Friday, July 6, 2012

எனது இந்தியா! (துக்ளக் அளித்த விசித்திர தண்டனை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



பின் பதூதாவின் பயணக் குறிப்புகள் யாவும் அவரது அந்திமக் காலத்தில் மொராக்கோவின் சுல்தான் ஆணைப்படியாக அவர் சொல்லச் சொல்ல, இபின் சஜாயி என்ற கவிஞர் எழுதியது. வயதான காலத்தில் இபின் பதூதா, தான் கண்டும் கேட்டும் அறிந்திருந்த விஷயங்களை இரண்டு வருட காலம் தினமும் அரச சபையில் தெரியப்படுத்தினார். அதைக் குறிப்புகளாக எடுத்துக்கொண்டு இபின் சுஜாயி தொகுத்து நீண்ட பயண நூலாக மு றைப்படுத்தி புத்தக வடிவம் கொடுத்தார். இந்த நூலில் இபின் பதூதா கண்ட இந்தியாவைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக, துக்ளக்கின் குரூரமான தண்டனைகள் பற்றியும் இபின் பதூதா நீதிபதியாக இருந்தபோது நடந்த சம்பவங்களைப்பற்றியும்  விவரித்திருக்கிறார்.

துக்ளக், பெர்சிய மொழியில் தேர்ச்சி பெற்றவர். அதோடு, சிறந்த சித்திர எழுத்துக் கலை நிபுணர். சட்டம் மற்றும் மதம் குறித்த தீவிரச் சிந்தனையாளர். பெர்சிய மொழியில் கவிதைகள் எழுதுபவர். ஆனால், அவர் ஒரு முன்கோபி. சிறிய குற்றங்களுக்குக்கூட கடுமையான தண்டனை வழங்கக்கூடியவர். ஒவ்வொரு நாளும் சபையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏதேதோ காரணங்களுக்காக பிடித்துக் கொண்டுவரப்பட்டு இருப்பார்கள். குற்றங்களைப் பற்றி விசாரிப்பதற்கு முன்பே தண்டனையைக் கொடுத்து விடுவார் துக்ளக். கைகளை வெட்டி காலிலும்... காலை வெட்டி கைகளிலும் தைத்து விடுங்கள் என்பது போன்ற விசித்திரத் தண்டனைகளை அளிப்பார் துக்ளக். மதஅறிஞர் ஒருவர் துக்ளக் தெரிவித்த கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னதற்காக, அவரது தாடி மயிரை ஒவ்வொன்றாக பிய்த்துக் கொல்லும்படி குரூரத் தண்டனை அளித்தார் துக்ளக்.

முகமது பின் துக்ளக் தனது நட்பை வெளிப்படுத்தும் விதமாக, இபின் பதூதாவுக்கு நீதிபதி பதவி கொடுத்தார். ஆண்டுக்கு 5,000 தினார் ஊதியம் வழங்கினார். அன்று ஒரு சராசரிக் குடும்பத்தின் மாத வருமானம் ஐந்து தினார். கூடவே, சில கிராமங்களை வரிவசூல் செய்து அவரே எடுத்துக்கொள்வதற்கும் உரிமை வழங்கினார். இபின் பதூதா ஏழு ஆண்டு காலம் துக்ளக் அரசின் பணியில் இருந்தார். அப்போது, இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார். ஒருமுறை தனது கடற்பயணத்தின்போதுஅவரது கப்பல் சிதைந்து விடவே, மலபார் பகுதியில் சில மாதங்கள் தங்கி இருந்து தென்னாட்டு மக்களின் வாழ்க்கை முறையைக் கண்டு அறிந்திருக்கிறார். அப்போது அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பட்டினம் என்ற கடற்கரைத் துறைமுகத்துக்கு வந்து மூன்று மாதங்கள் தங்கி இருந்ததாக ஒரு குறிப்பு எழுதி இருக்கிறார். இபின் பதூதாவுக்கு மிகஆச்சர்யமாக இருந்தது வெற்றிலை. தென்னாட்டு மக்கள் வெற்றிலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது ஒரு குறிப்பில் 'விருந்தினர்களை வரவேற்று வெற்றிலை பாக்கு தருவது, அவர்களுக்கு தங்கமோ, வெள்ளியோ தருவதை விடவும் உயர்வானது’ என்று குறிப்பிடுகிறார்.

