Tuesday, November 27, 2012

அருள் மழை


 
பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை "அப்பா" என்றும் "நீ" என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர்.
நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். இவருடைய சில அனுபவங்களை
முன்னால் பார்த்திருக்கிறோம். பெரியவா சதாராவில் முகாம். மஹாலிங்கம்
சதாராவில் போய் பெரியவாளை தர்சனம் பண்ணிவிட்டு அன்றுதான் திரும்பியிருந்தார்.  அவரைத் தேடிக்கொண்டு ஒரு நண்பர் வந்தார். முகத்தில் அப்படியொரு சோகம்.

"மஹாலிங்கம் ஸார்....எம்பிள்ளை மெட்ராஸ்ல படிச்சிண்டு இருக்கான்..
திடீர்னு நாலஞ்சு நாளா அவனைக் காணோம்! எல்லா எடத்லையும் விஜாரிச்சாச்சு!
ஒண்ணுமே தெரியலை.....நீங்கதான் பெரியவாளோட பரம பக்தராச்சே!....பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணறதை தவிர எனக்கு வேற கதி இல்லே....என்னை சதாராவுக்கு
அழைச்சிண்டு போறேளா?" கண்களில் கண்ணீர் மல்க கெஞ்சினார். மகாலிங்கத்திற்கோ
என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. அவர் மனைவி சொன்னாள் "பாவம்.....அழைச்சிண்டு போங்கோ! பிள்ளையைக் காணாம தவிக்கறார்" என்று பரிந்தாள்.
இருவரும் கிளம்பி சதாராவை அடைந்தபோது விடிகாலை மணி மூணு! பெரியவா தங்கியிருந்த இடத்துக்கு வந்தால்...........மஹாராஜபுரம் சந்தானம் மூன்று நாட்களாக
பெரியவா தர்சனத்துக்காக காத்திருக்கிறார் என்று தெரிய வந்தது! மணி விடிகாலை
நாலரை!

"என்ன மஹாலிங்கம்! சந்தானத்துக்கே இந்த நெலைமை...ன்னா...நாம எப்டி
பெரியவாளை தர்சனம் பண்ண முடியும்?" நண்பர் கவலைப் பட்டார்.

பெரியவா ஒரு சின்ன "டொக்கு" மாதிரி ரூமில் ஜன்னல் கதவைக்கூட சாத்திக்
கொண்டு இருந்தார்.

"ஏன் கவலைப்படறேள்? பெரியவா காருண்ய மூர்த்தி..........தன்னை
நம்பி வந்தவாளை கைவிட்டதா சரித்திரமே கெடையாது.........கதவு தெறக்கும்!
தர்சனம் கெடைக்கும்!" அடித்துச் சொன்னார் மஹாலிங்கம்.

சொன்ன மறு நிமிஷம்,பிரஹ்லாதனின் வார்த்தையை "சத்யம்" என்று நிருபிக்க
தூணைப் பிளந்துகொண்டு வெளியே வந்த நரசிம்ஹமூர்த்தி, இங்கே
"டொக்கு" ரூமில், சௌம்ய நாராயணனாக இருந்தாலும், பக்தானுக்ரகம்என்ற கல்யாண குணத்தை அவனால் விட முடியாதே! எனவே, "படக்"கென்று ஜன்னல் திறந்தது.......உள்ளே பெரியவா! மகாலிங்கத்தை சைகை காட்டி அழைத்தார்...........

நண்பர் கண்ணீர் வழிய " பெரியவா......எம்பிள்ளைய நாலஞ்சு
நாளா காணோம்........ஒரு தகவலும் இல்லே.....கொழந்தை க்ஷேமமா
திரும்பி வர அனுக்ரகம் பண்ணணும்......பெரியவா"
என்று கூறி, அவனுடைய போட்டோ ஒன்றையும்
காட்டினார். திருநயனங்கள் அதை
கருணையோடு பார்த்தன! கரங்களை
உயர்த்தி ஆசி
கூறினார். மஹாலிங்கம் இன்னும்
தெம்பாகிவிட்டார்! இருவரும்
நமஸ்கரித்துவிட்டு
கிளம்பினார்கள்.

"ஸார்......நீங்க திரும்ப
நெய்வேலிக்கே வந்துடுங்கோ!
பெரியவா பாத்துப்பா!
ஒங்க பிள்ளை நிச்சயம் திரும்ப
வந்துடுவான்..........கவலையே
படாதீங்கோ!
வந்ததும், மடத்துக்கு ஒரு தந்தி
அனுப்பிடலாம்" என்று ஆறுதலும்
நம்பிக்கையும் ஊட்டினார்.

அடுத்த ரெண்டு  நாட்களில் பையன்
திரும்ப வந்துவிட்டதாக
மடத்துக்கு தந்தி
போனது! பையன் பல ஊர்களுக்கு
சென்றுவிட்டு, கடைசியில்
மந்த்ராலயம்
போயிருக்கிறான். அங்கே
துங்கபத்ராவில்
குளிக்கும்போது அவன் மனஸில் ஒரு
குரல்......"நீ உடனே வீடு திரும்பு"
என்று சொன்னது. அது எப்போது? எந்த
விடிகாலையில் சதாராவில்
பெரியவா அவனுடைய போட்டோவை
கடாக்ஷித்தாரோ.......அப்போதுதான்!
"சஹாஸ்ராக்ஷ சஹாஸ்ரபாத்" என்று
வேதங்கள் ஸ்துதி பாடுவதும்
இவரைத்தானே?

அந்தப் பையன் பின்னாளில் மிகப்
பிரபலமான பாடகராக, நல்ல பக்தராக
திகழும்
நெய்வேலி சந்தானகோபாலன்தான்!

No comments:

Post a Comment