Thursday, November 1, 2012

பாகப் பிரிவினையில் சிக்கிய கிரீடம்! அடம்பிடிக்கும் ஆதீனம்... மல்லுக்கட்டும் நித்தி



நீதிமன்றத்துக்குப் பயந்து நித்தியை இளைய ஆதீனப் பொறுப்பில்இருந்து நீக்கிய அருணகிரி, நித்தி கொடுத்த பொருட்களை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவாரா என்பதுதான் சந்தேகமாக இருந்தது. அதையும், நீதிமன்றம் கண்​காணிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப் பட்டதால் உஷாரான அருணகிரி, எல்லாப் பொருட்​களையும் எடுத்துச் செல்லுமாறு நித்தி தரப்புக்கு உத் தரவு போட்டார். அதற்காகவே காத்திருந்ததுபோல நித்தியின் பிரதான சீடரும், மதுரை ஆதீனத்தைக் கவனித்து வந்தவருமான ரிஷி தயானந்தா, தன்னுடைய மனைவியுடன் மதுரைக்கு வந்தார்.

மதுரை ஆதீனத்துக்கு நித்தி சார்பில் வழங்கப்​பட்ட பரிசுப் பொருட்கள், நித்தியின் சீடர்கள் பயன்படுத்திய பொருட்கள் உட்பட மொத்தம் 54 பொருட்கள் அடங்கிய பட்டியலையும் கொண்டு வந்திருந்தனர். அதன் ஒரு நகலை ஆதீனத்திடமும், மற்றொரு நகலை விளக்குத்தூண் போலீஸாரிடமும் கொடுத்துவிட்டு, பொருட்களை எல்லாம் லாரியில் ஏற்ற ஆரம்பித்தனர். பத்திரிகை​யாளர்​களைப் படம் எடுக்கவிடாமல் தடுத்த போலீஸார், தங்கள் கேமராமேனைக் கொண்டு ஒவ்வொரு பொருளையும் வீடியோ எடுத்துக் ​கொண்டனர்.


கடந்த 25-ம் தேதி மாலை, மூன்று வாஷிங் மெஷின்கள், ஆறு பீரோக்கள், இரண்டு கட்டில்கள் (மெத்தையுடன்), எட்டு மெத்தைகள், காவிநிற மெத்தை ஒன்று எனப் பல்வேறு பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு பிடதிக்குப் புறப்பட்டனர் நித்தியின் சீடர்கள். அன்னதானத்துக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்​களையும் ஒரு மினி வேனில் ஏற்றிச்சென்று மளிகைக் கடையில் விற்​றனர் நித்தியின் சீடர்கள். இரவில், தங்க சிம்மாசனங்கள், தையல் மெஷின் உள்ளிட்ட சில பொருட்கள் கொண்டு​செல்லப்பட்டன. மறுநாள் காலை, மேலும் இரண்டு லாரிகளில் கியாஸ் அடுப்பு, ஏ.சி. மெஷின் உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஆனால், அந்தப் பட்டியலில் முதலில் இடம் பிடித்திருந்த தங்கக் கிரீ டம், செங்கோல் போன்றவற்றைக் கொடுக்க ஆதீனம் மறுத்து​விட்டார். இதனால், இரு தரப்பினர் இடையிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி, ஆதீனத்தின் வழக்கறிஞர் ராமமூர்த்தியிடம் கேட்டபோது, 'கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி, அருணகிரிநாதரின் வாழ்நாள் சாதனையைப் பாராட்டி அவருக்கு கனகாபிஷேகம் நடத் தினார் நித்தி. அதற்காக ஆதீனக் கணக்கில், தங்கக் காசுகள் வாங்கப் பட்டன. மொத்தம் 169 கிராம் எடை உள்ள காசுகளைக்கொண்டு சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வமாக நித்தியை நீக்கும் முன்பே, அவரது சீடர்கள் அந்தத் தங்கக்காசுகளை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவை எல்லாம் மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமானவை என்பதால், அவற்றை ஒப்படைத்தால்தான் தங்கக் கிரீடத்தையும் செங்கோலையும் தருவோம் என்று கூறியிருக்கிறோம்.

அதுபோல, மதுரை ஆதீனம் முன்பு பயன்படுத்திய சிவப்பு நிற பென்ஸ் காரை, நித்தியின் ஆட்கள் சர்வீஸுக்கு விடுவதாக எடுத்துச் சென்றனர். ஐந்து மாதங்​களாகியும் அந்தக் கார் திரும்பவும் வர வில்லை. எனவே, அதையும் ஒப்படைத்​தால்தான் கணக்கு நேர் ஆகும் என்று ஆதீனம் உறுதியாகச் சொல்லி விட்டார்' என்றார்.

இதுபற்றி, ரிஷி தயானந்திடம் கேட்டபோது, 'நித்தியின் பட்டாபிஷேக விழாவுக்குத் தேவையான கிரீடம், செங்கோல், கணையாழிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் பிடதி ஆசிரமத்தின் செலவில்தான் வாங்கப்பட்டன. அருணகிரியின் கனகா பிஷேகத்துக்கான தங்கக்காசுகளும் பிடதி ஆசிரமத்தின் பணத்தில் இருந்துதான் வாங்கப்பட்டன. இங்கே வாங்கும் எந்தப் பொருளுக்கும், பிடதி ஆசிரமத்தின் பெயரில் பில் போடக்கூடாது என்று ஆதீனம் கேட்டுக்கொண்டதால், தங்கக்காசுகளுக்கு ஆதீனப் பெயரில் பில் வாங்கினோம். அதை வைத்துக்கொண்டு, தங்கக்காசுகளைக் கேட்பது முறையல்ல. தங்கக்கிரீடத்தையும் செங்கோலையும் ஆதீனம் தர மறுப்பது பற்றி, விளக்குத்தூண் போலீஸில் புகார் செய்திருக்கிறோம். அதுபோலவே, 'பென்ஸ் காரை ஒப்படைத்துவிட்டு எடுத்துப் போங்க...’ என்று எங்களது மூன்று பைக்குகளைத் தர மறுக்கிறார்கள். சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள இன்வெர்ட்டர்கள் உள்ளிட்ட சில பொருட்களையும் எடுக்க விடவில்லை. இவர்களைப் போல், நாங்களும் கறாராகக் கணக்குப் பார்த்தால், ஆதீனத்தில் சுவரையும் தரையையும் கூட பெயர்க்க வேண்டியது வரும்'' என்றார் காட்டமாக.

பெண் ஆசை, பொன் ஆசையைத் துறந்தவர்கள்தான் சாமியார்கள் என்று எவன் சொன்னது?

No comments:

Post a Comment