Wednesday, November 7, 2012

பிடதி, மதுரைக்கு அடுத்து திருவண்ணாமலைக்கும் சிக்கல்! நித்திக்கு வந்த சோதனை!


நித்திக்கு துக்க காலம் இது! 
பிடதி, மதுரை ஆசிரமங்களில் பிரச்னை ஏற்பட்டு வெளியேறியவர், இப்போது தஞ்சம் அடைந்து இருப்பது திருவண்ணாமலை ஆசிரமத்தில். அங்கேயும் இந்து அறநிலையத் துறை மூலமாக வெடிக்கிறது பிரச்னை.
பிடதி ஆசிரமத்தில் செயல்பட்டு வந்த சில அறக்கட்டளைகளை சமீபத்தில் திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு மாற்றினார் நித்தியானந்தா. இனி, அவருடைய செயல்பாடுகள் அனைத்தையும் இந்த ஆசிரமத்தில் இருந்து செய்யவும் உத்தேசித்து இருந்தார். ஆனால், இந்த ஆசிரமத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், ரொம்பவே ஆடிப்போய் இருக்கிறார் நித்தி.
ஆசிரமத்தில் உள்ள சீடர்கள், 'சுவாமி இங்கே இல்லை. அவர் பிடதியில் இருக்கிறார்’ என்று ஒரே பல்லவியைத்தான் பாடி வருகின்றனர். ஆசிரமக் கதவுகள் இப்போது மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. அதனால், உள்ளே நடப்பது என்னவென்று யாருக்கும் தெரிவது இல்லை. யாரையும் உள்ளே அனுமதிப்பதும் இல்லை. பதில் பேசவும் யாரும் முன் வருவது இல்லை.
ஆசிரமத்தில் இருந்த ஒரு சீடர், தன் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசினார். ''சுவாமி இங்கேதான் இருக்கிறார். இந்து அறநிலையத் துறையில் இருந்து நோட்டீஸ் கிடைத்தது முதல் திருவண்ணாமலை ஆசிரமத்தைவிட்டு அவர் வெளியே வருவது இல்லை. இந்த ஆசிரமம் அரசிடம் செல்லாமல் தடுப்பதற்கு என்ன வழிமுறைகள் இருக்கின்றன, எப்படிக் காப்பாற்றலாம் என்று மூத்த வழக்கறிஞர்கள், முக்கியமான சீடர்களுடன் எப்போதும் ஆலோசனையில் இருக்கிறார். யாருக்கும் தெரியாமல் திடீர் திடீரென காரில் எங்கேயோ போய்விட்டு வருகிறார். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் எங்கள் சுவாமி இப்போது இறுகிய முகத்துடன் காணப்படுகிறார். இந்த ஆசிரமத்தை அரசின் கைகளுக்குச் செல்லவிடாமல் எப்படியும் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது'' என்றார்.
நோட்டீஸ் அனுப்பி 15 நாட்கள் கெடு முடிந்துவிட்ட நிலையில், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள் என, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம்.
''திருவண்ணாமலையில் 2008 ஏப்ரலில்தான் நித்தியானந்தர் ஆசிரமம் ஆரம்பித்தார். ஆரம்பித்த புதிதில் அங்கே 27 அடி உயரத்தில் நவபாஷாண லிங்கமும், 1,008 லிங்கங்களையும் நிறுவப்போவதாக நோட்டீஸ் அடித்து விநியோகித்தார். இந்த திரு வண்ணாமலையில் அண்ணாமலையார்தான் பிரதானம் என்பதால், அப்போதே பொதுமக்கள் மற்றும் கிரிவல பக்தர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அப்போதைய ஆட்சியர் மூலம் அவரது முயற்சியைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, நவபாஷாண லிங்கத்தை இங்கே அமைப்பதை நிறுத்தி, அதை பிடதியில் நிறுவினார். அதன்பிறகு, திருவண்ணாமலைக்கு வருவதையும் குறைத்துக்கொண்டு பிடதியிலேயே தங்கி இருந்தார். எங்கள் அலுவலகம் மூலம் நித்தி யானந்தருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னரே, 'உங்களது ஆசிரமத்தை இந்து அறநிலையத் துறையின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது?’ என்று சில கேள்விகளைக் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அந்தக் காலக்கெடு முடிந்தும் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வராத காரணத்தால்,  இரண்டாவது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம். அதற்கு அவர் இன்னும் 15 நாட்கள் அவகாசம் கேட்டு இருக் கிறார்'' என்றார்.
''ஆசிரமத்தைக் கைப்பற்ற முடியுமா?'' என்று அவரிடமே கேள்வி எழுப்பினோம்.
''நீங்கள் நினைப்பதுபோல் அது ஆசிரமம் இல்லை. அது கோயில்தான். அங்கே சுவாமி சிலைகள், லிங்கங்கள் என்று சன்னதிகள் அமைத்து கோயிலாகத்தான் செயல்பட்டு வருகிறது. தினமும் பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். கோயில் போல் உண்டியல் வைக்கவில்லையே தவிர நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. அவர் தனது வெப்சைட் மூலமும் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வசூல் செய்கிறார். அதனால், அந்த ஆசிரமத்தை கையகப்படுத்துவதற்கு இந்து அறநிலையச் சட்டம் நிறையவே பொருந்துகிறது. அவர் பதில் கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் நித்தியானந்தரின் ஆசிரமத்தைக் விரைவில் கையகப் படுத்திவிடுவோம்'' என்றார்.
திருவண்ணாமலை ஆசிரமத்தை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரபல சட்டப் புள்ளிகளிடம் தஞ்சம் அடைந்துள்ளாராம் நித்தி.

No comments:

Post a Comment