நிலக்கரி ஒதுக்கீடுகளில் ஊழல் நடந்ததாகக் கூறி கடந்த மழைக்காலக் கூட்டத் தொடர் முழுக்க நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தது பி.ஜே.பி. இப்போதும் சூடாகத் தொடங்கி இருக்கிறது குளிர்காலக் கூட்டத்தொடர்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டைக் கொண்டுவரும் மத் திய அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தார் மம்தா. ஆனால், இதை ஒரு நாடகமாகவே பார்க்கின்றன பிற கட்சிகள். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் வட்டாரங்களில், ''நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது சாதாரண விஷயம் அல்ல. டெல்லிக்கு வந்து மற்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்து மம்தா ஆதரவு திரட்டி இருக்க வேண்டும். கொல்கத்தாவில் உட்கார்ந்து கொண்டு தொலைபேசி வாயிலாகப் பேசுவதும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவோம் என்று சொல்வதுமே நாடகம்தான். இது, மத்திய அரசுக்கு எதிராகவோ அல்லது காங் கிரஸை எதிர்த்தோ அல்ல. மாநிலத்தில் சி.பி.எம். கட்சியை எதிர்த்து மம்தா செய்யும் வெத்து அரசியல்'' என்கிறார்கள்.
ஒரு கட்சியோ அல்லது உறுப்பினரோ மக்கள வையில் ஓர் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது, 50 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். அந்தத் தீர்மானத்தை சபாநாயகர் எடுக்கும்போது, 50 உறுப்பினர்களும் அவையில் இருக்க வேண்டும். ஆனால், மம்தாவிடம் இருப்பது 19 உறுப்பினர்கள். எஸ்.யு.சி.ஐ. கட்சியின் எம்.பி. ஒருவர் மட்டுமே மம்தாவுக்கு ஆதரவு. இடதுசாரிகளின் 26 எம்.பி-க்களும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கொடுத்தாலும், தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைதான். அதனால்தான் மம்தா, பி.ஜே.பி-யிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், மம்தாவின் கோரிக்கையை பி.ஜே.பி. சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், எப்படியும் மம்தா என்.டி.ஏ. கூட்டணிக்கு வரப்போவது இல்லை.
அதைவிட முக்கியமாக, இப்போது தேர்தலைச் சந்திக்கும் சூழலில் பி.ஜே.பி. இல்லை. ஊழல் விவகாரத்தில் கட்சித்தலைவர் நிதின் கட்கரி சிக்கித் தவிக்கிறார். மேலும் குஜராத், இமாச்சலப் பிரதேசத் தேர்தல்களில்தான் முழுக்கவனம் செலுத்தவும் கட்சி விரும்புகிறது. அதனால், மம்தாவின் கோரிக்கையைப் பயன்படுத்திக்கொள்ள பி.ஜே.பி. விரும்பவில்லை.
இப்போது, காங்கிரஸுக்கு சமாஜ்வாதிக் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதிக் கட்சிகளின் ஆதரவு பலமாக இருப்பதால், இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் எந்தப்பயனும் இல்லை என்கிறது பி.ஜே.பி. ஒரு முறை இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு தோல்வியைத் தழுவினால், அடுத்த ஆறு மாதங்களுக்கு மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது என்பதாலும் பெரும்பான்மையான எதிர்க் கட்சிகள் இந்தத் தீர்மானம் தேவைஇல்லை என்று நினைத்தன. இந்தப் பின்னணி எல்லாம் தெரிந்துதான் திரிணாமுல் காங்கிரஸின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்மொழிய அந்தக்கட்சிக்கு கூட்டத்தொடரின் முதல்நாளே சபாநாயகர் அனுமதி கொடுத்தார். அப்போது, பிஜூ ஜனதா தள உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தனர் என்றாலும், குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லாத காரணத்தால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மிஞ்சி இருப்பது எஃப்.டி.ஐ. விவகாரம்தான். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் உத்தரவு, மத்திய ஆட்சியின் நிர்வாக ரீதியான செயல் உத்தரவு. இந்த உத்தரவை எதிர்த்து பொதுவாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படுவது இல்லை என்கிறது மத்திய அரசு. ஆனால், அரசு ஏற்கெனவே கொடுத்த உத்தரவாதத்தை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். 'அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொண்ட பின்னரே அமலுக்குக் கொண்டு வருவோம்’ என்று, பிரணாப் முகர்ஜி முன்பே உத்தரவாதம் கொடுத்திருந்தார். அதை அரசு மீறியதாகச் சொல்லி, விதி எண் 184 பிரிவின்படி முக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி-யும் இடது சாரிகளும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தைக் கோருகின்றனர். சபாநாயகர் அனுமதி கொடுத்தால், விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆட்சிக்கு உள்ளே இருக்கும் தி.மு.க-வும், வெளியே இருந்து ஆதரவு கொடுக்கும் சமாஜ்வாதி போன்ற கட்சிகளும் அன்னிய முதலீட்டை எதிர்க்கின்றன.
ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு அனுமதி கொடுத்து, அதில் அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் எஃப்.டி.ஐ. விவகாரத்தை ரத்து செய்யவேண்டிய நிலைமை ஏற்படும். கூட்டணியில் இருக்கும் கட்சிகளே ஆட்சிக்கு எதிராக வாக்களித்து, அதன்மூலம் தீர்மானம் தோல்வி அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால்தான், இந்தத் தீர்மானத்துக்கு இறுதிவரை அனுமதி கொடுக்காமல் இருக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாகப் போராடுவார்கள். இறுதியில், குளிர் காலக் கூட்டத்தொடரும் பல ஒத்திவைப்புகளைச் சந்திக்கும். இதை எதிர்பார்த்துத்தான் மத்திய அரசும் தனக்கு விருப்பம் இல்லாத லோக்பால் மசோதா, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவையும் இப்போது கொண்டு வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் காரியம் சாதிக்க விரும்பினால் லோக்பால், பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்ற மசோதாக்களை அமல்படுத்திய பிறகு, எஃப்.டி.ஐ. போராட்டங்களை நடத்தலாம். ஆனால், உண்மையில் நாடாளுமன்றத்தில் நடப்பது மேட்ச் ஃபிக்ஸிங்தான். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் தெளிவான புரிந்துணர்வு உண்டு. அதுதான், இந்தக் குளிர் காலக் கூட்டத் தொடரிலும் எதிரொலிக்கும்!
No comments:
Post a Comment