ஏகப்பட்ட முன்னேற்பாடுகள், எட்டு மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-க்களின் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களின் பாதுகாப்பு, டி.ஜி.பி-யே நேரில் வந்து ஆய்வு... எனக் கடந்த ஒரு மாதமாக முன்னேற்பாடுகள் செய்தும்...மறுபடியும் ரணகளம்தான். வழக்கம்போலவே இந்த ஆண்டும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா பெரும் பதற்றத்தோடும், பலியோடும் நடந்து முடிந்து உள்ளது. இன்னும் பதற்றம் நீங்காமல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவே, ஒட்டுமொத்த மக்களும் திகிலில் உள்ளனர்!
பாதை மாறிய பயணம்!
அக்டோபர் 28, 29, 30 என மூன்று நாட்கள் நடக்கும் தேவர் குருபூஜையில், 30-ம் தேதி மட்டும் அரசு விழாவாக நடத்தப்படுகிறது. அன்றைய தினம்தான் பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்களும், முக்குலத்தோர் அமைப்புகளும் அஞ்சலி செலுத்த வருகின்றனர். பல தலைவர்களும் அஞ்சலி செலுத்தக் கிளம்பிய நேரத்தில்... அதாவது, காலை 10.30 மணிக்கு பரமக்குடி அருகேயுள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் சிவகுமார் என்ற வேன் டிரைவர், கல்லாலும் கட்டை யாலும் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி பரவ ஆரம்பித்தது.
விருதுநகர் மாவட்டம் டி.வேலங்குடியைச் சேர்ந்தவர் சிவகுமார். பார்த்திபனூரில் வேன் டிரைவராக இருக்கிறார். பக்கத்தில் உள்ள மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், பசும்பொன் கிராமத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிவகுமாரின் வேனை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். அதில், 15 பேர் பயணம் செய்தனர். போலீஸ் அனுமதித்த வழித்தடத்தில் இவர்கள் சென்றிருந்தால் சிக்கல் ஏற்பட்டு இருக்காது. ஆனால், தேவேந்திர மக்கள் அதிகம் வசிக்கும் பாம்புவிழுந்தான் கிராமம் வழியாக வேன் சென்று இருக்கிறது. ''கிராமத்தின் வழியே வேன் சென்றபோது கோஷம் போட்டபடியே சென்றுள்ளனர். ஆத்திரம் அடைந்த பாம்புவிழுந்தான் கிராம மக்கள், வேனின் மீது கற்களை எறிந்தபடி துரத்தி இருக்கின்றனர். ஓர் இடத்தில் வேனை வளைத்துத் திருப்ப முடியாமல் டிரைவர் திணறவே, வேனில் இருந்தவர்கள் இறங்கி ஓடிவிட்டனர். டிரைவர் சிவகுமார் மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டார். கற்களாளும் கட்டைகளாலும் அவரை அடித்தே கொன்று விட்டனர்'' என்கிறார்கள். இந்தத் தகவல் வெளியானதும், பரமக்குடி வட்டாரத்தை பதற்றம் சூழ்ந்தது!
கீழே விழுந்தவர்களை கல்லால் அடித்து...
மதியம் 1 மணி அளவில் 'பொன்னையாபுரம் அருகே, அஞ்சலி செலுத்திவிட்டு பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டனர்’ என்ற தக வல் பரவியது. பொன்னையாபுரம், தேவேந்திரகுல மக்கள் பெருவாரியாக வாழும் பகுதி. அதுவும் முதுகுளத்தூருக்குச் செல்லும்வழி என்றாலும், தேவர் குருபூஜை நடக்கும் நேரத்தில் அந்தச் சாலையை 'பிளாக்’ செய்துவிடுவார்கள். மீறி, யாரும் போய்விடக்கூடாது என்பதற்காக, அந்த சாலை பிரியும் அஞ்சுமுக்கு ரோட்டில் (இங்குதான் 2011-ல் இமானுவல் நினைவு தினத்தன்று, காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆறு தலித்துகள் பலியான கொடூரமும் நடந்தது!) ஏராளமான போலீஸாரைக் குவித்திருப்பார்கள்.
