கர்நாடக அரசின் காவல்துறையும் நீதித் துறையும் நித்தியானந்தாவை விரட்டி வரும் சூழலில், கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்ப்பே வந்து விட்டது!
நித்தி வட்டாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கும் இந்த வழக்குக்குக் காரணகர்த்தா, பாபட்லால் சாவ்லா. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தொழில் அதிபரான இவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கிறார். இவ ருக்கு 2005-ல் நித்தியின் தொடர்பு ஏற்பட்டது. பார்த்த மாத்திரத்திலேயே நம்பிக்கை பிறக்க, அமெரிக்காவுக்கு நித்தி வரும்போது எல்லாம், மரியாதை நிமித்தமாகச் சந்திப்பாராம். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் அனைவரும் பாரம் பரிய நெறிமுறைகள் பிறழாமல் வாழ வேண்டும் என்பதில் சாவ்லாவுக்கு ஆர்வம் அதிகம். அதைத்தெரிந்து கொண்ட நித்தி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதிக் பல்கலைக்கழகம் அமைக்க இருப்பதாகச் சொல்லவும், 1.7 மில்லியன் டாலர் (சுமாராக 9.35 கோடி ரூபாய்) நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறார் சாவ்லா. இந்த விவகாரம்தான் கோர்ட்டுக்குப் போய்விட்டது.
சாவ்லா தாக்கல் செய்த மனுவில் சொல்லி இருப்பது இதுதான்...
'லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதிக் யுனிவர்சிட்டி ஒன்றைத் தொடங்க இருப்பதாக நித்தியானந்தாவே என்னிடம் நேரில் சொன்னார். அதற்காக நான் 1.7 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினேன். அதை 'நித்தியானந்தா ஃபவுண்டேஷன்’ நிறுவனத்திடம் கொடுத்தேன்.
நான் நிதி கொடுக்கும்போது, அந்த நிறுவனத்தின் குருவான நித்தியானந்தாவும் அதன் நிர்வாகிகளாக கோபால் ஷீலம் ரெட்டி, அவரது மனைவி ஜோதி ஷீலம் மற்றும் சிவ வல்லபனேனி, அவரது மனைவி ராகினி வல்லபனேனி, மா நித்ய சதானந்தா ஆகியோர் இருந்தனர். இந்தச் சூழலில், நித்தி ஒரு நடிகையுடன் இருப்பதுபோன்ற சி.டி. வெளியானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதனால், வேதிக் யுனி வர்சிட்டி அமைப்பதற்காக நான் கொடுத்திருந்த பணத்தைத் திருப் பித் தருமாறு நித்தியிடம் பல முறை கேட்டேன்.ஆனால், கொடுக்கவில்லை. மேலும், 'வேதிக் பல்கலைக்கழகம் அமைக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது’ என்றும் நித்தியே சொல்லிவிட்டார். ஆனாலும், பணத்தைக் கொடுக்க மறுக்கிறார். என்னை ஏமாற்றிப் பெற்ற பணத்தைத் திரும்பக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் கூட்டுச் சதி செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி ஸ்டீபன் வில்சன் இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர், கடந்த வாரம் தீர்ப்பு அளித்தார். அதுதான் நித்திக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
'நித்தியானந்தா ஃபவுண்டேஷன் என்பது அமெரிக்க நிதிச்சட்டம் 501 (சி)(3)-ன் படி செயல்பட வில்லை. அதனால், இது ஒரு மோசடி நிறுவனம். இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட பாபட்லால் சாவ்லாவுக்கு 1.565 மில்லியன் டாலரைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்த வழக்கின் இறுதித்தீர்ப்பு ஜூலை 19-ம் தேதி வழங்கப்படும்.
இதுதவிர, இந்த மோசடி நிறுவனத்துக்கு நன்கொடை கொடுத்திருக்கும் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகினால், அவர்களுக்கும் பணம் திரும்பப் பெற்றுத் தரப்படும். மோசடியாக நடத்தப்பட்ட இந்த ஃபவுண்டேஷன் மூலம் வசூலித்த நன்கொடைகள் முழுவதையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் சொல்லி இருக்கிறார் நீதிபதி.
நித்திக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும், மதுரை ஆதீன மீட்புக் குழுவினருக்கு இந்தத் தீர்ப்பு டானிக் போல புத்துணர்வைக் கொடுத்து இருக்கிறது.
