Monday, July 9, 2012

அம்மாவும் இன்னைக்கு அரெஸ்ட் ஆகப்போறாங்களா?’ ராஜாத்தியை பார்த்து கேட்ட அப்பாவி தொண்டர்?



னகல் மாளிகை அருகே கனிமொழி போராட்டம் நடத்த வருவது, முந்தைய நாள் இரவு வரை கட்சி நிர்வாகிகளுக்கே தெரியாது. காலையிலேயே ஆயிரம் பேர் திரண்டு விட்ட போதும், 10.30 மணிக்கு கனிமொழி வரும் வரை ஆர்ப்பாட்டம் தொடங்கப்படவில்லை. கனிமொழியுடன் ராஜாத்தி அம்மாளும் வந்திருந்தார். 'அம்மாவும் இன்னைக்கு அரெஸ்ட் ஆகப்போறாங்களா?’ என்று தொண்டர் ஒருவர் கேட்க, முறைத்துப் பார்த்தார் ஒரு நிர்வாகி. கனிமொழி அரெஸ்ட் ஆனதும் கார் ஏறிப் பறந்தார் ராஜாத்தி.சூட்கேஸ் மற்றும் பைகளில் உடைகளுடன் பலர் தயாராக வந்திருந்தது ஆச்சர்யம்! 
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்குள் இருந்த ஒரு அரங்கில் கனிமொழி உள்ளிட்ட 800 பேர் அடைக்கப்பட்டனர். மாலையில், விடுதலை செய்வதாக போலீஸ் அதிகாரிகள் கூறியதும், கனிமொழி யாருக்கோ போன் செய்து, 'என்ன செய்ய?’ என்று கேட்டார். அதன்பிறகு, 'இன்னும் 15 நிமிடங்களில் முடிவு செய்வோம்’ என்று போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், போலீஸார் அவர் பதிலைக் கண்டுகொள்ளாமல் கிளம்புவதற்குத் தயாரானார்கள். இதைப் பார்த்து கனிமொழி குழம்பிப் போனார். சைதைப் பகுதி தி.மு.க. செயலாளர் மகேஷ்குமார், 'நம்ம என்ன முடிவு செய்தாலும், போலீஸ்காரங்க போயிடுவாங்கம்மா’ என்று சொல்லவே... கனிமொழி உட்பட எல்லாரும் காரில் ஏறிப் பறந்தனர்.
தம்பி இங்கே... அண்ணன் எங்கே?
'எனது தலைமையில் காட்பாடியில் நடை பெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில், அதிக எண் ணிக்கையில் நமது உடன்பிறப்புகள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று சமீபத்தில்தான் மேடை போட்டு அழைத்தார் துரைமுருகன். அதனால் காலை முதலே காட்பாடி உடன்பிறப்புகள் துரைமுருகனுக்காக ஆவலுடன் காத்துக்கிடந்தனர். இதோ... அதோ... என்று சொல்லப்பட்டு கடைசியில் துரைமுருகன் வரவே இல்லை. அண்ணனுக்குப் பதில் கலந்து கொண்ட அவரது தம்பி துரைசிங்காரம், 'அண்ணன் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்’ என்று காரணம் சொன்னார். ஆனால், சென்னையிலும் அண்ணன் ஆப்சென்ட். 'சிறையில் 15 நாட்கள் தங்குவதற்கு உடல் நிலை ஒத்துவராது’ என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியதால், எஸ்கேப் ஆனாராம் துரைமுருகன்!
ரேட் பேசு மாமு!  
விருதுநகர் மாவட்டத்தில் மறியலுக்கு ஆள் திரட்டச் சென்ற ஒன்றிய, நகரச் செயலாளர்களிடம் அடிமட்டத் தொண்டர்கள் சிலர், 'ஆட்சியில இருக்கிறப்ப நீங்கதானே கோடிக்கணக்கில் சம்பாதிச் சீங்க... எங்களுக்கா அள்ளிக் குடுத்தீங்க? இனிமே நாங்க சும்மா வர மாட்டோம். காசு குடுத்தாத்தான் வருவோம்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம். 'மறியலுக்கு வந்தால் 1,000. அரெஸ்ட் ஆனால் 5,000 என்று ரேட் பேசித்தான் சிலரைக் கூட்டிட்டு வந்தோம்’ என்று சொன்னார் ஒரு நிர்வாகி.  
முன்னாள் அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரனும் தங்கம் தென்னரசுவும் விருதுநகரில் களம் இறங்கினர். ''நாம ரெண்டு பேரும் முன்கூட்டியே உள்ளே போயிட்டா, கட்சிக்காரங்க எஸ்கேப் ஆகிடுவாங்க. அவங்கள முதல்ல அனுப்பி வெச்சிட்டு நான் வர்றேன்'' என்று தென்னரசுவிடம் கதைத்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பஸ்ஸில் ஏறாமல் கீழேயே நின்றுகொண்டார். அத்தனை பேரையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு கடைசி ஆளாகத்தான் கைதானார். ஆனாலும் பலர் பெயருக்கு சல்யூட் போட்டுவிட்டு எஸ்கேப்!
