Wednesday, November 21, 2012

தமிழர்களை வந்தேறிகள் என கடுமையாக சாடிய மும்பை டைகர் பால்தாக்கரே


ஹிட்லரை நான் ஆராதிக்கிறேன். அவருக்கும் எனக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. அவரைப்போல நல்லதும் கெட்டதும் கலந்த கலவை நான். இரக்க மனமும் அதேவேளையில் இரும்புக் கரங்களோடு இந்தியாவை ஆள அப்படி ஒரு சர்வாதிகாரி நிச்சயம் தேவை என்பதே என் எண்ணம்’- இப்படி, இடியாகப் பேசியவர் மறைந்த பால் தாக்கரே! 
மஹாராஷ்டிரத்தை மையமாகக்கொண்டு தேசிய அரசியலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய பால் தாக்கரே, அடிப்படையில் ஒரு கார்டூனிஸ்ட். மும்பையிலுள்ள் 'ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாகப் பணிபுரிந்தபோதுதான் 'மஹாராஷ்​டிரா... மராட்டியர்களுக்கே’ என்ற அனல் இவரது மனதில் அழுத்தமாகக் கொழுந்துவிட ஆரம்பித்தது. மும்பையில் எண்ணிக்கை அடிப்படையிலும் ஆளுமையிலும் பெருகிவந்த மராட்டி அல்லாத பிற மாநிலத்தவர்களுக்கு எதிரான போராட்டத்துக்காக தனது 'மர்மிக்’ என்ற கார்டூன் வார இதழைப் பயன்படுத்தினார். மஹாராஷ்டிரா மீது பால் தாக்கரே இப்படி வெறித்தனமான நேசம் கொண்டிருந்ததில் ஆச்சர்யம் இல்லை. காரணம், மராட்டி மொழி பேசும் மக்களுக்காக மஹாராஷ்டிரா மாநிலம் தனி ஆளுமையுடன் உருவாக வேண்டும் என்று போராடிய கேசவ் சீதாராம் தாக்கரேயின் மகன்தான் பால் தாக்கரே.
பால் தாக்கரேயின் வீரியம் வேகமெடுக்க ஆரம்பித்தது 1966-ல் 'சிவசேனா’வை ஆரம்பித்த பிறகுதான். அதில் இருந்து, எதையுமே அதிரடியாக அணுகுவதையே தன் அடையாளமாக்கிக் கொண்டார். மஹாராஷ்​டிராவில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் குஜராத்தி மற்றும் தென்இந்தியர்களின் முயற்சிகளை ஒடுக்கி, மராட்டியர்களுக்கு அதைப் பெற்றுத்தருவதில் சிவசேனா அதீத முக்கியத்துவம் காட்டியது. காரணம், பொருளாதார நிலையில் நம் மக்கள் முன்னேறினால்தான், எல்லா வகையிலும் பிற இனத்தவரை அடக்கியாள முடியும் என்பது அவருடைய எண்ணம். இந்த வகையில், கம்யூனிஸ்ட்களுக்கு எதிரியாகிப்போன சிவசேனா 'இந்து தேசியவாதம்’ என்ற புள்ளியில் பி.ஜே.பி-​யுடன் கைகோத்ததன் மூலம் வட இந்தியா முழுக்கவே தன் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இந்து தேசியவாதத்தின் தளபதியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட தாக்கரே, இஸ்லாமியத்துக்கு எதிராகத் தொடர்ந்து உறுமிக்கொண்டே இருந்தார். இது, மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட இந்திய சட்டஒழுங்கு நிலையை மிகவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளியது.
'இஸ்லாமியர்களின் தற்கொலைத் தாக்குதல் படைக்கு எதிராக, நாமும் தற்கொலை தாக்குதல் படை ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்று இந்துக்களை நோக்கி அவர் அழைப்பு விடுத்தபோது அதிர்ந்து அடங்கியது நாடு. ஆனால் தாக்கரே, 'இந்தியாவில் முஸ்லிம்கள் புற்றுநோயைப் போல் பெருகி பரவி​வருகிறார்கள். அதனால், அதற்கான தீவிரமான சிகிச்சையைக் கொடுத்து அந்த நோயை அப்புறப்படுத்தியே ஆக «​வண்டும். மும்பை தொடர் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமான இஸ்லாமிய அடிப்படைவாதிகளை புற்றுநோய் என்று சாடாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்? முஸ்லிம்களிடம் இருந்து நாட்டைக் காக்கும் இந்தப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் இந்து தீரர்களுக்கு காவல்துறை தனது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என்று அசராமல் அறிக்கை விடுத்தார். மும்பை குண்டுவெடிப்பு விவகாரங்களில் தாவூத் இப்ராஹிமுக்கு எதிராகக் கடும் நெஞ்சுரத்தோடு தாக்கரேவும் அவரது ஆதர​வாளர்களும் சவால் விடுத்தபோது, சிவ சேனாவின் மரியாதை மஹாராஷ்டிரா மக்க​ளின் மனதில் உச்சத்துக்குப் போனது.
