நில மோசடி வழக்குகளில் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிறையில்அடைக்கப்பட்டு, பலர் ஜாமீனில் வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது ஒரு அபகரிப்புப் புகார் கிளம்பி இருக்கவே, டென்ஷனில் துடிக்கிறது
தி.மு.க. கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.
தி.மு.க. கடந்த 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 65 வயதான சேஷாத்திரி குமார் என்பவர் வந்து ஒரு புகார் கொடுத்தார்.
அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இதுதான்.
''ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள எங்களது குடும்ப இடத்தில் எனது பங்குக்குக் கிடைத்த இரண்டரை கிரவுண்டில் நான் வீடு கட்டி வசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 8-ஏ, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார்பேட்டை என்ற முகவரியில் உள்ள அந்த வீட்டை தேவி பழனிச்சாமி என்பவருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்று பேசி மாத வாடகைக்கு விட்டேன். இது தவிர மீதி உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் இடத்தை மு.க.ஸ்டாலின் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டி ஸ்டாலின் குடிவந்ததில் இருந்து, எனது வீட்டையும் வாங்கி தனது வீட்டை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டார். அதற்காக என் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரை மிரட்டி, காலி செய்ய வைத்தனர். சுப்பா ரெட்டி, ராஜாசங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடியாட்களுடன் வந்து, ஐதராபாத்தைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி என்பவருக்கு, 5.5 கோடி ரூபாய்க்கு என் வீட்டை நான் விற்றதாக, பத்திரப் பதிவு செய்து கொண்டனர். அந்தத் தொகையை டி.டி-யாகக் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டுக்கு வந்த ஸ்ரீனிவாசன், ஒரு கோடியே 15 லட்சம் பணம் கொடுத்தார். அந்தப் பணமும் கணக்கில் வராத பணம் என்றும், இதை வெளியில் சொன்னால் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மூலமாக வருமான வரி சோதனை நடத்துவோம் என்றும் மிரட்டினார். அதோடு, எட்டு லட்சம் ரூபாயை தனக்கான கமிஷன் என்றும், அவரே எடுத்துக் கொண்டார். இப்போது அந்த வீடு, மாத வாடகை 20,000 ரூபாய் என்று ஸ்டாலின் மகன் உதயநிதி பெயருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதில் ஸ்டாலின் மகள் செந்தாமரை குடி இருக்கிறார்.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சிலரிடம் பேசினேன். அந்த விஷயத்தைத்
தெரிந்துகொண்டதும், என் வீட்டுக்கு வருமான வரி அதிகாரிகளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் என்னிடம் வாக்குமூலம் எழுதி வாங்கி உள்ளனர். என் வீட்டை அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி தனது பினாமி பெயரில் எழுதி வாங்கியதுடன், என் வீட்டுக்கு வந்து கறுப்புப் பணத்தை வலுக்கட்டாயமாக கொடுத்து வருமான வரிச் சோதனை செய்ய வைத்து, எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் வேணுகோபால் ரெட்டி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என் வீட்டை மீட்டுத் தருமாறும், எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பு தரும்படியும் மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று விளக்கி இருக்கிறார் சேஷாத்திரி குமார்.
இந்தப் புகார் குறித்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறதா? என்று விசாரிக்க உளவுத்துறையில் உள்ள நம்பிக்கையானஅதிகாரி ஒருவருக்கு தோட்டத்தில் இருந்து உத்தரவு வந்ததாம். புகார் கொடுத்து இருந்த சேஷாத்திரி குமாரை தனது அலுவலத்துக்கு வரவழைத்த அந்த உளவு அதிகாரி, குமாரிடம் சுமார் மூன்று மணி நேரம் விசாரித்து இருக்கிறார். அவர் வைத்து இருந்த ஆவணங்களைத் தீவிரமாக ஆராய்ந்து இருக்கிறார். அதன்பிறகுதான், 1-ம் தேதி காலையில் புகார்தாரர் குமாரை விசாரணைக்கு அழைத்து இருக்கிறது, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு. அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை குமாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு பல முறை, குமார் கொடுத்து இருந்த ஆவணங்களை ஆராய்ந்தனர். அதன் பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக ஸ்டாலின், சுப்பா ரெட்டி, உதயநிதி ஸ்டாலின், ராஜா சங்கர் ஆகியோரைத் தொடர்பு கொண்டோம். சுப்பா ரெட்டி சார்பாக பேசிய அவரது மேலாளர் வாசுதேவன், ''குமார் என்பவர் யார் என்றே சுப்பா ரெட்டிக்குத் தெரியாது. இது வேண்டும் என்றே கிளப்பி விடப்படும் புகார்'' என்று சொன்னார். ஸ்டாலின் தரப்பு பதிலை அறிய அவரது இல்லத்துக்குத் தொடர்பு கொண்டோம். இந்தப் புகார் விவரங்களைக் கேட்டுக் கொண்ட அவரது உதவியாளர், ''தளபதி வெளியூர் சென்றிருப்பதால் அவரிடம் தகவல் சொல்கிறோம்'' என்றார்.''ஸ்டாலின் அல்லது உதயநிதி தரப்பு பதில் தேவை'' என்பதை, அவரிடம் பதிவு செய்துள்ளோம். ராஜா சங்கரின் தொடர்பு எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. அவர்களது பதில் கிடைத்ததும் முழுமையாக வெளியிடத் தயாராக இருக்கிறோம்!
No comments:
Post a Comment