தயிர் சாதமும் சிக்கன் பிரியாணியும்!
'சிறை நிரப்பும் போராட்டம் கோஷ்டிகளை ஒன்றாக்கும்’ என்று ராமநாதபுரத்தைக் குறிப்பிட்டு அறிக்கை விட்டு இருந்தார் கருணாநிதி. ஆனால், மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலன் கோஷ்டியும் ரித்தீஷ் கோஷ்டியும் தனித்தனியாகத்தான் மறி யலுக்கு வந்தனர். இரண்டு கோஷ்டிகளுமே மறியல் செய்வதற்காக தாலுகா அலுவலகத்தை எட்டிப்பார்க்க நினைக்கும் முன்னரே கைது செய்யப்பட்டனர். கைதான தங்கவேலன் கோஷ் டிக்கு தயிர்சாதம் பொட்டலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது போலீஸ். ரித்தீஷ் கோஷ்டிக்கு சிக்கன் பிரியாணியை அவரது ஆட்களே தயார் செய்து தடபுடல் காட்டினர்.
பிரியாணியைக் காட்டி, 'இந்தக் கோஷ்டிக்கு வந்துடுங்க’ என்று, பலரிடம் ஆசை வார்த்தை காட்டியது ரித்தீஷ் கோஷ்டி!
வீட்டுக்குக் கிளம்பிய தளபதி!
மதுரையில் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் செய்வதாகத்தான் திட்டம். அதனால் 20 அரசு டவுன் பஸ்கள் தயாராக நின்றன. 10 மணிக்கு முன்னரே, அழகிரி ஆட்கள் கைதாகத் தொடங்கினார்கள். கோபிநாதன், கௌஸ்பாட்சா, உதயகுமார், மிசா பாண்டியன், மன்னன் ஆகியோர் தலைமையில் சாரைசாரையாக கைதாக 15 பஸ்கள் நிரம்பி விட்டன.
திடீரென சில தி.மு.க-வினர், வந்த வழியே திரும்பிப் போக ஆரம்பித்தார்கள். காரணம் கேட்டபோது, 'ஸ்டாலின் ஆட்கள் எல்லாரையும் அரவிந்த் கண் ஆஸ்பத்திரிப் பக்கம் வரச்சொல்லி இருக்காங்கப்பா' என்றார்கள். அங்கே, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் மா.செ. வேலுச்சாமி, வி.கே.குருசாமி, சிம்மக்கல் போஸ் போன்றவர்கள் காத்திருந்தனர். மாவட்ட செயலாளர் தளபதி தன் காரில் வந்து இறங்கியதும், ஸ்டாலின் அணி கலெக்டர் அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டது. வழியில், இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தலைமையில் சிலர், அந்த அணியில் ஐக்கியம் ஆனார்கள். அவர்களை அண்ணா பஸ் நிலையம் அருகிலேயே போலீஸார் கைது செய்ய முயன்றதும், சாலையில் உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை போலீஸார் மல்லுக்கட்டித் தூக்கி பஸ்ஸில் ஏற்றி அனுப்பினார்கள். அந்த பஸ்கள் எல்லாம் திருமண மண்டபங்களுக்குப் போன பிறகு, மாவட்டச் செயலாளர் தளபதி மட்டும் தன் காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டார். 'நீங்க மட்டும் ஏன் வீட்டுக்குப் போறீங்க?' என்று கேட்டோம். 'நான் மூணு வழக்குல கண்டிஷன் பெயில் வாங்கிட்டு இப்பத்தாம்ப்பா வெளியே வந்திருக்கேன். தினமும் கையெழுத்துப் போடணும். உள்ளே போயிட்டா, பெயில் கேன்சலாகிடும். அதனால எனக்கும் ஐ.பெரியசாமிக்கும் தலைவர் விலக்குக் கொடுத்திருக்கிறார்' என்றார் தளபதி.
கிண்டல் குஷ்பு... கடுப்பான வசந்தி!
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜெ.அன்பழகன், தயாநிதி மாறன், குஷ்பூ ஆகியோர் பேசி முடித்ததும், தொண்டர்களைப் பேருந்துகளில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு அனுப்ப ஆரம்பித்தது போலீஸ். தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்றதும் கோபத்துடன் ஒதுங்கி ஓரமாக நிழலில் நின்றுகொண்டார் வசந்தி ஸ்டான்லி எம்.பி. அது புரியாத குஷ்பு, 'மேக்கப் கலைஞ்சிடும்னு ஓரமா நிக்குறீங்களா?’ என்று கிண்டலடிக்க, கடுப்புடன் சிரித்தார் வசந்தி. அடுத்து தயாநிதி மாறனும், 'நீங்க ஒண்ணும் பிக்னிக் வரல... போராட்டத்துக்கு வந்திருக்கீங்க. அதைப் புரிஞ்சுக்கங்க’ என்று கடுகடுக்கவே, வசந்தி டென்ஷனில் ஏதோ வார்த்தைகள் விடத் தொடங்கினார். உடனே, 'எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்’ என்று ஜெ.அன்பழகன் குறுக்கே புகுந்து சமாதானப்படுத்தி அழைத்துப் போனார். இறுதிவரை, இறுக்கமான முகத்துடனே இருந்தார் வசந்தி ஸ்டான்லி.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் திருவல்லிக்கேணி யில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மதிய உணவாக பிரியாணிப் பொட்டலங்கள் பெட்டி, பெட்டியாக வந்து இறங்கின. அதைப் பார்த்தவுடன் பல தொண்டர்களுக்குத் 'தாகம்’ எடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு வராக வெளியே வந்து 'கடையில்’ பாட்டில் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றனர். ஒரு தொண்டர் கூடுதல் உற்சாகத்தோடு ஒரு கேரிபேக் நிறைய பாட்டில்களுடன் உள்ளே செல்ல, போலீஸ்காரர்கள் தடுத்துவிட்டனர். சற்றும் மனம் தளராத அந்த உடன்பிறப்பு, அத்தனை பாட்டில்களையும் அப்படியே இடுப்பில் சொருகிக்கொண்டு நல்லபிள்ளையாக உள்ளே போனார். அதை மட்டும் போலீஸ் கண்டு கொள்ளவில்லை!
புத்தம் புது லத்தி!
அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க. முகாம் தாவிய முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு தண்டையார்பேட்டையில் கலந்து கொள்வதாகத் தெரியவரவும், ஏராளமான காக்கிகள் புத்தம் புது லத்தியுடன் ஆஜராகி இருந்தனர். அதிரடிக்குப் பேர் போன சேகர் பாபு ஏதாவது வம்பு இழுக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கையாம். சாலையின் இரண்டு பக்கத்தில் இருந்தும் ஊர்வலமாக மண்டல அலுவலகத்தை நோக்கி சேகர்பாபு தலைமையில் தி.மு.க-வினர் கிளம்பியதுமே கைது செய்ய முயன்றது போலீஸ். ''சார் கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டுப் போறோம். அப்புறம் கைது செய்யுங்க'' என்று கெஞ்சி அனுமதி வாங்கி, அதன் பிறகு கைதானார் சேகர்பாபு. லத்திக்கு வேலை இல்லாமப் போச்சே என்று பல காக்கிகள் புலம்பியது தனிக்கதை. குழந்தையோடு கைதான பெண்ணிடம், ''ஜெயிலுக்கு குழந்தையை எடுத்துட்டு வரக்கூடாது'' என்றது போலீஸ். ''அதுவும் ஜெயிலுக்கு வர பேர் கொடுத்திருக்கு'' என்று அசராமல் பதில் சொன்னார் அந்தப் பெண்!
வாடகைக் காற்று!
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார் ஸ்டாலின்.   மீடியாவிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு, மறியல் செய்வதற்கு முன் னேறினார் ஸ்டாலின். உடனே, போலீஸ் கைது செய்து டி.வி.கே. திருமண மண் டபத்தில் அடைத்தது. ஸ்டாலினுக்காக மின்விசிறிகளை வெளியில் இருந்து வாடகைக்கு எடுத்து வந்தார்கள். டஸ்ட் அலர்ஜி இருப்பதால், அதைச் சமாளிக்க பெரிய துண்டு போட்டு இருந்தார். உடல்நிலை ஒத்துவரவில்லை என்பதால் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். மாலையில், விடுதலை அறிவிப்பு வந்ததும், ''தமிழகச் சிறையில் இடம் இல்லாவிட்டாலும் வெளிமாநில சிறையில் அடைப்போம் என்று ஆளும் கட்சி பயம் காட்டிய பிறகும் இரண்டு லட்சம் பேர் திரண்டு இருக்கிறார்கள். இனியாவது, ஜெயலலிதா திருந்த வேண்டும். திருந்தா விட்டால் இதுபோன்ற போராட்டங்கள் தொடரும்'' என்று சீறிவிட்டுக் கிளம்பினார் ஸ்டாலின்.

Thanks to vikatan.com

No comments:

Post a Comment