Wednesday, November 7, 2012

மேயருக்கு எதிராக 42 அ.தி.மு.க. கவுன்சிலர்கள்! கோவை கோல்மால்!


நிலம் புயல் சென்னையைப் பதம்​பார்த்தது போல, கோவை மேயர் செ.ம.வேலுச்​சாமியைக் கவுன்சிலர்கள் உலுக்கி எடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர்! 
கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் செ.ம.வேலுச்சாமி. அ.தி.மு.க-வின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும் இவர்தான். இவரைப் பற்றி கோவை மாநகராட்சியில் உள்ள அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 42 பேரும் சேர்ந்து முதல்வருக்குப் புகார் ஒன்றை அனுப்பி இருப்பதுதான் சிக்கலுக்குக் காரணம்.
புகார் அனுப்பிய கவுன்சிலர்களில் சிலரை சந்தித்துப் பேசினோம். ''கவுன்சிலர்கள், அதிகாரிகள் யாரையுமே மேயர் மதிப்பது கிடையாது. ஓப்பன் மீட்டிங்கிலேயே, 'நீ எதுக்குப் பேசுற? வாயை மூடிட்டு உட்காரு’ன்னு ஒருமையில திட்டுகிறார். ஏதாவது அவசரம் என்றால்கூட, மேயரை போனில் எங்களால் தொடர்புகொள்ள முடியாது. எந்தக்கவுன்சிலருக்கும் அவரே நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசவும் மாட்டார். யாராவது அவசரம்னு போன் செய்தால், 'எனக்கு போன் பண்ணிப் பேசுற அளவுக்கு நீ பெரிய ஆளா​யிட்டியா?’னு திட்டுவார்.
'செம்மொழி மாநாடு நடந்தபோதும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்புத் திட்டத்திலும் 3,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுப்போம்’னு தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்தபோது அம்மா சொல்லி இருந்தாங்க. இதுவரை மேயர் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கலை. தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியோடு ரகசியத் தொடர்பு வெச்சுக்கிட்டு, தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகளை மூடி மறைக்கிறார். எல்லாவற்றையும் முதல்வருக்கு விரிவாக எழுதி, 42 கவுன்சிலர்களும் கையெழுத்துப் போட்டு மனு அனுப்பினோம். ஆனால், கார்டனில் இருக்கும் ஊழியர் ஒருவர் மூலம், எங்களோட மனு அம்மாவின் பார்வைக்கே போகாமல் தடுத்து ​விட்டார். அது மட்டும் இல்லாம, நாங்க அனுப்பின மனுவை எங்ககிட்டயே கொண்டுவந்து காட்டி, 'நீங்க யாருக்குப் புகார் அனுப்பினாலும், அது எனக்குத்தான் திரும்பி வரும். என்னை எதிர்த்து எவனும் இங்கே அரசியல் பண்ண முடியாது’ன்னு சவால் விடுகிறார்'' என்று சொல்கிறார்கள்.
கடந்த மாதம் நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார், 'மாநகராட்சியில் இருக்கும் மண்டலத் தலைவர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் எந்த மரி யாதையும் இல்லை. பிளான் அப்ரூவலுக்காக நாங்கள் நடையாக நடந்தாலும் வேலை நடக்காது. ஆனால், மாநகராட்சியில் இருக்கும் சில புரோக்கர்கள் ஒரு மணி நேரத்தில் அப்ரூவல் வாங்கி விடுகின்றனர். இந்தக்கொடுமையை எங்கே போய் சொல்வது?’ என்று பகிரங்கமாகவே கொந்தளித்தாராம்.
''மேயர் தனக்கு வேண்டப்பட்ட நான்கு கவுன்​சிலர்களை மட்டும் எப்பவும் கூடவே வைத்துள்ளார். அவங்க வார்டுக்கு மட்டும், கோடி கோடியா நிதி ஒதுக்கிட்டு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களைக் கூப்பிட்டு அம்மா கண்டிச்ச மாதிரி, கோவை மேயரைக் கூப்பிட்டுக் கண்டிக்​கலைன்னா, அடுத்த தேர்தலில் மக்களிடம் ஓட்டுக் கேட்டுப்போகவே முடியாது'' என்றும் வேதனையோடு சொன்​னார்கள்.
தி.மு.க. கவுன்சிலரான மீனா லோகு, '' 'ரோடு சரியில்லை... குடிநீர் பிரச்னை’னு பேப்பர்ல நியூஸ் வந்துடுச்சுன்னா மாநகராட்சிக் கூட்டத்தில், 'ரோடு சரியில்லைன்னு பேப்பர்ல போட்டீல்ல.. போய் அந்தப் பத்திரிகைகாரன்கிட்ட சொல்லு.. அவன் வந்து ரோடு போட்டுக் கொடுப்பான்’னு மேயர் பேசுகி​றார். எந்தப் பிரச் னையைப் பற்றி பேச வாய் திறந் தாலும், 'அதெல்லாம் எனக்குத் தெரி​யும் உட்காரு’னு மிரட்டி உட்கார வைக்கிறார். மாமன்றக் கூட்டத்தில் எதிர்த்துப் பேசும் கவுன்சிலர்களின் வார்டில் எந்த வேலையும் நடக்கக் கூடாதுன்னு அதிகாரிகளையும் மிரட்டி வைத்துள்ளார்...'' என்று ஆதங்கத் தைக் கொட்டினார்.
''வெள்ளலூர் என்ற இடத்தில் மாநகராட்சியின் குப்பை கொட்டும் இடம் இருக்கிறது. அங்கு சேரும் குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதற்காக ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களோ, குப்பை சேர்ந்ததும் அதைப் பிரிக்காமல் தீ வைத்து​ விடுகின்றனர். இதனால், அந்தப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி, தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினாலும் தீர்வு மட்டும் கிடைக்கவே இல்லை. காரணம், குப்பைகளை டெண் டர் எடுத்து இருப்பவர் மேயருக்கு வேண்டப்பட்டவர்'' என்று டென்ஷன் ஆகிறார்கள் ஏரியா மக்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வேண்டி மேயரை ஃபோனில் பலமுறை தொடர்பு கொண்டோம்.  நேரிலும் சென்று சந்திக்க முயன்றோம். அவருடைய உதவியாளர் கார்த்திக் நம்மிடம் கேள்விகளைப் பெற்றுக்கொண்டு, இவற்றுக்கு பதில் அளிக்க விரும் பினால் மட்டுமே மேயர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்றார். இந்த இதழ் அச்சேறும் வரை நமக்குப் பதில் வரவில்லை.

No comments:

Post a Comment