Thursday, November 1, 2012

நாடாள்பவர்களில் இன்று யார் சீசரின் மனைவி? தமிழருவி மணியன்




'மக்கள் இப்போது செய்யவேண்டியது ஒன்றுதான். அயோக்கியர்களை, துரோகிகளை, நாணயம், ஒழுக்கம் கெட்ட கீழ்மக்களை வெறுக்க வேண்டும். மக்களிடம் இந்தக் குணம் இல்லாததால் அயோக்கியர்களும், கீழ்மக்களும் பொதுவாழ்வில் தலைநீட்டவும், பிரதிநிதித்துவம் பெறவும் துணிகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் ஆவ தற்குத் தரம் வேண்டாமா? அயோக்கியர்களையும், மக்களைக் காலித்தனத்தினால் மிரட்டி வயிறு வளர்ப்பவர்களையும், மான ஈனம் சிறிதுமின்றிச் சமயம்போல் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராய் இருப்பவர்களையும் பொதுமக்கள் வெறுக்காவிட்டால், மற்ற துறைகள் எப்படிப் போனாலும், அரசியல் துறை... அதாவது, ஆட்சித் துறை சிறிதும் சீர்பட முடி யாது’ (விடுதலை 7.7.1952) என்று மிகத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டினார் பகுத்தறிவுப் பகலவன் பெரியார்.

'ஆள்வோரும் ஆளப்படுவோரும் தொடர்ந்து தங் களைத் தூய்மைப்படுத்திக்​கொள்ள வேண்டும். எளிய வாழ்க்கை, தன்னலமற்ற தொண்டு ஆகியவற்றை எப்போதும் நடைமுறையில் பின்பற்ற வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் மூலமே ஒழுக்க நெறியிலும், பண்பாட்டுத் தளத்திலும் இந்தியா உலக நாடுகள் இடை யில் தலை நிமிர்ந்து நிற்கக்கூடும்’ என்று தெளிவு படுத்தினார் அண்ணல் காந்தி. பெரியாரும் மகாத்மாவும் பொதுவாழ்வில் எதிரெதிர் களத்தில் பணியாற்றியவர்கள். ஆனால், எளிமை, நேர்மை, உண்மை, தன்னலத்துறவு, சமூக நலன் சார்ந்த சிந்தனை போன்ற உயர் பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தவர்கள்; ஒழுக்கப் புள்ளியில் ஒன்றாய் நின்றவர்கள். இன்று, காந்தியை ரூபாய் நோட்டில் மட்டும் விட்டு வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களையும், பெரியாரின் பெயரை உதடுகளில் மட்டும் உச்சரிக்கும் கழகங்களின் தளபதிகளையும் நினைக்கும்போதே நெஞ்சம் வலிக்கிறது.



'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருந்தாக வேண்டும்’ என்பது அரசியல் நியதி. நாடாள்பவர்களில் இன்று யார் சீசரின் மனைவி? நாளை நாடாளும் வாய்ப்புக்கு ஏங்கி நிற்பவர்களின் வரிசையில் எங்கே சீசரின் மனைவி? நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இந்திய வாக் காளர்களின் ஆதரவைப்பெறும் தார்மீகத் தகுதி எந்த அரசியல் கட்சிக்கு இருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. நேர்மையாளர் என்று நாடு நம்பிய மன்மோகன் சிங்கின் சாயம் வெளுத்து விட்ட நிலையில், காங்கிரஸில் ஒழுக்கமும், நிர்வாகத் திறமையும், ஊழலை ஒழித்துக் கட்டும் உறுதிமிக்க உள்ளமும்கொண்ட மனிதராக யாரை முன் நிறுத்த முடியும்?

