Monday, July 16, 2012

மாயாவதி வழியில் செல்லுமா ஜெயலலிதா வழக்கு? பெங்களூரு விறுவிறு!


னல் கக்கிக்கொண்டு இருக்கிறார் வழக்கறிஞர் ஆச்​சார்​யா! 
பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கை எப்படி​யாவது முடக்கியாக வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு பகீரதப் பிரயத்தனங்களில் இறங்க... அதன் அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஆச்சார்யா வழக்கை முடிக்கத் துடிக்கிறார்.
கடந்த 10-ம் தேதி, நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னி​லையில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே ஜெய லலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் வரவில்லை. முதல்வராக இருப் பதால் வேலைப்பளு, கண் கோளாறு, முதுகுவலி மற்றும் சர்க்கரை நோய் என்று முறையே நால்வருக்கும் காரணங்கள் சொல்லப்பட்டன. 'மூணு மாசமாஇதேதானா.. காரணத்தையாவது மாத்தச் சொல்லுப்பா’ என்று தன் ஜூனியர் சந்தேஷ் சவுட்டாவிடம் வெறுத்துப்போய்ச் சொன்னார் ஆச்சார்யா.
'சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டும்’ என்று ஜெ. தரப்பில் எழுப்பிய கோரிக்கை மனுவுக்குத் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார் ஆச்சார்யா. எந்த மனுவாக இருந்தாலும் அரை மணி நேரத்துக்குள் வாதத்தை முடித்துக்​கொள்ளும் ஆச்சார்யா, இந்த முறை இரண்டு மணி நேரம் அனல் பறக்க வாதிட்டார்.
''ஜெயலலிதா, சசிகலா உள்​ளிட்ட நால்வர் மீதான சொத்​துக் குவிப்பு வழக்கு, 1997-ல் இருந்து விசார​ணையில் இருக்கிறது. மிகவும் சென்சிடிவான வழக்கு என்பதால் சுப்ரீம் கோர்ட், 2004-ம் ஆண்டு இந்த வழக்கை பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டுக்கு மாற்றி​யது. அப்போது, 'வழக்கை எப்படி நடத்த வேண்டும்’ என்று ஸ்பெஷல் கோர்ட்டுக்கு சில வழிமுறைகளைத் தந்தது. அதில், 'நீதிபதியின் நியமனம், அரசுத் தரப்பு வக்கீலின் நியமனம் ஆகிய​வற்றை கர்நாடக அரசும், கர்நாடக உயர் நீதிமன்றமும் இணைந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும்’ என வலியுறுத்தி இருக்கிறது. அதன்படிதான் 36-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் ஸ்பெஷல் கோர்ட்டின் நீதிபதியாக‌ ஏ.எஸ்.பச்சாபுர்ரே நியமிக்கப்பட்டார். அவரது பெயரைக் குறிப்பிட்டு அரசு ஆணை வெளியிட்டு, அதை அரசிதழிலும் பிரசுரித்தார்கள். நீதிபதி பச்சாபுர்ரேவின் பதவிக்காலம் முடிந்த பிறகு, நியமிக்கப்பட்ட நீதிபதிகளான ஆன்ட்டின், மனோலி, மல்லிகார்ஜுனைய்யா உள்ளிட்ட மூவரின் பெயரையும் குறிப்பிட்டு அரசு ஆணையோ, அரசிதழில் அறிவிப்போ வெளியிடவில்லை. ஏனென்றால், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 3-ன் கீழ், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் முதல் நீதிபதியின் பெயரை மட்டும் வெளியிட்டால் போதும். அடுத்தடுத்து வரும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிடத் தேவைஇல்லை என்பதற்கு இந்தியாவில் நடந்த பல்வேறு வழக்குகளைக் காரணமாகக் குறிப்பிடலாம்'' என்றவர், ஜெ. தரப்புக்கு எதிராக ஆதாரங்களை அடுக்க ஆரம்பித்தார்.
