Thursday, November 15, 2012

காசு கொடுத்தால் லைசென்ஸ்? வெடித்த துப்பாக்கி சர்ச்சை


ன்முறை சற்று தூக்கலாகவே இருக்கும் நெல்லையில், துப்பாக்கி வைத்துக்​கொள்வதற்கான லைசென்ஸ் கொடுப்​பதில் மாநகரக் காவல் துறை காட்டிய தாராளம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது! 
இது குறித்து தமிழக முதல்வர் தொடங்கி லோக்​கல் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் புகார் கொடுத்து இருக்கிறார் ராகுல்காந்தி ரத்த தானக் கழகத்தின் தலைவரான பிரம்மா. அவரிடம் பேசினோம். ''நெல்லை அதிகமாகவே சென்சிடிவான நகரம். ஓசி பீடி கொடுக்கவில்லை என்பதுபோன்ற அல்ப காரணத்துக்கும் அரிவாளைத் தூக்குவார்கள். அப்படிப்பட்ட நகரில் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டவர்களுக்கு எல்லாம் தாராளமாகக் கொடுத்து உள்ளார்கள். நெல்லை நகரத்தில் மட்டும் 266 பேரிடம் துப்பாக்கிக்கு அனுமதி இருக்கிறது. இதில் ஒரு சிலர் பழைய ரவுடிகள். இன்னும் சிலர்கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்​பவர்கள். இவர்கள் கையில் துப்பாக்கி இருந்​தால், அப்பாவி மக்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு?
நான் இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில், நெல்லை மாநகரில் இருக்கும் எட்டு ஸ்டேஷன்களிலும், '2011 ஆகஸ்ட் முதல் 2012 ஆகஸ்ட் வரை எத்தனை பேருக்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டது?’ என்று கேட்​டேன். ஆறு ஸ்டேஷன்களில் மட்டுமே தகவல் கொடுத்தாங்க. அதில், ஏழு லைசென்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால், அப்போதைய போலீஸ் கமிஷனர் கருணாசாகர், 'ஆறு மாதங்களில் 27 புதிய லைசென்ஸ்களுக்கு அனுமதி கொடுத்தோம்’ என்றார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக தகவல் சொன்னார்கள். பாளையங்கோட்டை, மேலப்பாளையம் போலீஸ் லிமிட்டில் அதிக லைசென்ஸ் கொடுத்து உள்ளார்கள். அதனால் அந்த ஸ்டேஷனில் இருந்து மட்டும் தகவல் தரவில்லை. இது பற்றி முழுமையாக விசாரித்து, தகுதி இல்லாத நபர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமங்கள் அனைத்தையும் உடனே ரத்து செய்ய வேண்டும்'' என்றார் படபடப்புடன்.
இது பற்றி காவல் துறையினரிடம் பேசினோம். ''நெல்லை மாநகரில் திடீரென 266 பேருக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட்டதாக செய்தி பரப்பு​கிறார்கள். பல வருடங்களாகக் கவனமாகப் பரிசீலித்து, முறைப்படிதான் அவர்கள் லைசென்ஸ் வாங்கி உள்ளார்கள். கடந்த ஆண்டில் 27 பேருக்கு மட்டுமே புதிதாக உரிமம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஏழு பேர் காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள். அனைத்தும் முறையாகப் பரிசீலனை செய்தே கொடுக்கப்பட்டது'' என்கிறார்​கள் கூலாக.
இந்த சர்ச்சை குறித்து சி.பி.சி.ஐ.டி.. சார்பில் டி.எஸ்.பி-யான கருப்பசாமி தலைமையிலான குழுவினர் நெல்லையில் முகாமிட்டு விசா​ரணை நடத்தினார்கள். இவர்கள் தரும் அறிக்​கையின் அடிப்படையில், சர்ச்சைக்கு உரிய சிலருக்கான துப்பாக்கி உரிமங்களை ரத்து செய்ய டி.ஜி.பி. ராமானுஜம் முடிவு செய்து இருக்கிறாராம். பணம் வாங்கிக்கொண்டு லைசென்ஸ் கொடுத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை இருக்குமாம்.
இப்பவே முழிச்சுக்கிட்டா சரிதான்!

No comments:

Post a Comment