1995-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து மஹா​ராஷ்டிரா மாநில ஆட்சியைப் பிடித்தது சிவசேனா. மனோகர் ஜோஷியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு, அந்த நாற்காலிக்குப் பின்புறத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த தாக்கரே, திரைமறைவு ஆட்சியைத் திறம்பட செய்தார். ஆளும்கட்சி என்ற பேட்ஜ் அணிந்திருந்ததால், சிவசேனாவின் சிறுத்தைகளான சிவ சைனிக்களின் அதிரடித்தனங்களுக்கு அளவில்லாமல் போனது. 'கலாசாரச் சீரழிவைத் தடுக்கிறோம்’ என்ற பெயரில் காதலர் தினத்தன்று பூங்காக்களில் இருந்த ஜோடிகளைப் புரட்டியெடுக்க ஆரம்பித்ததில் தொடங்கி இவர்களின் கைங்கர்யங்கள் மனித உரிமைகளையே கேள்விக்குறி ஆக்கியது. இந்த வகையில் மராட்டி மக்களின் அதிருப்தியையும் சாபங்களையும் சேர்த்து சம்பாதித்துக் கொண்டது சிவசேனா.
இந்த நேரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சை உதிர்த்ததால் தேர்தல் கமிஷ​னின் பரிந்துரையின் பேரில், 'ஆறு ஆண்டுகள் ஓட்டளிக்கவும், தேர்தலில் பங்கேற்கவும் தடை’ என்ற தீர்ப்புக்கு தாக்கரே ஆளானார்.
இது சிவசேனாவுக்கு பெரும் சறுக்​கலைத் தேடித் தந்தது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் 'சிவசேனா மராட்டி ஏழைகளின் பங்காளன், இந்துக்களின் பாதுகாவலன்’ என்று அறிக்கை விட்டும், ஊர்வலம் நடத்தியும் தனது இருப்பைத் தொடர்ந்து காட்டிக்கொண்டே இருந்​தார் தாக்கரே. போதாக்குறைக்கு சிவசைனிக்களோ முன்னினும் அதீத மூர்க்கத்தனத்துடன் ஒவ்வொரு போராட்​டத்தையும் முன்னெடுத்தனர். குறிப்​பாக, மராட்டியல்லாத சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோர் சிவசேனாவின் தொடர் தாக்குதலுக்கு இலக்கானார்கள். கிரிக்கெட் கிரவுண்டுகள் கொத்திக் குதறப்பட்டன. மஹாராஷ்டிராவில் தங்கள் மீதான பயம் தொடர்ந்து தக்கவைக்கப்படுவதன் மூலமே அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்று உறுதியாக நம்பியது சிவசேனா. அது சில நிலைகளில் கைகொடுக்கவும் செய்தது. மும்பை உள்ளிட்ட மஹாராஷ்டிராவின் பல பகுதிகளில் இந்து-முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு தாக்கரேவும், சிவசேனாவும் தூண்டுகோள்களாகச் சுட்டிக்காட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்தன. சிவசேனாவின் அடக்குமுறைகளுக்கு மும்பைவாழ் பிற இனத்தவர் அவ்வப்போது பதிலடி கொடுக்கவும் தவறவில்லை.
ஆனால், 'வந்தேறிகள்’ என்று மும்பை வாழ் தமிழர்களை தாக்கரே கடுமையாகத் தாக்கியபோது சினம்கொள்ளாமல் வழக்கம்​போல் பொறுத்தாண்டது தமிழினம்.
'பொதுவாழ்வில் கொள்கைப்பிடிப்பு. ஆனால், தனிவாழ்வில் சமரசம்’ என்ற குணத்தின் மூலம் தானும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான் என்பதை அவ்வப்போது நிரூபிப்பார் தாக்கரே.
இதற்கு நச் உதாரணம், இஸ்லாமியர்​களைப் புற்றுநோய் என்று சாடிய இவருக்கு, ஆஸ்தான மருத்துவராக இருந்தவர் ஜலீல் பார்கர் என்ற முஸ்லிம். இது பற்றிக் கேட்டபோது,  'நான் முஸ்லிம்களின் எதிரி இல்லை. இந்த நாட்டில் வாழ்ந்து​கொண்டு, இந்த நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கும் முஸ்லிம்களைத்தான் துரோகியாகக் கருதுகிறேன்’ என்று விளக்கம் கொடுத்தார்.