திருப்புவனம் அருகே உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் கண்ணன். கீழராங்கியத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இருவருக்கும் 23 வயதுதான் இருக்கும். கட்டட வேலை செய்து வந்தவர்கள். குரு பூஜை யில் அஞ்சலி செலுத்துவதற்காக, பைக்கில் வந்து இருக்கின்றனர். பொன்னையாபுரம் அருகே வந்ததும், ஒரு கும்பல் வழி மறித்துத் தாக்கி இருக்கிறது. கீழே விழுந்தவர்களை கற்களால் அடித்தே கொன்று விட்டனர். இருவரும் வந்த பைக்கை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்து இருக்கிறார்கள். அதற்குள் போலீஸ் வந்து சேர, வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது. பின்னர், ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் தலைமையில் போலீஸ் படை பொன்னையாபுரம் ஏரியாவுக்குச் சென்று 20 பேரைத் தூக்கி வந்தது.
ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்யராஜ் மற்றும் கார்த்திக். இவர்கள் டூ-வீலரில் பசும்பொன்னுக்கு வந்துகொண்டு இருந்தனர். படுவேகமாக சென்ற இவர்களின் டூ-வீலர், அபிராமம் அருகே சாலையில் கவிழ்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விஷயமும் வேறு மாதிரியாகப் பரவ, பசும்பொன்னில் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்த பல்வேறு தேவர் அமைப்புகளும் விரைவாக பரமக்குடி நோக்கிக் கிளம்ப ஆரம்பித்தன.
ஐந்து முனை சந்திப்பில் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தும் அல்லிநகரத்து இளைஞர்கள் எப்படி முதுகுளத்தூர் வழியாக பொன்னையாபுரம் பக்கம் போனார்கள் என்பது பற்றி காவல் துறையினரே முன்னுக்குப்பின் முரணாக சொல்கிறார்கள். பசும்பொன்னில் இருந்து திரும்பி வரும்போது, பாதைமாறி மாட்டிக்கொண்டனர் என்கிறார்கள் போலீஸார். போகும்போது சென்றார்கள் என்றால், போலீஸ்காவலை மீறிச் சென்றார்கள் என்று குற்றம் சாட்டுவார்கள் என்பதற்காகவே போலீஸார் மாற்றிச் சொல்கிறார்களாம்.
இதைத்தொடர்ந்து பரமக்குடியில் சாலை மறியல் ஆரம்பமானது. காரைக்குடி, இளையாங்குடி, திருப்புவனம், மானாமதுரை என தென் மாவட்டத்தில் பதற்றம் பற்றியது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி செம்மண்நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவக்குமார் கொல்லப்பட்டதன் எதிரொலியாக உணர்ச்சிவசப்பட்டனர். அருகில் உள்ள தலித் கிராமங்களான குழலிக்குளம், ஆலங்குளம் ஆகிய ஊர் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ராமர், கருப்பையா, முத்துமாரி, கருப்பன் ஆகியோர் வெட்டப்பட்டு சீரியஸான நிலையில் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளதால், அருப்புக்கோட்டை வட்டாரம் அலறிக்கிடக்கிறது!
மூவருக்கும் இறுதிச்சடங்கு!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் வியாழன் வரை இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பது போலீஸ் நமக்கு தந்த செய்தி. கொலையான மூன்று பேர் உடல்களையும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து விட்டனர்.
