ஆனந்தம் என்பதுதான் நம் ஆத்மாவின் ஸ்திரமான, சாசுவதமான ஸ்வபாவம். எதிலும் பட்டுக் கொள்ளாமல், துக்கலேசமேயில்லாமல், தன்னில் தானாக இருக்கிற சாந்த நிலையில் இருப்பதுதான் ஆனந்தம்.
அந்த ஆனந்தம் சூரிய வெளிச்சம்போல சர்வ வியாபகமாகப் பரந்து இருப்பது. ஆனால் நமக்கு அது தெரியவில்லை. மரத்தடியில் சூரிய வெளிச்சம் தெரியாத மாதிரி, மாயையின் நிழலில் இருக்கிற நமக்கு இந்த ஆனந்தம் தெரியவில்லை. மரக்கிளை ஆடும்போது இடுக்கு வழியே துளித் துளி வெளிச்சம் வருகிற மாதிரி கோபம், கர்மம், வீரம், பயம், சோகம் இத்யாதி உணர்ச்சிகள் ஆட்டம் போடுகிற போது, ஆனந்தத்தின் ஒளி துளித் துளி நம் மேல்படுகிறது. நல்ல உணர்ச்சி, கெட்ட உணர்ச்சி எதுவானாலும் நாம் ஒன்றை உணருகிறோம் என்றால் அதற்கு ஆத்மாதானே அடிப்படை? அதனால் எந்த ரஸத்தை அனுபவித்தாலும், ஆத்மாவின் ஸ்வபாவமான ஆனந்தம் அதற்குள் கொஞ்சம் ‘டால்’ அடித்துக் கொண்டு தான் இருக்கும். இப்படியில்லாமல் மரத்தை விட்டு வெளியிலே வந்துவிட்டால், முழு ஸூர்ய வெளிச்சம். கிளைகள் பலவிதமாக ஆடுகிறபோது, பல தினுசாக விழுந்த துளித் துளி வெளிச்சமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்த முழு வெளிச்சம் அதுதான்.
சூரிய வெளிச்சத்தில் கலர் இல்லை. அந்த மாதிரி சாந்தத்தில் தனியாக ஒரு உணர்ச்சி, ஒரு ரஸம் இல்லை என்பது ஒரு அபிப்பிராயம். ஆனாலும் ஸூர்ய வெளிச்சத்திலிருந்துதான் இத்தனை கலர்களும் வந்திருக்கின்றன. ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் ஸூர்ய வெளிச்சத்தைப் பிரித்து (Split) பண்ணிப் பார்த்தால் அதிலிருந்தே ஏழு கலர்களும் வருவதைப் பார்க்கலாம். ஸயன்ஸ் நிபுணர்கள் ஸூர்ய வெளிச்சத்தில் இன்னின்ன கலர்கள் இன்னின்ன விகிதத்தில் இருக்கின்றன என்று அளவிட்டிருக்கிறார்கள். அதே விகிதத்தில், இந்த ஏழு கலர்களைக் கலக்கிற போதெல்லாம், அத்தனை கலர்களும் சேர்ந்து வெள்ளையாகிவிடுகின்றன!
ஒரு உணர்ச்சியும் இல்லாத சாந்தத்தில்தான் அத்தனை உணர்ச்சிகளும் பிறந்திருக்கின்றன; அந்த உணர்ச்சிகளுக்கு ஆஸ்பதமான ஸகல ஜீவர்களும் காரியங்களும் அதற்குள்ளேயே அடக்கம்; சாந்த ஆத்மாதான் இத்தனையும்.
- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment