Tuesday, November 27, 2012

எனது இந்தியா (கலையை அழிக்கும் கொடுமை!) - எஸ். ராமகிருஷ்ணன்....


அலங்காரமும் வசீகரமும் மாயமும் கொண்ட இந்த ஓவியங்களை யார் வரைந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அவற்றை வரைந்த ஓவியன் மகத்தானவன். இங்குள்ள குகைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் மிக அற்புதமானவை. குறிப்பாக, மாபெரும் புத்தர் சிலைகள். அவை, புத்தரின் அடர்ந்த மௌனமும் அழகும் ஒருங்கேகொண்டவை. கல்லில் கசியும் புன்னகையைக் காண வேண்டும் என்றால், இந்தச் சிற்பங்களை ஒரு முறை அவசியம் பாருங்கள்.  இந்தியக் கலையின் உச்சமே அஜந்தா. அது ஒரு கல்லில் வடிக்கப்பட்ட கனவு. பௌத்தக் கலையின் உன்னதம்.
 உலக அளவில் இதற்கு நிகரான சிற்பங்களை நாம் காண்பது அரிது. மேற்குலகின் சிற்பங்கள் யாவும் உடல் தோற்றத்துக்கு முக்கியத்துவம் தந்து, இயல்பான உருவத்தின் நரம்புகள் வரை சித்திரிப்பதில் தனித்துவம் பெற்றபோது, இந்திய சிற்ப மரபு மனிதனின் ஆன்மாவை முதன்மைப்படுத்தி உருவங்களை இயல்பான நிலையில் இருந்து உருமாற்றி, முத்திரைகள், பாவங்கள், குறியீடுகள், சயன நிலைகள் என்று கலையில் இருந்து ஞானத்தை நோக்கி நீள்வதாக அமைந்து இருக்கின்றன. அதன் மகத்தான சாட்சியே அஜந்தா குகைகள்.


அஜந்தா ஓவியங்களில் சிறப்பானதாகக் கருதப்படுபவை புத்தர் வாழ்வோடு தொடர்புடைய ஓவியங்கள். குறிப்பாக, வானுலகத் தேவதை புத்தரை வழிபட பூலோகம் இறங்கி வரும் ஓவியக் காட்சி, கலையின் உச்ச நிலை. இதில் காணப்படும் ஒரே இழுப்பில் வரையப்பட்ட கண்களும் புருவமும் உயிர்ப்புமிக்க கலை வெளிப்பாடு. சிபிச் சக்கரவர்த்தி, புறாவுக்கு ஈடாக தனது சதையை அறுத்துத் தரும் ஓவியமும் அற்புதமான ஒன்றே. நடனமாடும் பெண்களும், யானைகளின் அழகும், தாமரைப் பூக்களின் வசீகரமும், அன்னங்களும் மயில்களும் இணைந்த வளைவுகள் என இந்த ஓவியங்கள் கண்கொள்ளாக் காட்சிகள்.

எல்லோராவின் குடைவரைக் கோயில்கள் ஒளரங்கபாத் நகரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சஹ்யாத்திரி மலைத் தொடரில் தெற்கு, வடக்காக அமைந்துள்ள இந்தக் குகைக் கோயில்கள் புத்த மதக் குகைகள், இந்து மதக் குகைகள், சமணர்களின் குகைகள் என்று மூன்று வகையாகக் காணப்படுகின்றன.

எல்லோராவின் 34 குடைவரைக் கோயில்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று முதல் 12 வரையிலான குகைகள் பௌத்தர்களுக்கு உரியவை. 29 வரையிலான குகைகள் இந்துக்களுக்கு உரியவை. எஞ்சியவை சமணர்களுக்கு உரியவை.


தென்கோடியில் பௌத்தக் குகைகள் அமைந்​துள்ளன. அரை வட்டப் பாதையின் நடுவில் இந்து மதக் குகைகளும், அதன் பின்னர் வடக்கே சமணக் குகைகளும் காணப்படுகின்றன.

பௌத்த குடைவரைக் கோயில்கள் பிரமாண்ட​மான சிற்ப நுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 10 அடி மற்றும் 15 அடி உயரத்துக்கு புத்தர் சிலைகள் இங்கே இருக்கின்றன. இங்குள்ள கைலாசநாதர் கோயில் இந்தியச் சிற்பக்கலையின் மிகச் சிறந்த சாதனை. ஒற்றைக் கல்லில் செதுக்கப்​பட்ட உலகிலேயே மிகப் பெரிய கோயில் இதுவே. ஒரு பெரும்பாறை உடைக்கப்பட்டு ஒரு பக்கம் கோயிலாகவும் அதன் வெளிப்புறம் பிரகாரமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அஜந்தா குகை ஓவியங்களின் சாயலில் அமைந்தது தமிழகத்தில் உள்ள சித்தன்னவாசல். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்தக் குடைவரை ஓவியங்கள், சமண ஓவிய மரபைச் சார்ந்தவை. இவை, கி.பி. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கின்றனர். சித்தன்னவாசல் ஓவியங்களில் காணப்படும் அரசன் - அரசி, எருமைகள் நிறைந்த தாமரைக் குளம், மீன்கள், வாத்துகள் போன்றவை ஓவிய நுட்பத்தின் சான்றாகக் காணப்படுகின்றன. அஜந்தா, எல்லோராவின் பாணியில் அமைந்தவை சோழர் கால ஓவியங்கள். இந்த ஓவியங்கள் பிரஸ்கோ வகையைச் சேர்ந்தவை. இவை, தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் வரையப்பட்டு இருக்கின்றன. தஞ்சை ஓவியங்களை உற்று நோக்கும்போது அஜந்தா ஓவியங்களின் முகத்தோற்றம் போலவே இருப்பதை உணர முடிகிறது.

