Wednesday, July 11, 2012

'சென்னையில் பாதி சிவகிரி ஜமீனுக்கு சொந்தமா?''கிறுகிறு சிவகிரி!


சில நேரங்களில் கற்பனை​களை ​விடவும் உண்மை ஆச்சர்யமாகவும் அதிர்ச்சி​​யாகவும் இருப்பது உண்டு. சிவகிரி ஜமீனுக்குச் சொந்த​மானதாகச் சொல்லப்​படும் சொத்துக்களின் மதிப்பு அந்த வகையைச் சேர்ந்தது​தான். சுவிஸ் வங்கியில் பணம் கிடக்கிறது... சென்னையில் உள்ள பல சொத்துக்கள் எங்களு​டையதுதான் என்ற டைப்பில் பல்வேறு அலம்பல்களுடன் சந்திக்கு வந்துள்ளது சிவகிரி ஜமீன்! 
நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சிவகிரி ஜமீனுக்குச் சென்று, வாரிசுகளை சந்தித்தோம்.
''18-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களிடம் தளபதிகளாக இருந்த சிவகிரி ஜமீன், பின்னர் அவர்களிடம் இருந்து விலகி தென்மலை என்ற பகுதிக்குச் சென்றனர். பின்னர் இடம்பெயர்ந்து 1733-ம் ஆண்டு சிவகிரி என்ற ஊரைத் தனி பாளையமாக உருவாக்கி ஆட்சி செய்தார்கள். பாளையங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரிட்டிஷ் அரசு, ஜமீன்தார் முறையைக் கொண்டுவந்த பிறகு, சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத்தம்பியார் என்பவர், சிவகிரி பாளையத்துக்கு ஜமீன்தாராக நியமிக்கப்பட்டார். இவருடைய மகன்தான் ராமலிங்க வரகுணப்பாண்டிய சின்னத்தம்பியார். இவர், சென்னையில் தங்கிப் படித்த காலத்தில், ஏராளமான சொத்துக்கள் சென்னையில் வாங்கப்பட்டதாம். இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்டபோது, இவர் மர்மமான முறையில் இறந்துபோனார்.  அதன்பிறகு, ஜமீனை நிர்வகிக்கும் அதிகாரத்தை, விருதுநகர் மாவட்டம் சுண்டங்குளத்தில் இருந்த செந்தட்டிக்காளை என்பவருக்கு பிரிட்டிஷ் அரசு கொடுத்தது. இவருடைய வாரிசுகள்தான் எஸ்.கே.தெக்ஷீண பிரசாத், எஸ்.கே.ரவீந்திரன், எஸ்.கே.ஜெகநாதன், மயில்வர்த்தினி ஆகியோர். இவர்களில் தெக்ஷீண பிரசாத்தின் மனைவி பாலகுமாரி நாச்சியார் சிவகிரி அரண்மனையில் வசித்துவருகிறார். மற்றவர்கள் வாசுதேவ நல்லூர் மற்றும் திருநெல்வேலியில் வசித்து வருகிறோம்'' என்று வரலாறு சொல்கிறார்கள்.
ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட பின், அரசாங்கம் கைப்பற்றிக்கொண்ட சொத்துக்கள் போக மற்றவற்றைப் பங்கு பிரித்து, அனுபவிப்பதில் இவர்களுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். ஒருவர் மேல் ஒருவர் தொடுத்த வழக்குகளாக இப்போது உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டில் எம்.ஜெகநாதன் (இவர் ஜமீனின் தம்பி எஸ்.கே.ஜெகநாதன் அல்ல) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். சிவகிரி ஜமீன் செந்தட்டிக் காளையை, அவருடைய கடைசிக் காலத்தில் மருத்துவமனையில் வைத்துப் பராமரித்ததாகவும், அதனால் அவருக்குச் சொந்தமான சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பவரை, செந்தட்டிக்காளை தனக்கு வழங்கி இருக்கிறார் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், சொத்துக்களை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை ஜெகநாதனுக்கு வழங்கியது.