''1975-ம் ஆண்டு அஞ்சப்பா சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு, 1981-ம் ஆண்டு ஆஸ்ட்லே சொத்துக் குவிப்பு வழக்கில் கொல்கத்தா ஹை கோர்ட் வழங்கிய தீர்ப்பு, மேலும் மும்பை, சென்னை மற்றும் கர்நாடக ஹை கோர்ட்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் அனைத்தும் அரசு ஆணையில் பெயர் குறிப்பிடாத நீதிபதிகளால் வழங்கப்​பட்ட தீர்ப்புகளே. சுப்ரீம் கோர்ட்டும், இத்தனை ஹை கோர்ட் நீதிபதிகளும் ஊழல் தடுப்புத் துறைச் சட்டம் தெரியாமலா தீர்ப்பு வழங்கினார்கள்? எதிர்த் தரப்பின் வாதத்தை எடுத்துக்கொண்டு அத்தனை தீர்ப்புகளையும் மாற்றி எழுத முடி யுமா? இத்தனை வழக்குகளும் தீர்ப்புகளும், ஊழல் தடுப்புத் துறைச் சட்டபிரிவு 3-ன் படி, 'சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் முதல் நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு அரசு ஆணையும், அரசு இதழில் அறிவிப்பும் வெளியிட்டால் போதும். அதன்பிறகு சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க ஹை கோர்ட் மற்றும் மாநில அரசால் நியமிக்கப்படும் நீதிபதியே அதிகாரம் மிக்க ஸ்பெ​ஷல் கோர்ட்டின் நீதிபதியாகக் கருதப்படுவார்’ என்று தெளிவாகச் சொல்கிறது. அப்படிப் பார்த்தால் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவுக்கு இந்த வழக்கை விசாரிக்க எல்லாவித அதிகாரமும் இருக்கிறது'' என்று ஆணித்தரமாக வாதிட்டு, அத்தனை தீர்ப்புகளின் நகல்களையும் கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய ஆச்சார்யா, ''15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த வழக்கில் சாட்சிகளின் விசாரணை, வாக்குமூலம், குற்றப்பத்திரிகை தாக்கல் என 90 சதவிகிதம் முடிந்து விட்டது. வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவிடம் 1,384 கேள்விகளையும், 2-ம் குற்றவாளியான சசிகலாவிடம் 600-க்கும் மேற்பட்ட கேள்விகளையும் கேட்டு இருக்கிறோம். மீதம் இருக்கும் கேள்விகளை விரைவில் முடிக்கக் கூடாது என்பதற்காகவே எதிர்த்தரப்பில் அவ்வப்போது மனு மேல் மனு போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது நீதிபதியை மாற்ற வேண்டும் என்று மனு போட்டு இருக்கிறார்கள். இனி, ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவில் இருக்கும் 432 பிரிவுகளையும், அதில் இருக்கும் துணை ஷரத்துகளையும் பயன்படுத்தி, எத்தனை விதமான‌ மனுக்கள் போட முடியுமோ, அத்தனையும் போடுவார்கள். எனவே, வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போடப்பட்டிருக்கும் இந்த மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்'' என்று முடிக்கும்போது உணவு நேரம் வந்து விட்டது.
''மதிய உணவு இடைவேளை விட வேண்டுமா... தொடரலாம்தானே?'' என்று நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா, ஆச்சார்யாவிடம் கேட்க, ''தாராளமாகத் தொடரலாம். ஏற்கெனவே வழக்கு ரொம்பவும் தாமதமாகிவிட்டது'' என்று சிரித்துக் கொண்ட சொன்னார்.
சசி​கலாவின் வக்கீல் மணிசங்கர், ''வழக்கைத் தாம தப்படுத்த எந்தத் திட் டமும் நாங்கள் தீட்ட​வில்லை. சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதைத்தான் கோரு​கிறோம்'' என்று விளக்கம் அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்​ஜுனைய்யா, 17-ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
'ஒன்பது ஆண்டுகளாக நடந்த மாயாவதி வழக்​கையே சுப்ரீம் கோர்ட் தூக்கிவீசும்போது, 15 ஆண்டுகளாக நடக்கும் அம்மா வழக்கை ரத்து செய்​யாதா?’ என்று மீடி யாக்களிடம் கேட்​டபடியே ஜெ. தரப்பு வக்கீல்​கள் கோர்ட்​டில் இருந்து வெளி​யேறினர்!

No comments:

Post a Comment