Monday, July 9, 2012

துப்பட்டாவுக்குள் மறையும் ஜெயலலிதா மகள்? மறைக்கும் மர்மம் என்ன?


ஜூலை 3-ம் தேதி... பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலையில் இருந்தே பரபரப்பு. காரணம்... 'முதல்வர் ஜெயலலிதாவின் மகள்’ என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பிரியா மகாலட்சுமியை போலீஸார் அங்கு ஆஜர்படுத்த இருந்ததுதான். 
மதியம் 2 மணிக்கு கோர்ட் முன் டாடா சுமோ கார் ஒன்று வந்து நின்றது. கார் கதவைத் திறந்த போலீஸார், காத்திருந்த மீடியாக்களைக் கண்டதும் சட்டென்று மூடி விட்டனர். கால் மணி நேரம் கழித்தே மீண்டும் கதவைத் திறக்க, முகத்தை மூடியபடி ஒரு உருவம் அதில் இருந்து இறங்கியது. பச்சை, சிவப்பு நிறம் கலந்த சுடிதார் அணிந்து துப்பட்டாவால் முகத்தை மூடியபடி வந்தார் பிரியா. உடன் வந்த போலீஸ்காரர்கள் அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டு, மீடியாக்கள் பிரியாவைப் புகைப்படம் எடுக்காதவாறு வந்தனர்.  மாஜிஸ்திரேட் முன்னால் பிரியா நிறுத்தப்பட, 'உங்களுக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு’ என்றார் மாஜிஸ்திரேட்.  


அங்கு இருந்த வழக்கறிஞர்களைப் பார்த்து... ''எங்க என்னோட அட்வகேட்?'' என்று அதட்டலாக பிரியா கேட்க... ஒரு வழக்கறிஞர் பவ்யமாகக் கையைக் கட்டிக்கொண்டு, ''மேடம்... உங்க வழக்கறிஞர் அம்மாசி. அவருக்கு அல்சர் பிரச்னை காரணமா பெங்களூரு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கார். அவரோட ஜூனியர் வேல் முருகன்தான் நான்'' என்று சொன்னார். ''ஏன் பெயில் எடுக்க லேட் ஆகுது?'' என்று அவரிடம் பிரியா கோபமாகக் கேட்டார். ''மேடம்... போலீஸ் உங்க மேல பல செக்ஷன்ல கேஸ் போட்டு இருக்காங்க. நாம சட்டப்படி பெயிலுக்கு அப்ளை பண்ணிட்டோம். ஓரிரு நாளில் பெயில் கிடைச்சிடும்'' என்றார். 'சீக்கிரமா பெயில்ல எடுங்க!’ என்று சொல்லி விட்டு உடனே கிளம்பினார்.
17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு கொடுத்ததும், மீண்டும் போலீஸ் புடைசூழ  வந்தவரை ஏற்றிக் கொண்டு பறந்தது கார்.  
பிரியா மகாலட்சுமியின் வழக்கறிஞர் அம்மாசியிடம் பேசினோம். ''குண்டாங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் (அ.தி.மு.க.) கோவிந்தன், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக யோகானந்தன், முரளிதரன், ராமமூர்த்தி ஆகிய மூவர் மீது பாலக்கோடு தாலுக்காவில் உள்ள மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் எட்டு மாதங்களுக்கு முன் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் மூவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்களும் ஒரு மாதத்தில் ஜாமீனில் வந்துவிட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தனும் சரி, கைதுசெய்யப்பட்ட மூவரின் வாக்குமூலத்திலும் சரி, பிரியா மகாலட்சுமியைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இந்த நிலையில், அந்த வழக்கில் திடீரென பிரியா மகாலட்சுமியைக் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள். விரைவில் பெயில் கிடைக்கும் என்று நம்புகிறோம். காவல்துறை பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். விசாரணையில், பிரியா குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம்'' என்றார்.
''முதல்வர் மகள் என்று சொல்லி வருகிறாரே?'' என்று கேட்டோம். 'அதுபற்றி இன்னும் முழுமையாக விசாரிக்கவில்லை'' என்கிறார் அம்மாசி!
முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக் கொள்ளும் பிரியா மகாலட்சுமியை மோசடி வழக்கில் கைது செய்திருந்த போதிலும், மீடியாக்களின் பார்வை யில் இருந்து போலீஸார் அவரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? அவரிடம் என்ன மர்மம் இருக்கிறது என்பதுதான் புரியாத புதிர்!

 மொட்டை மாடியில் உடற்பயிற்சி!
 பிரியாவின் பங்களா அமைந்திருக்கும் கிருஷ்ணகிரி சத்யசாய் நகர் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். ''ஒன்றரை வருஷத்துக்கு முன்புதான், இந்த வீட்டுக்குக் குடிவந்தார் பிரியா. அப்போது அவர் பால் காய்ச்சிய வைபவத்தைப் பார்த்துதான், அதற்கு இவ்வளவு சடங்குகள் உண்டு என்பதே எங்களுக்குத் தெரியும். வீட்டுக்கு அட்வான்ஸ் ஒரு லட்சம், வாடகை 13 ஆயிரம் என்று தெரிந்தபோது, ஆச்சாரமான பெரிய இடத்துப் பெண் என்ற நம்பிக்கை வந்தது. அந்த வீட்டு வேலைக்காரர்கள்கூட ஆட்டோவில்தான் வருவார்கள்.
பெரிய பங்களாவில் இருந்தாலும், அந்தம்மா அவ்வப்போது சாதாரணப் பெண்ணைப்போல நடந்து வந்து கடையில் ஏதாவது சில்லறைப் பொருட்களை வாங்கிவிட்டுப் போவார். சில நேரங்களில் மொட்டை மாடியில் நின்று உடற்பயிற்சி செய்வார். அடிக்கடி வெளியூர் போவார். ஒரு கட்டத்தில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைதான் அவர்களை பங்களா பக்கமே பார்க்க முடிந்தது.  
பிரியாவின் வளர்ப்புத் தாய்க்கு ஒரு தம்பி இருக்கிறார். அந்தம்மா கோடியில் புரண்டாலும், அந்தப் பையனுக்குக் கடந்த ஏப்ரல் மாதம் ரொம்ப சிம்பிளாகத்தான் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். கட்டிகானபள்ளி முருகன் கோயிலில் கல்யாணத்தை முடித்துவிட்டு, இந்த வீட்டில்தான் விருந்து நடந்தது. ஏரியாக்காரர்களுக்கு எல்லாம் பத்திரிகை வைத்தார்கள். ஆனால், நாங்கள் போகவில்லை. பெரிய பணக்காரர், இவ்வளவு எளிமையாகக் கல்யாணம் நடத்துகிறார்களே என்று ஆச்சரியப்பட்டோம். அந்தம்மா மீது ஏற்கெனவே போலீஸுக்கு புகார் போய்விட்டதால், பயந்துபோய் அடக்கி வாசித்தார்கள் என்று இப்போதுதான் புரிகிறது'' என்றார்கள் ஏரியாவாசிகள்.

No comments:

Post a Comment