அஜந்தா போலவே இந்தியக் கலைச் சிறப்பின் இன்னொரு சாதனையாக, தமிழகத்தில் உள்ள மாமல்லபுரச் சிற்பங்களைக் குறிப்பிட வேண்டும். மாமல்லபுரக் கலைத் தொகுதியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் ரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவை தவிர, புடைப்புச் சிற்பத்தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகு மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். இங்குள்ள பஞ்சபாண்டவ ரதங்களை முதலாம் நரசிம்மவர்மன் கட்டியதாகவும் மற்றவை அவனுடைய பேரன் பரமேஸ்வரவர்மனும் மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டியதாகவும் சரித்திர அறிஞர்கள் கூறுகின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் இந்தியாவிலேயே வேறு எங்கும் காண முடியாதவை. குறிப்பாக, அர்ச்சுனன் தபசு சிற்பத் தொகுதி சுமார் 30 மீட்டர் உயரமும் சுமார் 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், 150-க்கும் மேற்பட்ட உருவங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தச் சிற்பத் தொகுதியில் உடல் ஒடுங்கிப்போய் எலும்பும் நரம்பும் தெரிய தவக்கோலத்தில் ஒற்றைக்காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்கிறான் அர்ச்சுனன். கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றிலும் பூத கணங்கள். இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே ஓடிவரும் கங்கை ஆறு. இதன் பாதை ஓரத்தில் காணப்படும் நாகர்கள். காத்திருக்கும் சூரியன், சந்திரன், தேவர்கள், நாகர்கள், கின்னரர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள். அதன் ஒரு பக்கம் ஒரு திருமால் கோயில். அதன் முன் அமர்ந்திருக்கும் முனிவர்கள், யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப்பறவை, உடும்பு, யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது என நுட்பமாகக் காட்சிகள் செதுக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிற்பத் தொகுதி குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து பேராசிரியர் சா.பாலுசாமி, 'அர்ச்சுனன் தபசு: மாமல்லபுரம் சிற்பம்’ என்ற அற்புதமான புத்தகத்தை எழுதி இருக்கிறார். தமிழகக் கோயில் கலைகளில் ஆவுடையார் கோயில் சிற்பம் மற்றும் ஓவியம், கழுகுமலைச் சிற்பங்கள், மதுரையைச் சுற்றிய எட்டு சமணக் குன்றுகளில் காணப்படும் சமணச் சிற்பங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தாடிக்கொம்பு, மதுரை போன்ற கோயில்களில் காணப்படும் அற்புதமான சிற்பங்கள், பனைமலை, காஞ்சிக் கைலாசநாதர் கோயில், திருப்பருத்திக்குன்றம், திருவாரூர் கோயில், சிதம்பரம் கோயில், கும்பகோணம், தாராசுரம், பட்டீஸ்வரம், திருமங்கலக்குடி, தஞ்சை, அழகர்கோவில், திருவலஞ்சுழி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் காணப்படும் கலைப் படைப்புகள் அதிஅற்புதமானவை.

இந்தியாவின் கலை மரபு என்பது முப்பரிமாண முறையில் அமையாத ஒன்று. ஆகவே, இது வெறும் பழங்குடி மரபு என்ற எண்ணம் ஐரோப்பியர்களிடம் இருந்தது. அதை மாற்றி இந்தியக் கலைகளுக்கான தனித்துவத்தை உலகம் அறியச்செய்தவர் டாக்டர் ஆனந்த கே.குமாரசாமி.

கி.பி. 1877 ஆகஸ்ட் 22-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்தவர் ஆனந்த குமாரசாமி. இவரது தந்தை முத்துக்குமாரசாமி யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞராக இருந்தவர். பொதுச் சேவைக்காக 'சர்’ பட்டம் பெற்ற முதல் ஆசியர் இவரே. இவரது தாய், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எலிசபெத் கிளே. இவரது முழுப் பெயர் ஆனந்த கெண்டிஸ் குமாரசாமி. இந்திய விடுதலை இயக்க ஆதரவாளரான ஆனந்த குமாரசாமி, மகாகவி ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோரின் நெருங்கிய நண்பர். ஆனந்த குமாரசாமியின் இடைவிடாத எழுத்துப் பணி வழியாகத்தான் இந்தியக் கலைகள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றதோடு, அது குறித்த விழிப்பு உணர்வும் கலை விமர்சகர்களிடம் பரவியது.