இதுபோன்ற சமரசப் பதில்கள் சமயத்​துக்கு ஏற்ப வெளியாகும்.
நள்ளிரவு பார்ட்டிகள், பஃப் கலா​சாரம் போன்றவற்றுக்கு எதிராக வெகுண்டெழ​வைத்தவரே தாக்கரேதான். ஆனால், 2006-ம் ஆண்டு காதலர் தினத்தன்று சிவசேனாவின் தொண்டர்களால் இளம்பெண்கள் வன்மையாகத் தாக்கப்பட்டது பெரும் பிரச்னையாகத் தலையெடுத்தபோது ''பெண்களைத் தாக்குவது கோழைத்​தனம். எந்தச் சூழ்நிலையிலும் பெண்களைத் தலைகுனிய வைக்கவோ, இம்சிக்கவோ கூடாது என சிவசேனாவின் சிவ சைனிக்​களுக்கு நான் அழுத்தமாக அறிவுரை செய்திருக்கிறேன்’ என்று திடீர் அமைதிக்கொடி காட்டி​னார். 'இந்து இதயங்களின் பேரரசர்’ என்று சிவ சைனிக்களால் மிகப்பிரம்மாண்டமாக தாக்கரே உருவகப்படுத்தப்பட்டாலும், அவரது கண்களுக்கு முன்னாடியே சிவ சேனாவில் பங்காளிச் சண்டை நடந்தது பெரும் கேலிக் கூத்து. சிவசேனாவில் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே ஒரு காலகட்டத்தில் மிக வலிமை உள்ளவராக இருந்தார். இந்த நிலையில் தாக்கரேவுக்கு அடுத்து சிவசேனாவின் முக்கிய நிலைக்கு அவரது மகன் உத்தவ் தாக்கரே நகர்த்தப்பட்டபோது, ராஜ் தாக்கரேவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையில் அதிகாரப் போட்டி வளர்ந்து, சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தப் பிரச்னையால் ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து விலகி, தன் ஆதரவாளர்களுடன் 'மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா’ என்ற புதிய கட்சியை உருவாக்கினார். இது, சிவசேனாவை வெகுவாகப் பலவீனப்படுத்தி, பால் தாக்கரேவையும் தடுமாற வைத்தது.
'டைகர்’ என்று சிவ சைனிக்களால் கொண்டாடப்பட்ட தாக்கரே முதுமைக்கும் நோய்க்கும் ஆளானார். கடந்த சில வருடங்களாக நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் சிரமப்பட்டு வந்தார். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தாலும்கூட கடந்த 17-ம் தேதி பிற்பகலில் அவர் உடல் நிலை மோசமான கட்டத்தை எட்டியது. மும்பையில் உள்ள அவரது 'மாதோஸ்ரீ’ இல்லத்தின் முன் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான சிவசேனா தொண்டர்களிடம், 'மூன்று மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டும் அது பலன் அளிக்காமல் 3:30-க்கு அவர் உயிர் பிரிந்து விட்டது’ என்று குரலில் வருத்தம் கொப்பளிக்க அறிவித்தார் அவரது ஆஸ்தான டாக்டர் ஜலீல்.
'தாக்கரேவின் இழப்பு இந்துக்களின் பாதுகாப்புக்குப் பேரிழப்பு’ என்று இந்துத்வ அமைப்புகளில் இருந்து வருத்த அறிக்கைகள் வந்த வேளையில் 'சிவசேனாவைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார் ராஜ் தாக்கரே’ என்று, சிவ சைனிக்கள் சிலர் திரியைக் கொளுத்திப் போட்டு இருக்கிறார்கள். இது போதாதென்று 'தாக்கரேவின் மரணத்தில் மர்மம் ஏதும் உண்டா?’ என்று சிலரும் போகிற போக்கில் கிளப்பி விடுவது அந்த அதிரடி மனிதரின் மரணத்தையும் பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
நாயகன் படத்தில் வரும் இறுதிக் கேள்விதான் இப்போதும் எழுகிறது..
''பால் தாக்கரே... நல்லவரா, கெட்டவரா?'' ஆனால், இந்தக் கட்டுரையின் முதல் பாராவில் அவரே பதில் சொல்லி விட்டார்.

No comments:

Post a Comment