Monday, July 16, 2012

கழகத் தலைமை... கைப்பற்றப்போவது யார்?



ருணாநிதியின் மானத்தைக் காப்பாற்றிவிட்டான் கழகத் தொண்டன்.
வீழ்ந்துபட்டாலும் நிலத்தில் தி.மு.க. நிலைத்து நிற்கிறது என்பதை எடுத்துக் காட்டியது சிறை நிரப்பும் போராட்டம். ஓர் ஆண்டுக்கு முன்பு வரை ஆட்சியை வைத்து கான்ட்ராக்ட் எடுத்து காசு பார்த்த பலரைக் காணோம். கட்டப்பஞ்சாயத்து பண்ணி மிரட்டி வாழ்ந்தவர்கள் தலை தெரியவில்லை. கொளத்தூரில் கொடியோடு வந்த கண்ணம்மாவுக்கு 70 வயது. கட்சியினால் எதையும் அனுபவித்து இருக்க மாட்டார். திருவல்லிக்கேணியில் இரண்டு கால்களையும் இழந்த தொண்டர் ஒருவர் கட்டைக் காலோடு முன்னிலும் வேகமாக வெயிலில் நடைபோட்டு வந்தார். பெட்டி படுக்கையோடு வந்தவர்கள் பலர்.  தி.மு.க-வை உயிர்ப்பிக்க இப்படி ஒரு போராட்டம் உதவி இருப்பது உண்மை. ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கருணாநிதி உண்மையில் அன்றுதான் சிரித்தார்.
'தலைவர் சிறைக்கு வரப்போவது இல்லை’ என்று முதலிலேயே தொண்டனுக்குத் தெரியும். 'இந்த வரிசையில் நின்று அது தடைப்பட்டால் அடுத்த வரிசை, அந்த வரிசையும் தடைப்பட்டால் கடைசி வரிசை, அந்த வரிசையிலே கருணாநிதியும் இருப்பான் என்பதை ஞாபகத்தில்வைத்துக் கொள்ளுங்கள்’ என்று தாம்பரம் கூட்டத் தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கருணாநிதி சொன்னாலும் அது கைதட்ட லுக்காக, தங்களை உசுப்பேற்ற என்று தொண்டர்கள் திருப்திப்பட்டுக்கொண் டார்கள். பேராசிரியர் அன்பழகன், 'சிறை நிரப்பும் அவசியம் தேவை இல்லை’ என்று நினைக்கக் கூடியவர். ஆற்காடு வீராசாமிக்கு இந்தப் போராட்டத்தில் இருந்து மட்டும் அல்ல... அனைத்தில் இருந்துமே விதிவிலக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. தொண்டர்கள் முழுமையாக எதிர்பார்த்தது மு.க.ஸ்டாலினைத்தான். அவரும் கண் அறுவை சிகிச்சையால், உற்சாகம் இழந்தவராக இருந்தார். சிறை நிரப்பத் தூண்டும் பொதுக் கூட்ட உலாவில்கூட அவரால் உற்சாகமாகக் கலந்துகொள்ள முடியவில்லை. கனிமொழி ஸ்பெக்ட்ரம் பிணை யில் இருப்பதால் அவரால் வர முடியாது என்ற சட்டக் கணக்குப் போட்டுச் சமா தானம் செய்துகொண்டார்கள் பலர். அழகிரிக்கு இப்படி ஒரு கட்சி இன்னும் இருப்பதாகவோ, அது அ.தி.மு.க-வை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதாகவோ யாரும் சொல்ல வில்லைபோலும். சத்தமே காணோம்.
இந்த நிலையில், எந்த நம்பிக்கையில் 15 நாட் களுக்கான வேட்டி - சட்டைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்? இந்தக் கேள்விக் கான விடைக்குள்தான் தி.மு.க-வின் வெற்றிக் கான விதை இருக்கிறது. இந்த வித்தைவளர்க்கப் போவது யார்? யாருக்கு அந்தத் திறமை இருக்கிறது? கழகத்தின் அடுத்த தலைவர் யார்?