மீட்புக் குழுவின் ஒருங்கிணைப் பாளரான நெல்லை கண்ணன் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''நித்தியின் நிறுவனத்தையே கலிஃபோர்னியா நீதிமன்றம் 'மோசடி யானது’ என்று சொல்லி இருக்கிறது. இப்போது பாபட்லால் சாவ்லாவிடம் வசூலித்த நன்கொடையை மட்டுமே திருப்பிக் கொடுக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஜூலை 19-ம் தேதி வரக்கூடிய இறுதித் தீர்ப்பில், நித்தி உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் அனைவரும் குற்றவாளிகள் என்பது நிரூபணம் ஆகுமானால், சாவ்லா கொடுத்த நன்கொடையைப் போல 10 மடங்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
இதுதவிர, நித்தி இன்னும் ஓர் பித்தலாட்டமும் செய்துள்ளார். அவரது அமெரிக்க விசாவில் 1978 ஜனவரி 1-ம் தேதி நித்தி பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், தன்னுடைய பாஸ்போர்ட்டில், 1977 மார்ச் 13-ம் தேதி பிறந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார். இதையும் அமெரிக்க கோர்ட்டில் பாபட்லால் சாவ்லா தெரிவித்து இருப்பதால் அவருக்கு சிக்கல் அதிகம்தான். கலிஃபோர்னியா நீதிமன்றம் நித்தி மீது நடவடிக்கை எடுக்க இருக்கும் நிலையில், தமிழக அரசு இன்னமும் பாராமுகமாக இருப்பது வேடிக்கை. இனியாவது மதுரை ஆதீனம் சுதாரித்துக் கொண்டு, நித்தியிடம் இருந்து இளைய சன்னி தானம் பட்டத்தைப் பறிக்க வேண்டும். அப்போதுதான் மதுரை ஆதீனத்தின் கௌரவம் காப்பற்றப்படும்'' என்று படபடத்தார்.
அமெரிக்கா ஆரம்பித்து வைத் துள்ளது!
-
'ஹக்’ பண்ண முடியாத நித்தி!
பெங்களூரு துரத்தல், மதுரை மிரட்டல்களை எல்லாம் தாண்டி கடந்த 3-ம் தேதி, திருவண்ணாமலையில் குரு பௌர்ணமி நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்திக்காட்டி விட்டார் நித்தி.
தன்னுடைய ஆசிரமத்தில் பயிற்சி முடித்த ஆண் பக்தர்களை கட்டித் தழுவி, தீட்சை கொடுத்தார். பெண் பக்தைகளை அப்படிச் செய்ய முடியாத நிலையில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லி வருந்தினார். ஒரு பெண் பக்தையிடம், ''நான் உன்னை 'ஹக்’ (கட்டிப் பிடிக்க) செய்ய முடியவில்லை என்று வருத்தப்படாதே. நான் இங்கே அப்படிச் செய்தால் சில பத்திரிகைகள் அதைத் திரித்து எழுதி விடுவார்கள். அப்புறம் நீயும் அட்டைப்படம் ஆகிவிடுவாய். நான் அட்டைப் படமாக வரலாம். நீ வரக்கூடாது. அதனால்தான் உன்னை 'ஹக்’ பண்ணவில்லை'' என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.
அதன் பின்னர் கூட்டத்தைப் பார்த்து, '' இந்தப் பெண் ஒரு மருத்துவர். அவர் என் ஆசிரமத்தில் ஐந்து ஆண்டுகளாக தங்கி, பல ஆயிரம் பேருக்கு மருத்துவ உதவி செய்து இருக்கிறார். அவருக்கு வாழ்க்கையில் முக்கியமான தருணம் இதுதான். ஆனால், இந்தத் தருணத்தில் கூட, அவர் என் மேல் சாய முடியாது. தந்தை - மகள் உறவு இருப்பது அவர்களுக்குத் தெரியாது. மனித இனம் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திரிக்கும்'' என்றார் விரக்தியாக.
அதன் பிறகு பக்தர்களிடம் பேசிய நித்தி, ''பல இன்னல்கள் வந்தாலும் என்னுடன் நெருப்பாற்றில் நீந்த வந்திருக்கும் நீங்கள் அனைவரும் ஆடுகள் அல்ல. சிங்கக் குட்டிகள். ஆடுகளை போல் இல்லாமல் கர்ஜிக்க வேண்டும். நான் ஏற்கெனவே சொன்னது போல் நிரூபித்துக் காட்டி வருகிறேன். இப்போது என்னிடம் எதுவும் இல்லை. என் சிங்கக் குட்டிகளே நீங்கள் எப்போதும்போல் நம் பணியைச் செய்யுங்கள்!'' என்று புரிந்தும் புரியாதது மாதிரியும் சில வார்த்தைகளை உதிர்த்தார். உடனே பரவசப்பட்ட கூட்டம் கன்னத்தில் போட்டுக்கொண்டது.
No comments:
Post a Comment