என்றபடி கலைந்து சென்றது கூட்டம்.
'கொள்ளை அடிச்சு என்ன பண்ணப்போறீங்க?’
ஆரணியில் மைக் பிடித்த விஜயகாந்த், ''உங்க எம்.எல்.ஏ. தொகுதிக்கு என்ன செஞ்சார்? எங்களிடம் குறை இருந்தாச் சொல்லுங்க... திருத்திக்கிறோம்னு உங்ககிட்ட கேட்கத்தான் வந்திருக்கேன். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு இப்ப கமிஷன் வாங்குறாங்க. குடிநீர் வடிகால் வாரியத்திலேயும், ஊரக வளர்ச்சித் திட்டத்திலேயும் கமிஷன் வாங்குறாங்களாம். இதைச் சொன்னா ஆதாரம் இருக்கான்னு கேக்குறாங்க. கொள்ளை அடிக்கிறவங்க ஆதாரம் வெச்சுக்கிட்டா கொள்ளை அடிப் பாங்க? இப்படிக் கொள்ளை அடிச்சு என்ன தான் செய்யப்போறீங்க? போகும்போது எல்லோருக்கும் ஆறுக்கு மூணுதான். இப்ப எங்களைப் பார்த்து, 'அசிங்கமா அவங்ககூட கூட்டணி வெச்சிட்டோம்’னு சொல்றாங்க. அது இப்பத்தான் தெரிஞ்சதா? இவங்ககூட இருந்த தோழியவே 25 வருஷங்களுக்குப் பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா, இப்ப ஒண்ணா சேர்ந்துக் கிட்டாங்க. இது எவ்வளவு பெரிய நாடகம். தமிழ் நாட்டில் குடிக்கத் தண்ணி கிடையாது. நம்மளைச் சுத்தி கேரளா, ஆந்திரானு எல்லோரும் தண்ணி தர மாட்டேங்குறாங்க. அணை கட்டுறாங்க. இதனாலதான் நான் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கிறேன். அப்போதுதான் தமிழர்களின் நிலைமை அவங்களுக்கு கொஞ்சமாவது தெரியும்!'' என்றார் ஆவேசமாக.
'தொகுதியை இப்படித்தான் வெச்சிருப்பியா?’
அடுத்த நாள் காலையில், சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ-வான பி.ஆர்.மனோகரனோடு கிளம்பி பனப்​பாக்கத்துக்கு 12 மணி அளவில் வந்து சேர்ந்தார். நல்ல கூட்டம் என்பதால், வண்டியில் இருந்து இறங்க முடியாமல் தவித்தார். கால்வாய் பாலம் தாண்டியதும் கீழே இறங்க முயற்சிக்க, கூட்டத்தில் தள்ளுமுள்ளு அதிகமானது. அதுவரை அமைதியாக இருந்த விஜயகாந்த், அதற்கும் மேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் கையை ஓங்கிக்கொண்டு அடிக்கப் பாய்ந்தார். ''ஏன்யா இப்படிப் பண்றீங்க, உங்​களைப் பார்க்கத்தானே வந்திருக்கேன்!'' என்று கோபத்துடன் கத்தி, அதன் பிறகு சமாளித்துக்கொண்டு பேசினார்.
பனப்பாக்கத்தில் இருந்து பாணாவரம் சென் றார்கள். சுமார் 20 கி.மீ. தூரம் குண்டும் குழியுமாக இருந்தது. திரும்பிய பக்கம் எல்லாம் வறட்சி. அதைப் பார்த்து, ''உன் தொகுதியை இப்படித்தான் வெச்சுருப்பியா?'' என்று எகிறினார். ஆனால் மனோகரன் கொஞ்சம்கூட ஆத்திரப்படாமல், ''அ.தி.மு.க-வின் முக்கிய மாவட்டப் புள்ளி ஒருவர்தான் சாலை முதல் குடிநீர் வசதிகள் வரை டெண்டர் எடுத்து இருக்கிறார். எம்.எல்.ஏ. நம்ம கட்சி என்பதால் எந்தப் பணியும் நடக்கவில்லை, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தும்கூட இந்தப் பகுதிக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை'' என்று எடுத்துச் சொன்னதும் அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.
பேரு வெச்ச விஜயகாந்த்!
சோளிங்கர் தொகுதியில் மழை மேகம் கருகரு வென சூழ்ந்து இருந்த நிலையிலும் கறுப்புக் கண்ணாடியைக் கழட்டாமல் பேசிய விஜயகாந்த், ''உங்க தொகுதியில் பல இடங்களைப் பார்த்தேன். மனசு கஷ்டமா இருந்தது. மலையைக் குடைஞ்சு கட்டெறும்பா மாத்திட்டாங்க. இதுக்கெல்லாம் அவங்கதான் காரணம். அவங்களுக்கு நாம தக்க பாடம் கற்றுத் தரணும். நாடாளுமன்றத் தேர்தல்ல உங்க பாதத்துக்குப் பூஜை பண்ணி ஓட்டுக் கேட்பாங்க. ஆனா, அதை எல்லாம் நீங்க நம்ப வேண்டாம். நான் ஒரு வருஷம் கழிச்சுத்தான் வந்திருக்கேன். எங்க தவறைத் திருத்திக்கிறோம். உங்களுக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கோம். மக்களே, எங்களை மறக்காதீங்க'' என்றபடி மேடையைவிட்டு இறங்கினார். ஒரு பெண், ''ஐயா என் புள்ளைக்கு நீங்கதான் பேரு வைக்கணும்!'' என்றபடி வேகமாக வந்தார். குழந்தையின் காது அருகே குனிந்து ஏதோ சொல்லிவிட்டு, திருத்தணிக்குக் கிளம்பினார். ''என்னம்மா பேரு!'' என்று தொண்டர்கள் ஆர்வத் துடன் கேட்க, தே.மு.தி.க-வின் சின்னத்தைக் காட்டினார் அந்தப் பெண். 'முரசு’!

No comments:

Post a Comment