அரசியல் களத்தில் மன்மோகன் சிங் அடியெடுத்து வைத்த ஆரம்பமே நெறிமுறைக்கு முரணானது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் வளர்ந்து, வாழ்ந் தவருக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்து எடுக்கப்படும் தகுதி எப்படி வாய்த்தது? மாநிலங்களின் உரிமைகளைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட மாநிலங்களவையில் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த மக்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் மரபு. மக்களவை உறுப்பினராக மற்ற மாநில மக்களின் வாக்குகளைப் பெற்று வந்து அமர்வது வேறுகதை. மன்மோகன் சிங் 1991 முதல் இன்று வரை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக நீடிப்பதே நேர்மைக்குறைவான செயல். நாடாளுமன்றத் தேர்தல் 1999-ல் நடந்தபோது புதுடெல்லியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழு வியவர்தான் நம் பிரதமர்.

பதவியைப் பயன்படுத்தி மன்மோகன் சிங் பணம் சம்பாதித்தவர் இல்லை. பழைய மாருதி காரிலும் பேருந்திலும் பயணிக்கும் அளவு எளிமை சார்ந்தவராக இருந்தவர் என்பது உண்மை. ஆனால், பிரதமர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள எவ்வளவு பெரிய ஊழலை எந்த மத்திய அமைச்சர் செய்தாலும் காந்தியின் குரங்கு பொம்மையைப் போல் கண்களை மூடிக்கொள்பவர் இவர் என்பது அதைவிடப் பெரிய உண்மை. நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன், வாக்குமூலம் அளித்த மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், 2ஜி அலைக்கற்றைக்கான நுழைவுக் கட்டணத்தை 1,651 கோடி ரூபாயில் இருந்து 36 ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு அனுப்பிவைத்த குறிப்பைப் புறக்கணித்துவிட்ட மன்மோகன் சிங், ஆ.ராசாவின் ஆசைப்படி 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டணமான 1,651 கோடி ரூபாயே நீடிக்க அனுமதித்தார் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தினார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 'மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம். கங்கையே சூதகமானால் எங்கே செல்வது?’ என்ற முத்துராமலிங்கத் தேவரின் பொன்மொழிதான் நினைவில் நிழலாடுகிறது.

காங்கிரஸ் தலைமையில் அரங்கேறிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த் விளையாட்டு, நிலக்கரிச் சுரங்க ஏலம் என்று பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடவடிக்கைகள் வெளிப்பட்ட பிறகும், சொந்த மருமகன் ராபர்ட் வதேரா டி.எல்.எஃப். நிறுவனத்துடன் சேர்ந்து நடத்திய ஊழல் திருவிளையாடல்கள் வீதிக்கு வந்த பிறகும், 'ஊழலுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர வேறு எந்தக்கட்சியும் போராடியது இல்லை’ என்று சோனியா காந்தியால் மங்களூர் கூட்டத்தில் வாய் திறக்க முடிகிறதென்றால், இந்திய வாக்காளர்களின் அறியாமையின் மீது அவருக்கு எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கை இருக்க வேண்டும்!

இந்த ஆண்டின் மிகக்கொடுமையான நகைச்சுவை, 'காந்தி வழியில் காங்கிரஸ் நடக்கிறது’ என்று குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது சோனியா காந்தி சொன்னதுதான். நல்லவேளையாக அவர் 'எந்த காந்தி?’ என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

'காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தரக் கூடாது’ என்று பிரதமரிடம் இந்திய ஒருமைப்பாட்டு உணர்வுடன்(!) கோரிக் கை வைத்த எஸ்.எம்.கிருஷ்ணா, 'பேனாவில் மைக்குப் பதிலாக ரத்தம் நிரப்பும் நேரம் இது. என் தொகுதி ஃபரூகாபாத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்ப முடியாது’ என்று பேட்டை தாதாவைப் போல் பேசி நாட்டின் சட்டத்தைப் புனிதப்படுத்தும் சல்மான் குர்ஷித், தேர்தல் வெற்றியே சந்தேகத்துக்கு இடமாக, நீதிமன்றத்தின் விசாரணை வளையத்துக்குள் வந்து நிற்கும் ப.சிதம்பரம், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு பைசா இழப்பும் இந்திய அரசுக்கு ஏற்படவில்லை என்று முரசு கொட்டி முழங்கிய 'மனச்சான்றின் காவலர்’ கபில் சிபல், கோடிக்கணக்கில் ஆப்பிள் மரங்களில் பணம் காய்த்துக் கொட்டியது’ என்று 'ஹாரி பாட்டர்’ கதை சொல்லும் வீர்பத்ரசிங் என்று காங்கிரஸின் அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைப் பிரமுகர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சோனியா காந்தி சொன்னது உண்மைதான்... காங்கிரஸ், (சோனியா) காந்தி வழியில்தான் நடக்கிறது.

சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் சோனியாவின் வழிகாட்டுதலில் நடக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப்போல ஊழலில் புழுத்துத் தெளியும் மக்கள்விரோத ஆட்சி வேறு எப்போதும் அரங்கேறியது இல்லை. காந்தி, நேரு, நேதாஜி, ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, படேல், ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆசாத், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி என்று தேசிய அளவிலும், காமராஜ், வரதராஜுலு நாயுடு, ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, பிரகாசம், தொடக்க நிலையில் காங்கிரஸை வளர்த்த வ.உ.சி., பெரியார், ராஜாஜியைப் போல இன்று காங்கிரஸில் பெயர் சொல்ல ஒருவரும் இல்லை. ஏ.கே.அந்தோணி ஊழலற்றவர் என்பது உண்மைதான். ஆனால், அவரும் பிரதமரைப் போல அதிகார பீடத்தின் மனச்சான்றை அடகுவைத்து விட்டவர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, நாற்காலியில் இருந்து உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டியது அவசரத்தேவையும் அவசியத் தேவையுமாகும். சரி... அடுத்து அந்த நாற்காலியில் அமரவேண்டியவர் யார்? அமைய வேண்டியது எந்தக் கூட்டணி? 'சீசரின் மனைவி’ எங்கே இருக்கிறார்?

தமிழகத்தில் தி.மு.க-வுக்கு மாற்று அ.இ.அ.தி.மு.க. என்பது எப்படி அரசியல் சாபமோ, காங்கிரஸுக்கு மாற்றாகத் தேசிய அளவில் பா.ஜ.க. இருப்பதும் அதே போன்ற சாபம்தான். அதிகாரத்தைச் சுவைக்கும் வரை பற்றற்ற புத்தரைப் போல் தோற்றம் காட்டிய பா.ஜ.க., ஆட்சி அரியாசனத்தில் அமர்ந்ததும் 'காங்கிரஸுக்கு எந்த வகையிலும் தாங்கள் இளைப்பில்லை காண்’ என்று அதன் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு நன்றாக உணர்த்தி விட்டனர். பங்காரு லட்சுமணன் தொடங்கி, எடியூரப்பா வழியாக, நிதின் கட்காரி வரை பா.ஜ.க-வின் நிஜமுகம் தெரிந்து விட்டது. இப்போது, 'கோத்ரா’ ரத்தக் கறை படிந்த மோடி அதன் முகமூடி ஆகிவிட்டார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராக 'வெளவால் வேதாந்தம்’ பேசும் கட் காரியின் கரங்களில் படிந்திருக்கும் கறைகளைப் பகிரங்கப்படுத்திய அர்விந்த் கெஜ்ரிவால், 'மக்களை முட்டாள்​களாக்குவதில் இவர்கள் எல்லோரும் கூட்டாளிகள்’ என்று விமர்சித்ததுதான் பொய்யின் நிழல்படாத உண்மை. இந்த கட்காரியைக் காப்பாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் 'தேசப்பற்று’ நம்மை வியக்க வைக்கிறது. பிரதமர் நாற்காலியை பா.ஜ.க.. அடைவதற்குச் சாத்தியம் இல்லை என்றால், அதில் அமரக்கூடிய தகுதியுள்ளவர் யார்? முலாயம் சிங், மாயாவதி, லாலுபிரசாத், நிதிஷ்குமார் ஜாதகங்களைப் பார்க்க வேண்டியதுதான்.