அங்கே, மூவேந்தர் முன்னணிக் கழக மாவட்டச் செயலாளர் தீயூர் கண்ணன் தலைமையில் திரண்டவர்கள், 'இறந்தவர்களது உடல்களைப் பார்க்க வேண்டும்’ என்று போலீஸுடன் மல்லுக்கு நின்றனர். அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கிருந்து கிளம்பி பெரியார் சிலைக்கு வந்தவர்கள், கடைகளை அடைக்கச்சொல்லி பிரச்னை செய்தனர். சற்று நேரத்தில், காரைக்குடியே ஸ்தம்பித்துப்போனது. 'காலை 8 மணிக்கு தேவர் சிலையில் கூடுவோம். உரிய நியாயம் கிடைக்காதவரை, கொலையானவர்களின் உடல்களை வாங்கக்கூடாது’ என்றும் தீர்மானித்துவிட்டுக் கலைந்தனர்.
மறுநாள் காலை, பி.டி.அரசகுமார் தலைமையில் தேவர் சிலை அருகே திரண்டவர்கள், அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாகக் கிளம்பினர். அவர்களை மறித்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி.ராமசுப்பிரமணி கெஞ்சிக் கூத்தாடினார். 'அவனுக செத்தா மட்டும் கலெக்டர் உடனே போய் டி.டி-யை நீட்டுறார். இவங்க என்ன அனாதைப் பயலுகளா? இவனுகளுக்கு நாங்க இருக் கோம். எங்களைப் போகவிடுங்க. இன்னைக்கி இதுக்கு ஒரு முடிவு தெரியாமப் போகமாட்டோம்’ என்று பி.டி.அரசகுமாரும் மற்றவர்களும் குரலை உயர்த்தினர். அதனால், முக்கியமான சிலரை மட்டும் மூன்று கார்களில் மருத்துவமனைக்குச் செல்ல அனு மதித்தனர்.
'கொலையான மூவரின் குடும்பங்களுக்கும் தலா ஐந்து லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்’ என்ற செய்தி மதியம் 3 மணிக்குத்தான் காரைக்குடியை எட்டியது. கொலையானதில் மாவட்ட தி.மு.க. செயலாளரான சேங்கை மாறனின் மைத்துனர் மகன் மலைக்கண்ணனும் ஒருவர் என்பதால், மற்ற இருவரது குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு காரைக்குடிக்கு வந்த சேங்கை மாறன், ''ரெண்டு பேருமே சத்தமாக்கூடப் பேச மாட்டானுங்களே. இவனுகளை எதுக்கு அடிச்சுக் கொன்னாங்கன்னு தெரியலை'' என்று கலங்கினார். மூன்று உடல்களும் மாலை 4 மணிக்கு காரைக்குடியை விட்டு 30-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்கள் பின்தொடர எடுத்துச் செல்லப்பட்டன. அதன்பிறகுதான் காரைக்குடியில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. இரவு 9.30 மணிக்கு மூவரது உடல்களும், அவர்களது சொந்த ஊர்களில் அடக்கம் செய்யப்பட்டன.
சுமோவை நிறுத்திய மஞ்சள் பனியன்!
மதுரை அருகில் உள்ள எஸ்.புளியங்குளத்தைச் சேர்ந்த 30 பேர் நான்கு கார்களில் தேவர் ஜெயந்திக்குப் போய்விட்டு 30-ம் தேதி இரவு 9 மணிக்கு, மதுரை ரிங் ரோடு வழியாக ஊருக்குத் திரும்பினர். மூன்று கார்கள் புளியங்குளத்துக்கு திரும்ப, ஒரு சுமோவில் வந்தவர்கள் மட்டும் கோரிப்பாளையம் தேவர் சிலைக்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். மற்ற கார்களில் இருந்த சிலரும் உடன் வருவதாக சொன்னதால், 21 பேரை அடைத்துக்கொண்டு கோரிப்பாளையம் நோக்கி பறந்திருக்கிறார்கள். சிந்தாமணி செக்-போஸ்ட் அருகே வந்தபோது, சாலைஓரமாக மஞ்சள் பனியன் அணிந்து நின்ற நான்கைந்து பேர், சுமோவை கைகாட்டி நிறுத்தி இருக்கின்றனர். சுமோ ஸ்லோ ஆனதுமே கற்களை வீசியிருக்கிறது அந்தக்கும்பல். காரை நிறுத்துவதற்குள் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளையும் சுமோவுக்குள் வீசி இருக்கிறார்கள்.