இந்த சமயத்தில் சுவிட்சர்லாந்தில் இருந்து சென்னை வந்த கேசினோ என்பவர், ஜெகநாதனைச் சந்தித்துள்ளார். 'சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டியன் பெயரில் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. அதைத் தன்னால் வெளியில் கொண்டுவர முடியும்’ என்று கூறி, அதற்காகத் தனக்கு பவர் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட ஜெகநாதன் கேசினோவுக்கு பவர் வழங்கி உள்ளார்.
இதை அடுத்து, சென்னையில் சிவகிரி ஜமீனுக்குச் சொந்தமான சொத்துக்கள் என்று 108 இடங்​களைப் பட்டியலிட்டு, இப்போது அவற்றை அனுபவித்து வருபவர்களை மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கி இருக்கிறார் ஜெகநாதன். அதில், சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப், சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதி, ஸ்பென்சர் பிளாசா கட்டடம், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதி, மயிலாப்பூர் சிவன் கோயில் உள்ளிட்டவை அவர் குறிப்பிடும் சொத்துக்களில் அடக்கம். இதுபோன்ற இடங்களுக்குச் சென்று ஜெகநாதன் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்ததும், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி, முறையான விசாரணை கேட்டார்கள்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வித்யா என்ற பெண் கோர்ட்டில் திடீரென்று ஆஜரானார். 'சிவகிரி ஜமீனின் சொத்துக்களை நிர்வகிக்க தனக்குத்தான் அதிகாரம் உள்ளது. தன் அக்கா மாயாவின் கணவர் கேசினோ அந்தப் பவரைத் தனக்கு வழங்கி இருக்கிறார்’ என்று தெரிவித்தார். மேலும், சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீனுக்கு மூன்று லட்சம் கோடி அளவுக்குப் பணம் இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய அக்காள் கணவர் கேசினோ ஒரு விபத்தில் இறந்து விட்டதால், பணத்தைக் கொண்டுவரத் தாமதம் ஆவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவரங்களை எல்லாம் மீடியாவில் பார்த்த பிறகே, சொத்துக்​காக அடித்துக் கொண்டிருந்த சிவகிரி ஜமீனின் வாரிசுகள் அலறி அடித்து நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 'தங்​களுக்கே தெரியாமல் உள்ள தங்களின் சொத்துக்களை மீட்டுத்தரவும், போலியான நபர்கள் வைத்துள்ள அதிகாரங்களை ரத்து செய்யவும் வேண்டும்’ என்றும் மனு செய்துள்ளனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். ஜெகநாதன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சொக்கலிங்கத்தை நீதிபதிகள் கேள்விகளால் திணற அடித்தனர். ''நீங்கள் கையில் வைத்துள்ள 108 சொத்துப் பட்டியலில் சென்னையில் பாதி வந்துவிடுகிறது. இவை எல்லாம் சிவகிரி ஜமீனின் சொத்துக்கள் என்று உங்களுக்கு உறுதிப்படுத்தியது யார்?'' என்று கேள்வி எழுப்பினர். ''உண்மையான வாரிசுகள் கஷ்டத்தில் இருக்கும்போது, நீங்கள் அடுத்தவர் சொத்துக்கு சொந்தம் கொண்டாடுவதும், இப்போது அதை அனுபவிப்பவர்களை மிரட்டுவதும் கிரிமினல் குற்றம். அதோடு நீதிமன்றத்தையும் நீங்கள் ஏமாற்றி உள்ளீர்கள். இவை பொய் என்று தெரிய வந்தால், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்கள். மேலும், இது தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் உண்மையான விவரங்களை அளிக்க சென்னை கலெக்டருக்கும், நிலஅளவைத் துறை செயலாளருக்கும் ஆணை இட்டுள்ளனர்.
சினிமா தயாரிக்க சீட்டிங் கதை தேடுறவங்க யாராவது இதை எடுங்கப்பா!

No comments:

Post a Comment