Monday, July 9, 2012

கொடநாடுக்கு கோர்ட்டை மாற்றிவிடலாமா? பெங்களூரு கோர்ட்டில் ஒலித்த குரல்!


ல்லிக்கு வால் துண்டானாலும் மீண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, வாய்தா மேல் வாய்தா என்று வளர்ந்து கொண்டே செல்கிறது. 
இந்த வழக்கை நொண்டி அடிக்க வைப்பதற்காக எத்தனையோ மனுக்கள் போடப்பட்டன என்றாலும், ஜூன் 25-ம் தேதி போட்டதுதான் மெகா 'மனு’ குண்டு. யாருமே எதிர்பாராத வகையில், நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனத்தையே கேள்விக்குறி ஆக்கியது அந்த மனு.
இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு கடந்த 3-ம் தேதி கோர்ட் கூடியது. பதில் மனுவைத் தாக்கல் செய்த ஆச்சார்யா, ''சுப்ரீம்கோர்ட் ஒரு முறை மட்டும்தான், நீதிபதியின் பெயரைச் சொல்லி ஸ்பெஷல் கோர்ட்டுக்கு டைரக்ஷன் கொடுக்கும். அதன்பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றமும் மாநில அரசும் சேர்ந்து நியமிக்கும் நபரே, ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாகக் கருதப்படுவார். நீங்கள் கூறுவதுபோல் ஒவ்வொரு முறையும் நீதி பதியின் பெயரைச் சொல்லியோ அல்லது மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டோதான் நியமிக்க வேண்டும் என்று சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. இதெல்லாம் அவர்களுடைய வழக்கமான இழுத்தடிப்பு டெக்னிக்தான்'' என்று அனல் கக்கினார்.
நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவும் ஆச்சார்யாவின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ''சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படி, ஸ்பெ ஷல் கோர்ட் நீதிபதியாக வருபவரின் பெயரை ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டியது இல்லை'' என்றவர் சுற்று முற்றும் பார்த்தபடி, ''குற்றவாளிகள் நான்கு பேரும் (ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி) கோர்ட்டுக்கு ஏன் வரவில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.
''ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் இசட் ப்ளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சசிகலாவுக்குக் கண்ணில் கோளாறு, சுதாகரனுக்கு முதுகு வலி, இளவரசிக்கு சர்க்கரை நோய்'' என்று வழக்கறிஞர்கள் வழக்கமான ரெடிமேட் பதிலை மீண்டும் சொன்னார்கள். அப்போது ''அப்படின்னா கோர்ட்டை கொடநாடுக்கு மாத்திடலாமா?'' என்று வேடிக்கை பார்க்க வந்த வக்கீல் ஒருவர் கமென்ட் அடிக்க... சிரிப்பலை எழுந்தது.
ஜெயலலிதா தரப்பு வக்கீல் பி.குமாரும், சசிகலா தரப்பு வக்கீல் மணிசங்கரும் எழுந்து, ''அரசுத் தரப்பின் மனுவைப் படித்துப் பார்க்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும்'' என்றார்கள்.
''அதுக்கு ஒரு வாரமா?'' என ஷாக்கான நீதிபதி, வழக்கை 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
''6-ம் தேதி அரசுத் தரப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?'' என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல்களிடம் கேட்டோம்.
''இந்திய ஊழல் தடுப்புத்துறை சட்டம் பிரிவு 3-ன்படி, நியமிக்கப்படும் ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியின் பெயரை சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படி மாநில அரசும், உயர் நீதிமன்றமும் முறையான அறிவிப்புடன் வெளியிட வேண்டும். இந்த நடைமுறையை நீதிபதி ஏ.எஸ்.பச்சாபுர்ரேவை நியமிக்கும்போது மட்டுமே கடைப்பிடித்தார்கள். அதன் பிறகு, ஸ்பெஷல் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி மனோலி மற்றும் மல்லிகார்ஜுனைய்யா நியமனத்தில் கடைப்பிடிக்கவில்லை. நாங்கள் சட்டப்படி போடும் பெட்டிஷனைக்கூட, 'இழுத்தடிக்கிறோம்’ என்று சொல்கிறார்கள். இது ரொம்பவும் ஸ்ட்ராங்கான பெட்டிஷன். எங்களிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதால், இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்போம்'' என்றார்.
''நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கழித்து, திடீரென இந்த மனுவைப் போடுகிறீர்களே?'' என்று கேட்டபோது, ''இப்போதுதான் எங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்தன. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மனு போட்டுத்தான் ஆதாரங்களை வாங்கினோம்'' என்றார்.
கோர்ட்டை விட்டு வெளியே வந்த ஆச்சார்யாவிடம் பேசினோம், ''2004-ல் இந்த வழக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அதனால், அப்போது நீதிபதியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டு நீதிபதிகள் மாறி விட்டனர். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாதவர்கள், இப்போது மனு போடுவதன் அவசியம் என்ன? வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிக்கின்றனர்'' என்று கூறிவிட்டு கிளம்பினார்.
இதுகுறித்து, ஸ்பெஷல் கோர்ட் வட்டாரத்தில் பேசினோம். ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா ஆகஸ்ட் 4-ம் தேதி ஓய்வு பெறுகிறார். மிஞ்சிப்போனாலும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது. அதனால், புதிய நீதிபதியிடம் வழக்கை நடத்திக்கொள்ளலாம் என்ற முடிவில்தான் ஜெயலலிதா டீம் இருக்கிறார்கள்'' என்று சொன்னார்கள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் வெளிச்சம் தெரியவில்லை

No comments:

Post a Comment