Monday, November 26, 2012

பெங்களூருவில் 'பம்மிய' பன்னீர்! தென் மாநில முதல்வர்கள் மாநாடு டெலிகாஸ்ட்


த்திய அரசு துரோகம் இழைக்கிறது... பாராமுகம் காட்டுகிறது’ எனும் மாநில அரசுகளின் முணுமுணுப்பைத் தவிர்ப்பதற்காகவே, இந்தியா முழுக்க ம‌ண்டல அளவில், மாநில மாநாடுகள் நடக் கின்றன. கடந்த வாரம், பெங்களூருவில் நடந்த தென்மாநில முதல்வர்களின் மாநாட் டில், தமிழக அமைச்சர்களின் அளவு கடந்த பவ்யத்தைப் பார்த்து, மற்ற மாநிலத் தலைகள் மிரண்டதுதான் ஸ்பெஷல். 
கடந்த 16-ம் தேதி, பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் நடந்த 25-வது தென்மாநில முதல்வர்களின் மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமை வகித்தார். ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவும் கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் பங்கேற் கவில்லை.
பெங்களூருவில் 'பம்மிய' பன்னீர்! தென் மாநில முதல்வர்கள் மாநாடு டெலிகாஸ்ட்
தமிழக முதல்வரின் சார்பாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் கேரள முதல்வரின் சார்பாக நிதிஅமைச்சர் கே.மணியும் வ‌ந்திருந்தனர். மேலும் ஐந்து மாநிலங்களின் தலைமைச் செயலக அதி காரிகளும் பல்வேறு துறைகள் சார்ந்த அதி காரிகளும் கலந்து கொண்டனர்.  
'மாநாட்டு அரங்கத்தின் உள்ளே என்ன நடந்தது?’ என்று வெளியே வந்த தமிழ் அதிகாரியிடம் கேட்டோம்.
''காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தோடு மோதிக்​கொண்டு இருந்தாலும் ஓ.பன்னீர் செல்வமும், ஜெகதீஷ் ஷெட்டரும் புன்னகை பூக்க, நட்பு பாராட்டினர். அதேபோல, கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட்டணி அமைத்து புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்ததும், அ.தி.மு.க-வைக் கழற்றி விட்ட என்.ரங்கசாமிக்கு, பன்னீர் செல்வத்துக்குப் பக்கத்தில்தான் நாற்காலி. முதலில் தயக்கத்துடன் பேசியவர்கள், பிறகு 'நல்ல’ நட்பு பாராட்டினர். நத்தம் விஸ்வநாதனும் அனைவருடனும் சகஜமாகப் பேசினார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்து அனுப்பிய கடிதத்தை ஓ.பன்னீர் செல்வம் மிகுந்த பவ்யத்துடன் வாசித்ததை, மற்ற தலைவர்கள் அனைவரும் நமட்டுச் சிரிப்போடு கவனித்தனர். அந்தக் கடிதத்தில் வழக்கம்போலவே மத்திய அரசையும், அண்டை மாநிலங்களையும் ஜெயலலிதா ஒரு பிடி பிடித்திருந்தார். 'இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள், இன்னொரு பக்கம் ஆந்திரா, கேரளா மீனவர்களாலும் தொடர்ந்து தாக்கப்​படுகின்றனர். வலைகளையும் படகுகளையும் தாக்குகின்றனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் வருவது இல்லை; வந் தாலும் உடன்படுவது இல்லை. இதை, மத்திய அரசும் கண்டுகொள்வது இல்லை. கூடங்குளத்தின் மொத்த மின் உற்பத்தியையும் தமிழகத்துக்கே மத்திய அரசு தர வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை செயல்படுத்தாமல், மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. தமிழக நதிகளில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு மணல் கொண்டு போவதை ஒரு வரைமுறைக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று எட்டுப் பக்கக் கடிதத்தை மூச்சு விடாமல் வாசித்தார் ஓ.பன்னீர் செல்வம்.