'அடுத்த மேய்ப்பர்’ - கருணாநிதியின் குடும்பத்துக்குள் இருந்துதான் வரப்போகிறார் என்பதில் தி.மு.க. தொண்டனுக்குக் குழப்பம் இல்லை.  ஆனால், அழகிரிக்கு ஸ்டாலினைப் பிடிக்கவில்லை. ஸ்டாலினுக்கு கனிமொழி கசக்கிறது. மூவரில் இருவர் குடும்பத்துக்கு வெளியே இருந்திருந்தால், எப்போதோ எம்.ஜி.ஆர்., வைகோ கதி ஏற்பட்டு இருக்கும். ரத்த உறவாக இருப்பதால் கருணாநிதியால் குரூப் பிரிக்க முடியவில்லை. ஆனால் கட்சி, குரூப் குரூப் ஆகப் பிரிந்துகிடக்கிறது. திரிந்துவிடும் முன் முடிவு எடுப்பதுதான் கருணாநிதிக்கு நல்லது.
'இந்தப் போராட்டம் ராமநாதபுரம் தி.மு.க-வை கோஷ்டிப் பூசல் இல்லாமல் ஒன்று சேர்க்கும்’ என்று கருணாநிதியே சொல்லும் அளவுக்கு இருக்கிறது நிலைமை. கோபாலபுரம்தி.மு.க-வைக் கூட ஒன்று சேர்க்க முடியவில்லை. கண் அறுவைச் சிகிச்சை காரணமாகப் போராட்டத் தில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கிய ஸ்டாலின், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் திடீர் வழக்குப் போட்டு அனுமதி பெற்று, கனிமொழி வந்துவிட்டார் என்றதும் புதுத் துண்டு போட்டுக் கிளம்பியதற்கு இத்தகைய எரிச்சல் மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியும். 'என்னால் வர இயலவில்லை. எனக்குப் பதிலாக என் தங்கை வருகிறாள்!’ என்று சொந்த அண்ணனால் மனம்விட்டுச் சொல்ல முடியவில்லை. 'மத்திய அமைச்சராக இருக்கின்ற நான் சிறை நிரப்பும் மறியலில் கலந்துகொள்வது சரியாக இருக்காது. எனக்குப் பதிலாக எனது தம்பியும் தங்கையும் வருவார்கள்’ என்று சொல்லும் அனுபவப் பக்குவம் அழகிரிக்கும் இல்லை. செயற்குழுக் கூட்டத்துக்கும் வரவில்லை. பிரசாரப் பொதுக் கூட்டத்துக்கும் ஆள் இல்லை. அனைத்துக்கும் மேலாக, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோஷ்டி மாறிவிட்டதால், அவரோடு இல்லாமல் தனது ஆட்களைத் தனியாக மறியல் செய்யச் சொன்ன கட்டளை வேறு. எந்த மதுரையில் அஞ்சா நெஞ்சன் என்று வலம் வந்தாரோ, அத்தனை எம்.பி-க்களை யும்விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் எந்த மதுரையில் அழகிரி வென்றாரோ, அந்த மதுரை மாநகர் மாவட்டத்தில் கருணாநிதி அறிவித்த 'முரசொலி’ கணக்குப்படியே சிறைக்கு வந்தவர்கள் வெறும் 2,000 பேர்தான்.
மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய அனைத்துத் தென் மாவட்டங்களிலும் தலா 5,000-க்கும் குறைவானவர்கள்தான் வந்தார்கள். தென் மண்டல அமைப்புச் செயலாளரின் செல்வாக்கைப் பட்டவர்த்தனப் படையல் போட்டது அந்தப் பட்டியல். வெறும் உள் குழப்பம் செய்வதற்கு மட்டுமே அழகிரியின் பிம்பம் பயன்பட்டு உள்ளது. எந்த உழைப்பும் அற்று 'பழம் எனக்குத்தான்’ என்று வலம் வருவதை அம்பலப்படுத்தியும் உள்ளது. ''உழைக்காதவருக்குப் பங்கிடப்படும் 'அப்பம்’ மண்ணில் விழுந்ததற்குச் சமமானது'' என்பதை 89 வயதுக்குப் பிறகுமா கருணாநிதி உணராமல் இருப்பார்?