உள்ளே இருந்தவர்கள் சுதாரித்து இறங்குவதற்குள் அத்தனை பேரையும் பற்றிக்கொண்டு விட்டது தீயின் நாக்கு. அதை ஆனந்தமாய் பார்த்து ரசித்துவிட்டு, அவசரப்படாமல் புதருக்குள் இறங்கி தப்பியிருக்கிறது அந்தக் கும்பல். இந்தச் சம்பவத்தில் விஷ்ணுப்பிரியன், ஜெயபாண்டி, சுந்தரபாண்டி, வெற்றிவேல் ஆகிய நான்கு பேருக்கு 90 சதவிகித தீக்காயம்; மற்றவர்களுக்கு 40 சதவிகிதம் வரை காயம். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுமோ டிரைவர் செல்வத்திடம் பேசினோம். ''மஞ்ச பனியன் போட்டு இருந்ததால் நம்மாளுங்கன்னு நினைச்சு வண்டியை ஸ்லோ பண்ணுனேன். கற்களை வீசினதும் சுதாரிச்சு வண்டியைத் திருப்ப நினைச்சேன். அதுக்குள்ள பெட்ரோல் குண்டுகளை தூக்கி வண்டிக்குள் போட்டுட்டாங்க. தீப்பிடிச்சு எல்லாரும் அலறிட்டோம். எப்படித் தப்பிச்சோம்னே புரியலை'' என்றார் மிரட்சியுடன்.
கலவரத்தை தூண்டியது சாதித் தலைவரின் மகனா?
''தீக்காயம் பட்டதில் ஒருவர் 31-ம் தேதி இரவே இறந்து விட்டார். பிரச்னை பெரிதாகும் என்பதால் விஷயத்தை வெளியிடவில்லை'' என்று சொல்லும் போலீஸார், ''இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து விட்டோம். ஒரு சாதிக்கட்சித் தலைவரின் மகனின் கைங்கர்யம் இதில் இருக்கிறது. அதை இப்போதைக்கு வெளியிடப் போவது இல்லை. கிரானைட் அதிபர் பி.ஆர்.பி-க்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமான சமயத்தில் மதுரை பெருங்குடியில் இமானுவேல் மற்றும் அம் பேத்கர் சிலைகளை சேதப்படுத்தி கலவரத்தைத் தூண்டப்பார்த்தது ஒரு கும்பல். 'ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சில சமூகவிரோதிகளை பயன்படுத்திக்கொண்டனர் சிலர்’ என்று அப்போதே எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்தக் கும்பல்தான் இதையும் செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம்'' என்கிறார்கள்.
மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன், ''தீக்காயம் பட்டதில் மூணு பேர் சீரியஸா இருக்காங்க. ஒருவர் இறந்துட்டதா சொல்றது வதந்தி. குற்றவாளிகள் யாருன்னு கண்டுபிடிச்சாச்சு. இரண்டொரு நாளைக்குள் அரெஸ்ட் இருக்கும்'' என்கிறார். பலத்த தீக்காயம் பட்டவர்களுக்கு ஒரு லட்சமும் லேசான காயம் பட்டவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இதற்கிடையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப் பவர்களின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்பதாக உத்தரவாதம் அளிக்கக்கோரி புளியங்குளம் மக்கள் 1-ம் தேதி காலையில் பஸ் மறியல் நடத்தினர். சிகிச்சைக்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தபிறகே போராட்டத்தைக் கைவிட்டனர்.
பொதுவாகவே செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தென்மாவட்டத்தின் டென்ஷன் மாதங்களாக இருக்கின்றன. இருதரப்புக்கும் இது நல்லதல்ல. நிரந்தரத் தீர்வை நோக்கி இப்போதும் செல்லாவிட்டால், விபரீதங்கள்தான் தொடரும்!
No comments:
Post a Comment