ஆனந்த குமாரசுவாமி தேர்ந்த கலை விமர்சகர், ஆய்வாளர். இவர், கீழை தேசத்துக் கலைகளையும் பண்பாட்டையும் மட்டுமின்றி மேலை நாடுகளின் பண்பாட்டையும் கலைகளையும் அறிந்து இருந்தவர். ஆங்கிலம், பிரெஞ்ச், சமஸ்கிருதம், தமிழ், லத்தீன், சிங்களம், இத்தாலி, பாலி, பாரசீகம், கிரேக்கம் உள்ளிட்ட 14 மொழிகளிலும் புலமைகொண்டு இருந்தார்.

இந்தியக் கலைகளை, பௌத்தம் எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப் பற்றி ஆனந்த குமாரசாமி விரிவாக ஆராய்ச்சி செய்து 'புத்தர் வடிவத்தின் தோற்றுவாய்’ என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். அதுபோலவே, இவரது 'சிவனின் நடனம்’ என்ற புத்தகத்தில் நடராஜர் சிற்பத்தின் பின்புள்ள தத்துவத்தை சைவ நெறிகளோடு ஒப்பிட்டு அழகாக விளக்கி இருக்கிறார். மேலை நாட்டில் கலைஞன் என்பவன் ஒரு தனிமனிதன். அவனது கற்பனைகள் உணர்ச்சிகளுக்கு ஏற்ப படைப்புகளை உருவாக்குவான். ஆனால், இந்தியாவில் ஒரு சிற்பியோ, ஓவியனோ தனி நபர் அல்ல. அவன் ஒரு மரபின் தொடர்ச்சி. ஓர் இனத்​தின் அடையாளம். ஆகவே, அவன் தனது படைப்பை உருவாக்குவதில் சமூகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒருவர் இந்தியக் கலைப் படைப்புகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவருக்கு இந்தியப் பண்பாடு முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை வெறும் புறத்தோற்றமாகக் கண்டு கடந்து போய்விட நேரிடும். தாமரை மலர் மீது புத்தர் சிற்பத்தைக் காண்பவன், இது எப்படி சாத்தியம்? என்று யோசித்தால் அது முட்டாள்தனம். தாமரை மலர் என்பது ஒரு குறியீடு. புத்தரின் கை விரல்களில் உள்ள முத்திரை, முகபாவம், அமர்ந்த நிலை ஒவ்வொன்றுக்கும் ஆழமான அர்த்தங்கள் இருக்கின்றன. இந்தியர்களுக்கு தங்களுடைய கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் குறித்து இன்னமும் முறையாகத் தெரியவில்லை. ஆங்கில வழிக் கல்வி மேற்குலகின் ரசனையை நமதாக்கிவிட்ட காரணத்தால் நாம் இந்தியச் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை வெறும் பொம்மைகளைப் போல பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் மட்டுமே பழகி இருக்கிறோம். இவை, நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் அற்புதங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதோடு, மலைகள் குவாரிகளாக மாற்றப்பட்டு வருவதால், அங்குள்ள குகைக் கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் அழிக்கப்பட்டு வருவது தடுக்கப்பட வேண்டும். அதுபோலவே, கோயில்களில் காணப்படும் சிறப்பான ஓவியங்கள் அதன் முக்கியத்துவம் அறியாமல் சிதைக்கப்படுவதும், வண்ணம் பூசி அழிக்கப்படுவதும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியக் கலைக் கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பண்டிகைகள், நுண்கலைக் கூடங்கள், அகழ்வாய்வு இடங்கள், இயற்கை வாழிடங்கள், தொல்பழங்காலம் முதல் இப்போது வரை எங்கே என்ன சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்ற அத்தனை தகவல்களையும் ஒன்று திரட்டி பொதுமக்கள் பயன்படும் விதத்தில் ஒரு கல்சுரல் அட்லஸ் வெளியிட்டுள்ளது ஒடிசா மாநிலம். இதை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன். இதுபோன்ற கல்சுரல் அட்லஸ், தமிழ்நாட்டுக்கு உடனடித் தேவை என்றே உணர்கிறேன். வெளிநாட்டவர் நமது கலைச் செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்றது ஒரு பக்கம் என்றால், நமது அறியாமை மற்றும் சுயலாபங்களுக்கான வேட்கை, இந்தியக் கலைகளின் உன்னதங்களை கண் முன்னே சிதையவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது வருத்தப்பட வேண்டிய உண்மை.

No comments:

Post a Comment