Monday, July 9, 2012

கடவுளைக் கண்டு பிடித்தார்களா? - வெளியாகும் பிரபஞ்ச ரகசியம்


ந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆராய்ச்சி இது. நாம் வாழும் இந்த பூமியையே ஒரு சின்னப் புள்ளியாகத் தன்னில் கொண்டிருக்கும் இந்தப் பேரண்டம் எப்படி உருவாகி இருக்கும் என்ற ஆராய்ச்சி.

சுமார் 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த பெருவெடிப்பின்போது, இந்தப் பேரண்டம் உருவானது. அதற்குப்பின், அண்டவெளியில் சுற்றிக்கொண்டிருந்த நுண்துகள்கள் இணைந்தே மூலக்கூறுகளும், அணுக்களும், கோள்களும், நட்சத்திரங்களும், இந்தப் பேரண்டமும் உருவானது என்பது விஞ்ஞான உலகின் நிலைப்பாடு.

ஆனால், பெருவெடிப்பு நடந்தபோது, ஒளியைவிட அதிவேகத்தில் நுண்துகள்கள் சிதறிய கணத்தில் அவற்றுக்கு நிறை (நிறை என்பது புவியீர்ப்பு விசையைக் கழித்தது போக கிடைக்கும் எடை) இல்லை. அவற்றுக்கு நிறையைக் கொடுத்தது எது? எப்படி அவை இணைந்து மூலக்கூறுகளாக, அணுக்களாக, கோள்களாக, நட்சத்திரங்களாக, பேரண்டமாக மாறின என்ற கேள்விக்குப் பல்லாண்டு காலமாக விடை கிடைக்கவில்லை.

இதற்கான பதில் இரண்டு விஞ்ஞானிகளின் கோட்பாடுகளால் உலகுக்குக் கிடைத்தது. ஒருவர், இங்கிலாந்து விஞ்ஞானியான பீட்டர் ஹீக், இன்னொருவர் இந்திய விஞ்ஞானியான சத்யேந்திர போஸ். ''இந்தத் துகள்கள் புலப்படாத ஆற்றலுடன் சேர்ந்து நிறையைப் பெறுகின்றன; அந்த ஆற்றல் களத்தையும் அதில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நுண் துகளையும் கண்டறிந்தால், அதுவே பிரபஞ்ச ரகசியம்'' என்பதே அவர்களின் 'ஹிக்ஸ் போஸான்’ கோட்பாடு.இந்தக் கோட்பாடு வெளியாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இதுவரை நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. தொடக்கத்தில் அமெரிக்கா இந்த ஆய்வில் அதிக அக்கறை காட்டியது. ஆனால், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படாததால், ஒருகட்டத்தில் ஆய்வில் இருந்து பின்வாங்கியது. பின், ஐரோப்பிய நாடுகள் இந்த ஆய்வில் கைகோத்தன. கடந்த 2008-ல், ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகம் (சி.இ.ஆர்.என்) ஜெனிவா அருகே நிலத்துக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. நீளத்துக்கு அமைத்த பெரும் வட்டச் சுரங்க ஆய்வகத்தில் ஆய்வைத் தொடங்கியது. கண்ணுக்குப் புலப்படாத 'ஹிக்ஸ் போஸான்’ துகளைக் கண்டறிய ஒரே வழி... அதன் எடையைக் கண்டறிவது. சின்ன அளவில் ஒரு பெருவெடிப்பை - அதாவது ஆய்வுக்கூடத்தில் ஒரு செயற்கைப் பிரளயத்தை - நிகழ்த்தி அதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் அடிப்படையாக இருந்தது.

பேரண்டம் தோன்றிய ரகசியம் என்பதால், கடவுளைக் கண்டறியும் ஆய்வு இது என்று ஒருபுறம் அறிவியல் ஆர்வலர்கள் கொண்டாட, இன்னொருபுறம், இந்தச் சோதனை உலகையே அழித்து விடும் என்று நிறைய எதிர்ப்புகளும் எழுந்தன. இந்தச் சூழலில்தான் கடந்த வாரம் 'ஹிக்ஸ் போஸான்’ துகளைக் கிட்டத்தட்டக் கண்டறிந்து விட் டதாக அறிவித்து இருக்கிறது ஆய்வுக்குழு.

சரியாக, 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் உடைய துகளே 'ஹிக்ஸ் போஸான்’ ஆக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தீர்மானித்திருந்தனர். செயற்கைப் பெருவெடிப்பின்போது, 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் உடைய துகளை அவர்கள் கண்டறிந்து இருக்கின்றனர். அதாவது, 99.999 சதவிகித 'ஹிக்ஸ் போஸான்’ அவர்களுக்கு அகப்பட்டு விட்டது.
  
இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்ற போதிலும், இது தொடக்கம்தான் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர். ''இயற்கையைப் புரிந்துகொள்வதில் இது ஒரு மைல்கல். இந்தத் துகள் கண்டுபிடிப்பின் மூலம் உலகம் பிறந்த கதை சூடுபிடித்து உள்ளது'' என்கிறார் ஐரோப்பிய அணு ஆய்வுக் கழக இயக்குநர் ஹுயர்.

எல்லாம் சரி, இந்தச் சோதனையால் உலக மக்களுக்கு என்ன லாபம்?

''இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது; ஆனால், பயன்படத் தக்க விஷயங்கள் நடக்கலாம்'' என்கிறார்கள் விஞ்ஞானிகள். சுற்றுச்சூழல் ஆர் வலர்களோ, ''இந்தச் சோதனையின் தொடர்ச் சியாக, அடுத்தடுத்து பெரிய அளவில் விஞ்ஞானிகள் பெருவெடிப்புச் சோதனைகளை நடத்த முனை வார்கள். வல்லரசுகளும் பெருநிறுவனங்களும் இந்த ஆய்வைத் தொழில் சார்ந்ததாக மாற்றுவார்கள். அதனால் இந்த ஆய்வு ஒரு பெரும் அழிவுக்கு வழிவகுக்கும்'' என்கிறார்கள்.

விஞ்ஞானம் என்றாலே ஆக்கமும் அழிவும் இணைந்ததுதானே?

வரலாற்றுத் தந்தை இந்தியா
  
இந்த ஆய்வின் வரலாற்றுத் தந்தை இந்தியா. இப்படிச் சொன்னவர் ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகச் செய்தித் தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ. உண்மைதான். 1920-களில் இதுதொடர்பான தன்னுடைய ஆய்வை இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு அனுப்பினார் இந்திய விஞ்ஞானியான சத்யேந்திர போஸ். ஆனால், அவை அதை திருப்பி அனுப்பி விட்டன. பின்னாளில், போஸ் அதை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பிய போது, அவர் அதை ஜெர்மன் அறிவியல் இதழ்களில் பிரசுரிக்க வைத்தார். போஸோடு சேர்ந்து ஆய்விலும் ஈடுபட்டார். இது அன்றைய கதை.

கொல்கத்தாவின் சாஹா அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சி மையம், மும்பையின் டாடா ஆராய்ச்சி மையம், அலகாபாத்தின் ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி மையம், புவனேஸ்வரின் இயற்பியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இது இன்றைய கதை!

சமஸ்
விகடன்   

No comments:

Post a Comment