ஸ்டாலின் அதிகப்படியாகவே அலைகிறார். ஆனால், அது வீண் அலைச்சல் என்று அபிப்பிராயப்படுகிறான் தொண்டன்.  பொதுக் கூட்டம் பேசுவது மட்டுமே கட்சியை வளர்த்துவிடாது. கட்சிப் பிரமுகர்களுக்குள் கலந்துரையாடல் செய்வது மட்டுமே உள்ளூர் உணர்வுகளை வளர்த்து எடுக்க உதவும். தலைமைக்கும் பொது மக்களுக்கும் பாலமாக இருக்கும் உள்ளூர் நிர்வாகிகளை உதாசீனம் செய்துவிட்டு, சில பூசாரிகளின் மகுடிக்கு மட்டும் தலை ஆட்டும் நபராக ஸ்டாலின் உருமாறிப்போனாரே என்ற வருத்தம்எல்லா மாவட்டங்களிலும் இருக்கிறது. இதை கருணாநிதி நினைத்தாலும் மாற்ற முடியாது. ஸ்டாலின் பேசினால் மட்டுமே முடியும். தொண்டன் தரையிலும் தலைவன் கோபுரத்திலும் என்ற மயக்கக் கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் கடைசி மிச்சம் ஜெயலலிதா மட்டும்தான். இன்னொரு இரும்பு கேட் பாலிடிக்ஸ் இனி எடுபடாது என்பதை உடனடியாக உணர்வது ஸ்டாலி னுக்கு நல்லது.
கனிமொழியைப் பொறுத்தவரை அவரது அரசியல் நடவடிக்கைகள்குறித்து பொறுத்திருந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை முடியும் வரை பாட்டியாலா நீதிமன்றத்தில் நிரந்தரமாக இருந்தாக வேண்டும். இத்தகைய சூழ்நிலையிலும் சிறை நிரப்பும் போராட்டத்துக்குள் கடைசி நிமிடத்தில் நுழைந்து கலக்கியது அவரது ஆதரவாளர்களை உற்சாகம் அடையவைத்துள்ளது. அவருக்கு எம்.பி. பதவி கிடைத்தபோது இருந்ததை விட, கைதுசெய்யப்பட்டபோது காணப்பட்டதைவிட, ஜாமீனில் வந்த பிறகு... ஒருவித அனுதாபம் கலந்த ஆதரவு தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது.
'கட்சிக்காகத்தானே கஷ்டப்பட்டார்’ என்று சொல்வதை அவரவர் அளவில் ஏற்கும் சூழல் கனிமொழிக்குச் சாதகமாக உள்ளது. 'தனக்கும் தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்குமானால், அந்தப் பக்கம் அவர் இருப்பார்’ என்பது கனிமொழி அணி காட்டும் கொடி.
தொண்டர்களின் நம்பிக்கையைப் பெறுவதே கழகத்தைக் கைப்பற்றுவதற்கான அர்த்தம். அறிவாலயத்தைப் பிடிப்பது அல்ல. ஆனால், அழகிரியும் ஸ்டாலினும் அறிவாலயத்தை மட்டும் பிடித்துவிட்டால் போதும் என்று நினைப்பதுதான் அபத்தம். கோபாலபுரம் வீடு யாருக்கு என்பதில் முடிவுக்கு வராமல் ரெண்டு பேருக்கும் இல்லாமல் போன கதை கட்சி விஷயத்திலும் வராமல் பார்த்துக்கொள்ளட்டும்!

No comments:

Post a Comment