முகமது பின் துக்ளக்கின் நிர்வாகச் சீர்கேடுகள் ஒரு பக்கம் தேசத்தை நிலை குலையச் செய்தது. இன்னொரு பக்கம், அவருக்கு எதிராக எதிர்ப்பு இயக்கங்கள் வலுக்கத் தொடங்கின. துக்ளக் தனது எதிரிகளை ஒழிப்பதற்காக படையோடு டெல்லியை விட்டு சென்ற நாட்களில் மொத்த நீதிநிர்வாகமும் இபின் பதூதாவிடமே இருந்தது. அவர் இஸ்லாமியச் சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை அளித்தார். துக்ளக்குக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதும் துக்ளக் தனது எதிரிகளோடு தொடர்புள்ளவர்கள் யார் என்று ஒரு பட்டியல் எடுத்தார். அதில் எதிரி ஒருவரின் வீட்டில் இருந்த சூபி தத்துவவாதி ஒருவருக்கும் இபின் பதூதாவுக்கும் தொடர்பு இருந்தது துக்ளக்குக்குத் தெரிய வந்தது. எங்கே தன்னையும் துக்ளக் கொன்றுவிடக்கூடுமோ என்று பயந்து, இபின் பதூதா ஒரு வார காலம் உண்ணா நோன்பு இருந்தார். பகலும் இரவும் பிரார்த்தனை செய்தபடி இருந்தார். துக்ளக் எப்போது என்ன செய்வார் என்று அவரால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.

சில நாட்களுக்கு பிச்சைக்காரர்போல வேடம் அணிந்து கொண்டு இபின் பதூதா டெல்லி தெருக்களில் அலைந்து இருக்கிறார். முடிவில் ஒரு நாள், அரசரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரசரைக் கண்டதும் வணங்கி தான் திரும்பவும் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக இபின் பதூதா சொன்னார். துக்ளக் அதை மறுத்து அவரை சீனாவுக்கான தூதுவராக நியமித்து தேவையான பொருட்களும் வேலையாட்களும் கொடுத்து அனுப்பி வைத்தார். துக்ளக்கிடம் இருந்து தப்பு வற்காகவே அந்தப் பணியை ஒப்புக்கொண்டார் இபின் பதூதா. மார்கோபோலோவுக்குப் பிறகு, சீனாவுக்குச் சென்ற வெளிநாட்டுப் பயணி இவரே. சீனாவுக்குச் செல்வதற்காகப் புறப்பட்ட கடற்பயணத்தில், விபத்துக்கு உள்ளான கப்பல் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, இலங்கைக்கும் மாலத்தீவுகளுக்கும் சென்ற இபின் பதூதா, கடுமையான போராட்டத்தின் முடிவில் சீனாவுக்குச் சென்று இருக்கிறார்.

தன்னுடைய 30 ஆண்டு காலப் பயணத்தில் ஏதேதோ நகரங்களில் நோயுற்றும், பிடிபட்டும், கப்பல் விபத்துக்கு உள்ளாகியும், மோசமான உடல் நலக்கேட்டுக்கும் உள்ளான இபின் பதூதா, முடிவில் தனது சொந்த தேசம் திரும்பினார். அவருக்குச் சுல்தான் சிறப்பான வரவேற்பு கொடுத்து பாஸ் என்ற நகரில் வசிப்பதற்கான உதவிகள் செய்தார். இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இந்தத் தொகுப்புக்களை வாசிக்கும்போது முன்னுக்குப் பின்னான சில விஷயங்களும் இடம் காலம் பற்றிய குழப்பங்களும் ஏற்படுகின்றன. அதோடு, இபின் பதூதா எழுதியதோடு இடைச்செருகல் நிறைய இருந்திருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.

ஒரு மலையைத் தூக்கிக்கொண்டு பறவை ஒன்று பறந்து போனதை, தான் கண்டதாக அவர் எழுதியுள்ள ஒரு குறிப்பு உள்ளது. இபின் பதூதாவும் மற்ற பயணிகளைப் போலவே பல செவிவழிச் செய்திகளை நிஜம் என்று பதிவு செய்திருப்பதையே இது உணர்த்துகிறது.''அறிவைத் தேடிச் செல்வது மனிதனின் முதல் கடமையாகும். எனது பயணம் முழுவதுமே அறிவைத் தேடி நான் மேற்கொண்ட முயற்சிகளே'' என்கிறார் இபின் பதூதா. இன்றைய வரலாற்று அறிஞர்களில் சிலர் துக்ளக்கின் முட்டாள்தனமான செயல்களுக்குப் பின்னே இபின் பதூதாவின் பங்கும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். 'இபின் பதூதாவும் குரூரமான தண்டனைகளைத் தரும் நீதிபதியாகவே பணியாற்றி இருக்கிறார். ஐந்து பெண்களை மணந்து இருக்கிறார். மன்னரின் நண்பர் என்ற முறையில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்’ என்கிறார்கள்.

இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் 14-ம் நூற்றாண்டு இந்தியாவைத் தெரிந்து கொள்வதற்கும் அன்றைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வு களைப் பதிவு செய்வதிலும் முக்கியப் பங்கு வகித்து இருக்கின்றன. தனது வாழ்நாளின் பெரும் பான்மையை உலகம் சுற்றுவதிலேயே கழித்த இந்த இரண்டு யாத்ரீகர்களின் குறிப்பேடுகள்தான் இந்திய வரலாற்றின் பண்பாட்டுச் சாட்சிகளாக  இருக் கின்றன. அந்த வகையில் இரண்டு யாத்ரீகர்களும் முக்கியமானவர்களே!

No comments:

Post a Comment