அவரைத் தொடர்ந்து பேசிய புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, 'மாநிலங்களுக்கு இடையே தொழில் நிறுவனங்​களுக்கு சலுகைகள் வழ‌ங்குவதில் பெரிய போட்டி நிலவுகிறது. இதனால், தொழில் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு வரும்போது, மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பேரம் பேசுகின்றன. அதனால், மத்திய அரசின் வழி காட்டுதலுடன் சீரான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல, அண்டை மாநிலங்களில் இருந்து எங்களுக்குக் கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கலையும் தீர்க்க வேண்டும்’ என்று சுருக்கமாகப் பேசினார். ஆந்திர, கர்நாடக முதல்வர்கள், 'நக்சலைட்டுகளை ஒடுக்குவதில் அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும் ஒரே சீரான வரியை அமலுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்'' என்றார் அந்த அதிகாரி.
மாநாடு முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. மற்ற மாநில முதல்வர்களும், சுஷில்குமார் ஷிண்டேவும் நிருபர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு சடசடவெனப் பதில் அளித்தனர். காவிரி, ஒகேனக்கல், கூடங்குளம் உள்ளிட்ட எந்தக் கேள்விகளுக்கும் தமிழக அமைச்சர்கள் இருவரும், 'கருத்துக் கூற விரும்பவில்லை’ என்று சொல்லி விட்டனர். புதுவை முதல்வர் ரங்கசாமியும் வாயைத் திறக்கவில்லை.
வெளியே வந்த ஓ.பன்னீர் செல்வத்தையும், நத்தம் விஸ்வநாதனையும் நிருபர்கள் சூழ்ந்துகொண்டு, ''கூடங்குளம் மின்சாரத்தை தமிழ்நாடு தராவிட்டால், கர் நாடகத்தின் 'கைகா’ மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்குத் தர மாட்டோம் என, கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் ஷோபா சொல்லி இருக்கிறாரே?'' என்று கொக்கி போட்டனர். ''அதெல்லாம் ஒண்ணும் வேணாம் தம்பி'' என்று ஓ.பன்னீர் செல்வம் சொல்ல, நத்தம் விஸ்வநாதனும் அவர் பாணியில் நழுவினார். மீண்டும் மீண்டும் நிருபர்கள் கேள்வி கேட்டதும் அங்கே இருந்த கட்சிக்காரர் ஒருவர், ''உங்களுக்குப் பேட்டி கொடுத்தா, அவர் பதவி போய்விடும்'' என்று சத்தமாகச் சொன்னார். அதைக்கேட்டு ஒரு கணம் திடுக்கிட்டாலும், இருவரும் மீண்டும் புன்னகையுடன் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.
இந்த மாநாடு என்ன சாதித்ததோ தெரியவில்லை, அடுத்த மாநாடு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் நடக்க இருக்கிறதாம்!
 சிதம்பரத்துடன் தனிமை சந்திப்பு!
கடந்த செவ்வாய் கிழமை தென்மாநில முதல்வர்களின் நிதித் துறை மாநாடு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் பெங்களூருவில் நடந்தது. பலத்த பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடந்த இந்த மாநாட்டிலும் ஜெயலலிதாவும், உம்மன் சாண்டியும் கலந்து கொள்ளவில்லை.
மாநிலங்களுக்கு இடையிலான நிதி ஆதாரத்தைப் பெருக்கும் திட்டங்கள், வேலைவாய்ப்பு, ஐ.டி. நிறுவனங்களின் வருகை, பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் திட்டங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டது. தமிழக அரசு சார்பில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், இந்த முறை ரங்கசாமியுடன் வெகுஜாலியாகப் பேசியது மட்டுமின்றி ப.சிதம்பரத்துடனும் நல்ல நட்பு பாராட்டினார். மீட்டிங் முடிந்ததும் சிதம்பரத்தைத் தனிமையில் சந்தித்துப் பேசினாராம் ஓ.பி.எஸ்.

No comments:

Post a Comment