முலாயம் சிங் மல்யுத்த வீரராக வாழ்க்கையைத் தொடங்கி, உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக மூன்று முறையும், இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஒரு முறையும் அதிகாரம் செலுத்தியவர். நீண்ட காலமாகத் திராட்சைத் தோட் டத்து நரியாகப் பிரதமர் நாற்காலியை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே இருப்பவர். சாதி அரசியலும், முஸ்லிம் வாக்கு வங்கியும் இவரது பின்புலம். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இன்று குபேரர்களின் நண்பராக வலம் வரும் முலாயம், வருவாய்க்கு மீறிய சொத்துக் குவிப்பில் காங்கிரஸிடம் வகையாகச் சிக்கித் தவிப்பவர். உச்ச நீதிமன்றம் முலாயம் குடும்பத்தின் சொத்துகள் குறித்து விசாரிக்கும்படி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு மார்ச் 1, 2007 அன்று ஆணை பிறப்பித்தது. மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் நிறைவேற்றிய அணு ஒப்பந்தத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, கவிழ இருந்த அரசைக் காப்பாற்றியவர் முலாயம். அதற்குக் கைமாறாக மன்மோகன் அரசின் நட்டுவாங்கத்துக்கு ஏற்ப நாட்டியமாடும் சி.பி.ஐ. விசாரணையை விலக்கிக் கொண்டது. நாடாளுமன்றத் தேர்தல் 2009-ல் நடந்தபோது, காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதில் தடை ஏற்பட்டுத் தனியாக நின்றார் முலாயம். ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், சி.பி.ஐ. விசாரணைக்கு மீண்டும் வழி வகுத்தது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசைக் காப்பாற்றி வரும் முலாயம், 'வெளியே தெரியாதபடி தவறு செய் யுங்கள்’ என்று தன் தளபதிகளுக்கு அனுபவ ஞானத் தை அள்ளி வழங்குகிறார். இவர், இந்தியாவின் பிரதமர் ஆனால்...? சாதி, மத அரசியல் பெரிதாக வளர்த்தெடுக்கப்படும்.

மாயாவதியின் தந்தை தபால் துறையில் ஊழியராகப் பணியாற்றியவர். டில்லி ஜெ.ஜெ. காலனிப் பள்ளியில் ஆசிரியையாக மாயாவதி இருந்தபோது, அவரது வாக்குவன்மை கன்ஷிராமின் கவனத்தைக் கவர்ந்தது. உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக நான்கு முறை இருந்த மாயாவதியின் வளர்ச்சியை 'ஜனநாயகத்தின் அதிசயம்’ என்றார் நரசிம்மராவ். ஆடம்பரத்திலும் ஆரவாரத்திலும், கருணாநிதி, ஜெயலலிதா​வைக் காணாமல் செய்யக்கூடிய மாயாவதி, ஏழைகள் அதிகம் உள்ள உ.பி-யில் பூங்காக்களும், சிலைகளும் வைப்பதற்கு 2,500 கோடி ரூபாய் செலவழித்த சீமாட்டி, தன்னுடைய சிலைகளை தானே அரசுப்பணத்தில் பல இடங்களில் வைத்துப் பரவசப்பட்ட பெருமாட்டி, 2007-08 ஆண்டுக்கான வருமான வரியாக 26 கோடி ரூபாய் செலுத்தி, அதிக வருமானவரி செலுத்தும் முதல் 20 நபர்களில் ஒருவராக இடம்பெற்று இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் மாயாவதி. முதல்வர் பதவி பறிபோனதும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்படுவதற்கு இவர் விண்ணப்பித்தபோது, தன் சொத்தின் மதிப்பு (13 மார்ச், 2012 நிலவரப்படி) ரூபாய் 111.26 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டார். சொத்துக் குவிப்புக்கு எதிராக இவர் மீது சி.பி.ஐ. ஏவப்படுவதால் காங்கிரஸ் கூட்டணி அரசைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் இவருக்கும் இருக்கிறது. இவர் பிரதமரானால்? நாடு முழுவதும் இவரது சிலைகள் எங்கு திரும்பினாலும் நம் கண்களில் படும்.

