கேரளச் சிறுமியான 15 வயது சத்யாவின் மரணம் குறித்து, 'கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து... பெரம்பலூரில் சிதைக்கப்பட்ட கேரளச் சிறுமி!’ என்ற தலைப்பில் கடந்த வாரம் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், 'தவறை மறைக்கத் துணை போன மருத்துவமனைகள் மற்றும் விலை போன தமிழக காவல் துறை அதிகாரிகள் மீது சட்டம் பாய்வது எப்போது?’ என்று கேள்வி எழுப்பி இருந்தோம்.
முதல் கட்டமாக, குற்றத்தை மறைத்த பெரம்பலுர் காவல் நிலைய எழுத்தர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் மயில்சாமிக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயலாம்.
வீட்டு வேலைக்காக வந்த சத்யாவைக் கற்பழித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், ஜெய்சங்கர், மகேந்திரன், அன்பரசு ஆகியோர் கடந்த 19-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆண்மைப் பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்து வரப்பட்டனர். ராஜ்குமாரை தவிர்த்த மூவருக்கும் 11.50-க்குள் பரிசோதனை முடிந்துவிட்டது. ஆனால் ராஜ்குமார் மட்டும் மாலை 4 மணி வரை இழுத்தடிக்கவே, கடுப்பான மருத்துவர்கள் அவரை மிரட்டிதான் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவில் நான்கு பேரும் ஆண்மைத்தன்மை உள்ளவர்கள் என மருத்துவரால் சான்றளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உமாபதி களமிறங்கி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில், கேரளாவில் போடப்பட்ட வழக்கில் புரோக்கர்களான பன்னீர் செல்வம், ஹரிகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து பீர்மேடு சப்-ஜெயிலில் அடைத்துள்ளனர் கேரள போலீஸார். விசாரணையில் பன்னீரும், விஜயகுமாரும் ஒரே வீட்டில் பெண் எடுத்த வகையில் சகலைகள் எனவும், இருவரும் தமிழ்நாட்டுக்கு பல சிறுமிகளை அனுப்பி இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் மீது கேரளாவில் போடப்பட்ட வழக்கின்படி, ஏஜென்டுகளாக இருந்து ஆள் கடத்தல், கொலை மற்றும் பெண்ணை கொடூரமாக கற்பழித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கேரள அரசின் குழந்தைகள் நலவாரியம் இடுக்கி மாவட்டத்தில் விசாரணையில் இறங்கிய நேரத்தில், சத்யாவின் பெற்றோர் சந்திரன் மற்றும் சுசிலாவும் முன்னுக்குப் பின் முரணாகவே பதில் அளித்துள்ளனர்.
'சத்யாவுக்கு நோய் இருந்தது. அதற்காக பீர்மேடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். சத்யா ஒரு பையனைக் காதலித்தாள். அதனாலேயே சத்யாவை இடம் மாற்றி வேறு ஊருக்கு படிக்க அனுப்பினோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். பீர்மேடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல வாரியத்தினர் விசாரித்தபோது, கடந்த இரண்டு மாதங்களில் சத்யா உட்பட அந்த ஊர்க்காரர்கள் எவரும் சிகிச்சைக்கு வரவில்லை என்று பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு சொல்கிறார்கள். சத்யா படித்த வ.உ.சி. நினைவுப் பள்ளியில் விசாரித்த குழுவினரிடம், சத்யாவின் ஆசிரியர்களும் தோழிகளும் சத்யா யாரையும் காதலிக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
அந்தக் குழுவின் விசாரணை முடிந்துவிட்டது. அதன்படி, இடுக்கி மாவட்டத்தில் மட்டும் சத்யாவைபோன்று 37 பெண் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளுக்காக தமிழ் நாட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்களாம். பணத்துக்கு ஆசைப்பட்டு தவறான தகவல்களைத் தந்த சத்யாவின் பெற்றோர் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று கேரள அதிகாரிகள் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் சத்யாவுக் காகப் போராடி வரும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பிஜுமோளிடம் பேசினோம். ''சத்யாவின் மரணத்துக்குப் பிறகு ஆய்வு செய்ததில் வீட்டு வேலைக்குச் சென்ற ஏராளமான பெண்களில், 17 பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சத்யாவின் அக்கா நித்யா உட்பட பலர் புரோக்கர்களால் விற்பனை செய்யப்பட்டிருக்கிறார்கள். மெடிக்கல் ரிப்போர்ட்டில் சத்யா கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வழக்கு இரு மாநிலப் பிரச்னையாக இருப்பதால், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கேரள சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளேன். என் கோரிக்கை சபையில் அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சத்யாவின் மரணம் - புதைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது'' என்றார்.
சத்யாவின் இறப்பு குறித்து பத்திரிகை களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியாகியும், இறுதிச் சடங்குக்குக் கூட அவரது அக்கா நித்யா வரவில்லை. அதனால் நித்யா இப்போது உயிரோடுதான் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். இரு மாநில போலீஸும் தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதால், விரைவில் பல திருப்பங்களும் அதிரடி கைதுகளும் அரங்கேறலாம்!
No comments:
Post a Comment