நாடாளுமன்றத்தின் நகைச்சுவை நாவலர் லாலு பிரசாத் 1990 முதல் 1997 வரை பீகாரின் முதல்வராக இருந்து, மாட்டுத் தீவன ஊழலில் சரித்திரம் படைத்து, வழக்கில் சிக்கிப் பதவியில் இருந்து விலகி, தன் மனைவி ராப்ரி தேவியை 1997 முதல் 2005 வரை முதல்வராக அமர்த்தி அழகு பார்த்துப் பீகார் மாநிலத்தின் நிர்வாகத்தையே பாழ்படுத்திப் படுகுழியில் தள்ளியவர். இவருக்கு இந்திய வாக்காளர்களின் முட் டாள்தனத்தை மூலதனமாக்கி பிரதமராகிவிட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதுதான் காலத்தின் கொடுமை. இன்று நிதிஷ்குமார் நல்லவராகப் படுகிறார். ஆனால், நாளை என்ன நடக்கும் என்று யார் அறிவார்? சீசரின் மனைவியாக இவரை ஜனதா தளம் விட்டு வைக் குமா? நம்பிக்கை வரவில்லை.

அண்ணல் அம்பேத்கர் சொன்னது நடக்காத வரை சீசரின் மனைவியை இந்திய அரசியலில் சந்திக்க வாய்ப்பே இல்லை. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் அரசியல் நிர்ணய சபை ஈடுபட்டிருந்தபோது அறி வார்ந்த உறுப்பினர்கள் கே.டி.ஷாவும், எச்.வி.காமத்தும், 'அமைச்சர்களாகப் பதவி ஏற்பதற்கு முன்பு சொத்துக் கணக்கை அறிவிக்கவேண்டும் என் பதைச் சட்டத்திலேயே இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்று பரிந்துரைத்தனர். அப்போது பதில் அளித்த அம்பேத்கர், 'அதிகார அத்துமீறலைத் தடுத்து நிறுத்த நான்கு காரியங்கள் நடக்க வேண்டும்’ என்றார்.

1. அமைச்சர் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு தன் சொத்து மதிப்பு முழுவதையும் வெளியிட வேண்டும்.

2. பதவியில் இருந்து விலகும் நாளில் தன்னுடைய, தன்னைச் சார்ந்தவர்களுடைய சொத்து மதிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.

3. சொத்து மதிப்பு அதிகரித்து இருந்தால், அதற்கான காரணங்களை விளக்க வேண்டும்.

4. தவறான முறையில் சேர்க்கப்பட்ட சொத்து பறிமுதல் செய்யப்பட்டு அரசிடம் ஒப்படைக் கப்படுவதோடு, தவறுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அம்பேத்கர் டிசம்பர் 31, 1948 அன்று இதைச் சொன்னார். இன்று வரை நடந்ததா?

மகாத்மா காந்திக்கு இன்றைய வாரிசு சோனியா காந்தி. அண்ணல் அம்பேத்கரின் வழித்தோன்றல் மாயாவதி. செப்புக்காசு இல்லாமல் செத்துப்போன ராம் மனோகர் லோகியாவுக்கு வாய்த்தவர்கள் முலாயமும் லாலுவும். பெரியாரின் பெயர் சொல்ல வந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்!

இந்த லட்சணத்தில் சீசரின் சந்தேகத்துக்கு இடம் இல்லாத மனைவியை எங்கே தேடிக் கண்டெடுப்பது? பாவம் இந்திய வாக்காளர்கள்!

No comments:

Post a Comment